அஹ்லுஸ்ஸுன்னாவின் அகீதாவிலிருந்து – 10

بسم الله الرحمن الرحيم

அல்லாஹ், அவனைப்பற்றி எங்களுக்கு எப்படி  வர்ணித்தானோ அப்படியே நாம் ஈமான் கொள்வது எங்களுக்கு மிக மகத்தான பிரதிபலன்களைப் பெற்றுத்தருகின்றன.

முதலாவது: கவலையான சந்தர்ப்பங்களிலும் சந்தோஷமான சந்தர்ப்பங்களிலும்;  அல்லாஹ் அல்லாதவைகளை வணங்காது அல்லாஹ்வை மாத்திரம் வணங்க வழிவகுக்கின்றது.

இரண்டாவது: அல்லாஹ்வின்  அழகிய பெயர்களும் அவனின் உயர்ந்த பண்புகளும் எவைகளைப் பொதிந்துள்ளனவோ அப்படியான முறையில் அல்லாஹ்வை விரும்புவதற்கும் அவனை கண்ணியப்படுத்துவதற்கும் வழிவகுக்கின்றது.

மூன்றாவது: அல்லாஹ் எவைகளை ஏவினானோ அவைகளை எடுத்தும் அவன் எவைகளைவிட்டும் எங்களைத்தடுத்தானோ அப்படிப்பட்ட விடயங்களைத் தவிர்ந்தும் உரிய முறையில் அல்லாஹ்வை வணங்க வழிவகுக்கின்றது.

36.   அல்முகீத் - கண்காணிப்பவன் -  (அன்னிஸா: 85)

37.   அல்ஹஸீப் - விசாரணை செய்பவன் - (ஆலு இம்ரான்: 173)

38.   அல்ஜமீல் - மிக அழகானவன் - (முஸ்லிம்: 91)

39.   அல்கரீம் - கண்ணியமானவன் - (அல்இன்பிதார்: 06)

40.   அர்ரகீப் - கண்காணிப்பவன் - (அல்மாஇதா: 117)

அல்லாஹ்வின் அனைத்துப் பெயர்களும் மிக அழகானவையும் அழகில் உயர் நிலையை அடைந்தவையுமாகும். அவ்வகை  அழகில் உள்ளவைதான்:

முதலாவது: அல்லாஹ்வின் பெயர்களில் புகழை அறிவிக்காத ஒரு பெயர்கூடக் கிடையாது.

இரண்டாவது: அல்லாஹ்வின் பெயர்கள் வெறும் பெயர்கள் மாத்திரம் கிடையாது. மாறாக, அவைகள் அல்லாஹவின் பெயர்களும் பண்புகளுமாகும்.

மூன்றாவது: அல்லாஹ்வின் ஒவ்வொரு பெயரும்; மிகப் பூரணமான, வெளிப்படையான, மிக கண்ணியமான பண்புகளை அறிவிக்கின்றன.

நான்காவது: அல்லாஹ் அவனின் பெயர்கள் மூலம் அவனிடம் பிரார்த்தனை செய்யும்படி ஏவியுள்ளான். ஏனெனில், அவைகள் அல்லாஹ்வை நெருங்கும் சாதனங்களாகும். இன்னும், அப்பெயர்களை மனனமிடுபவர்களையும் அவைகளின் கருத்துக்களைத் தேடுபவர்களையும் அல்லாஹ் விரும்புகிறான். இன்னும், சுவனத்தில் நூழைவிக்கிறான்.

ஐந்தாவது: அல்லாஹ்வின் பெயர்கள் அல்குர்ஆனிலும் அஸ்ஸுன்னாவிலும் கூறப்பட்டுள்ளன.

41.   அல்முஜீப் - பதிலளிப்பவன் - (ஹூத்: 61)

42.   அல்வாஸிஉ - விசாலமானவன் - (அல்பகரா: 247)

43.   அல்ஹகீம் - ஞானம்மிக்கவன் - (அல்ஹஷ்ர்: 24)

44.   அல்வதூத் - மிக்க நேசிப்பவன் - (அல்புரூஜ்: 15)

45.   அல்மஜீத் - கீர்த்திமிக்கவன் - (அல்புரூஜ்: 15)

நாம் அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் அனைத்தும் படைக்கப்படாதவை என்று ஈமான் கொள்வோம்.

ஒருமுறை யஃகூப் அத்தவ்ரகி என்பவர்: "அல்குர்ஆன் படைக்கப்பட்ட ஒன்று” என்று கூறுகின்ற மனிதன் பற்றி இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் கேட்டார். அப்போது இமாம் அவர்கள் யார் அல்லாஹ்வின் அறிவும் அவனின் பெயர்களும் படைக்கப்பட்டது என்று கூறுகிறாரோ அவர் காபிராவார். மேலும், ஆலு இம்ரான் 61ம் வசனத்தைக் கூறிவிட்டு இவ்வசனம் பேசுவது குர்ஆனைப்பற்றியல்லவா? என வினவிவிட்டு, மேலும் யார்; அல்லாஹ்வின் அறிவும் அவனின் பெயர்களும் படைக்கப்பட்டது என்று கருதுகிறாரோ அவர் காபிராவார். இது விடயத்தில் சந்தேகப்பட வேண்டிய அவசியம் கிடையாது என்று பதில் கூறினார்கள். (இமாம் ஆஜுரி அவர்களின் அஷ்ஷரீஆ: 170)

அதேபோல், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: "அல்லாஹ்வே! உனக்குரிய அனைத்துப் பெயர்களைக் கொண்டும் நான் உன்னிடம் கேட்கிறேன்...” என்று பிராத்தித்தார்கள். (அஹ்மத், இப்னு ஹிப்பான்) ஆகவே, அல்லாஹ்வின் பெயர்கள் படைக்கப்பட்ட ஒன்றாக இருந்தால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் இப்படிப் பிராத்தனை செய்திருக்கமாட்டார்கள்.

இதன் காரணமாக நாங்கள் அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் அனைத்தும் மனிதன் வைக்காத, அல்லாஹ்வே அவனுக்கு வைத்த பெயர்கள் என்றும் அவைகள் மூலம் அவன் யதார்தமாகப் பேசினான் என்றும், அவனின் பெயர்களும் பண்புகளும் அறிவும் படைக்கப்படாதவையென்றும் ஈமான் கொள்வோம். இதுவே அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தின் அகீதாவாகும்.

-     இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-     அஹ்ஸன் இப்னு அபீபக்கர்