ரியாளுஸ்ஸாலிஹீன் விளக்கவுரை – 06

بسم الله الرحمن الرحيم

நிய்யத்

நிய்யத் என்ற வார்த்தையின் விளக்கம்

அரபு மொழி அடிப்படையில் நிய்யத் என்ற வார்த்தைக்கு நாடுதல், ஒரு விடயத்தைச் செய்வதற்கு உறுதிகொள்ளுதல் போன்ற கருத்துக்கள் வழங்கப்படுகின்றன. மார்க்க அடிப்படையில் நிய்யத் என்ற வார்த்தையின் விளக்கம் ஒவ்வொரு மத்ஹபைப் பொறுத்தும் வேறுபட்டுக் காணப்படுகின்றது.

மாலிகி மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்கள் நிய்யத்துக்கு வரைவிலக்கணம் கூறும்போது: “அல்லாஹ்வுக்குரிய கடமைகளைச் செய்வதற்குப் பணிக்கப்பட்ட மனிதர்கள் அல்லாஹ் ஏவியவற்றைச் செய்ய நாடுவதாகும்” என்று கூறுகின்றார்கள்.

ஹனபி மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்கள் கூறும்போது: “ஒரு செயலை நிறைவேற்றுகின்ற விடயத்தில் அல்லாஹ்வுக்கு வழிப்படுவதையும் அவனிடம் நெருங்குவதையும் நாடுவதாகும்” என்று நிய்யத்துக்கு விளக்கம் கூறியுள்ளார்கள்.

ஷாபிஇ மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்கள் கூறும்போது: “பர்ளான ஒரு வணக்கத்தை அல்லது, ஏனைய வணக்கங்களைச் செய்வதற்கு உள்ளத்தில் உறுதியெடுத்தல்” என்பதே நிய்யத்தாகும் என்று வரைவிலக்கணம் கூறியுள்ளார்கள்.

ஹன்பலி மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்கள் கூறும்போது: “அல்லாஹ்விடம் நெருக்கத்தைத் தேடுவதற்காக வேண்டி ஒரு வணக்கத்தைச் செய்வதில் உள்ளத்தில் உறுதியெடுத்தல்” நிய்யத்தாகும் என்று கூறுகின்றார்கள்.

இந்நான்கு விளக்கங்களும் ஒரே கருத்தையே உள்ளடக்கியிருக்கின்றன என்பதை நாம் அவதானிக்கலாம். இவற்றில் ஹன்பலி மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்கள் கூறிய வரைவிலக்கணத்தை எமது அறிஞர்கள் சிறந்த வரைவிலக்கணமாகத் தெரிவு செய்துள்ளார்கள்.

நிய்யத்தின் இடமும் அதன் அவசியமும்

நிய்யத்தின் இடம் உள்ளமாகும். எல்லா நல்ல காரியங்களிலும்  நிய்யத்திற்கு நாவில் எந்தவிதப் பங்குமில்லை. எனவேதான் தொழுகை, நோன்பு, ஹஜ், வுழூ போன்ற நற்காரியங்களைச் செய்யும்போது எவராவது நிய்யத்தை நாவால் மொழிந்தால் அவர் பித்அத்வாதியாகவும் அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் இல்லாத ஒன்றைக் கூறியவராகவும் கருதப்படுவார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வுழூ, தொழுகை, தர்மம், நோன்பு, ஹஜ் ஆகிய வணக்கங்களைச் செய்பவர்களாக இருந்தார்கள். ஆனால், அவர்கள் நிய்யத்தை மொழியாதவர்களாக இருந்தார்கள். எனது இரட்சகனே! நான் வுழூச் செய்வதற்கு நிய்யத் வைத்துள்ளேன், எனது இரட்சகனே! நான் தொழுவதற்கு நிய்யத் வைத்துள்ளேன், எனது இரட்சகனே! நான் தர்மம் செய்தவற்கு நிய்யத் வைத்துள்ளேன், எனது இரட்சகனே! நான் நோன்பு நோற்க நிய்யத் வைத்துள்ளேன், எனது இரட்சகனே! நான் ஹஜ் செய்தவற்கு நிய்யத் வைத்துள்ளேன் என்று அவர்கள் கூறக்கூடியவர்களாக இருக்கவில்லை. ஏனென்றால், நிய்யத்தின் இடம் உள்ளமாகும். உள்ளத்தில் இருப்பவற்றை அல்லாஹ் நன்கறிவான். அவனுக்கு எந்த ஒன்றும் மறைந்துவிடாது.

அல்லஹுத்தஆலா கூறுகின்றான்: “(நபியே!) 'நீங்கள் உங்கள் உள்ளங்களில் இருப்பவற்றை மறைத்தாலும் அல்லது அவற்றை வெளிப்படுத்தினாலும் அதனை அல்லாஹ் அறிந்துகொள்வான்' என்று கூறுங்கள்”. (ஆலுஇம்ரான்: 129)

அனைத்து வணக்க வழிபாடுகளிலும் நிய்யத்தை உளத்தூய்மையுடையதாக அமைத்துக் கொள்வது ஒரு மனிதனுக்கு அவசியமாகும். அவனுடைய வணக்கத்தின் மூலம் அவன் அல்லாஹ்வினது கூலியையும் மறுமை வாழ்க்கைகையும் அன்றி வேறெதனையும் நாடக்கூடாது. இதனையே அல்லாஹ் பின்வரும் வசனத்தில் கட்டளையிட்டுள்ளான்: “மார்க்கத்தை அவனுக்கே தூய்மைப்படுத்தியவர்களாக அல்லாஹ்வை வணங்குவதற்கும் தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தை கொடுத்து வருவதற்குமே அன்றி அவர்கள் ஏவப்படவில்லை. இதுவே நேரான மார்க்கமாகும்”. (அல்பய்யினா: 05)

 எனவே அனைத்து வணக்க வழிபாடுகளிலும் நிய்யத்தை உள்ளத்தில் கொண்டு வருவது அவசியமாகும்.

அல்லாஹ் அடியானின் நிய்யத்தை அறியக்கூடியவனாக இருக்கின்றான். சிலவேளை மனிதர்களுக்கு முன்பாக ஒருவர் ஸாலிஹான அமலைச் செய்வதுபோல் காண்பிக்கலாம். ஆனால், அது ஸாலிஹான அமலாக இருக்காது. ஏனென்றால், அவரது நிய்யத் மனிதர்களுக்கு காண்பிப்பதேயாகும். உள்ளத்தில் இருப்பவற்றை அல்லாஹ் நன்கறிந்து கொள்வான். மறுமையில் ஒவ்வொருவரினதும் உள்ளத்தில் இருந்த நிய்யத்தை வைத்தே அல்லாஹ் கூலி வழங்குவான். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “அந்நாளில் இரகசியங்கள் வெளிப்படும்”. (அத்தாரிக்: 09)

மேலும், அவன் கூறுகின்றான்: “(அந்நாளில்) இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது”... (அல்ஆதியாத்: 10)

எனவே, மறுமை நாளில் எமது உள்ளங்களில் இருப்பவற்றைப் பொறுத்தே எமது கூலியும் தண்டனையும் அமையும்.

நிய்யத்தின் சிறப்பு

நிய்யத்தின் மூலம் ஒரு மனிதன் பல சிறப்புக்களை அடைந்து கொள்வான். அவற்றை நாம் பின்வரும் இரு ஹதீஸ்களின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக அல்லாஹ் உங்களது தோற்றங்களையோ உங்களது செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, அவன் உங்களது உள்ளங்களையும் நற்காரியங்களையுமே பார்க்கின்றான்”. (முஸ்லிம்)

நிச்சயமாக அல்லாஹ் மனிதனது நிறம் கறுப்பா? சிவப்பா? என்று பார்க்கமாட்டான். அவன் நெட்டையானவனா? அல்லது குட்டையானவனா? என்றும் பார்க்கமாட்டான். மேலும், அவன் செல்வந்தனா? அல்லது ஏழையா? என்றும் பார்க்கமாட்டான். மாறாக, அல்லாஹ் அடியானுடைய உள்ளத்தையே பார்ப்பான். அது உளத்தூய்மையுடைய உள்ளமா? அல்லது, முகஸ்துதியுடைய உள்ளமா? என்பதையே பார்ப்பான். எனவே, உள்ளத்தில் ஏற்படக்கூடிய நிய்யத்தைப் பொறுத்தே அல்லாஹ்வினது கூலி அமையும் என்பதனை இந்த நபிமொழி எங்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளது.

மற்றொரு ஹதீஸில் அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் எழுதியுள்ளான். பின்பு அவன் அவற்றைத் தெளிவுபடுத்தினான். எவர் ஒரு நன்மையைச் செய்ய நாடி அதனைச் செய்யவில்லையோ அவருக்கு அல்லாஹ் அவனிடத்தில் ஒரு பூரண நன்மையை எழுதுவான். அவன் ஒரு நன்மையை நாடி அதைச் செய்தால் அல்லாஹ் அவனுக்குப் பத்து நன்மைகள் முதல் எழுநூறு மடங்கு நன்மைகள் வரை பின்பு அதனையும் பன்மடங்காக்கி எழுதுவான். எவர் ஒரு தீங்கைச் செய்ய நாடி அதனை அவர் செய்யவில்லையோ அவருக்கு அல்லாஹ் அவனிடத்தில் பூரண நன்மையை எழுதுவான். அவன் ஒரு தீங்கை நாடி அதைச் செய்துவிட்டால் அல்லாஹ் அவனுக்கு ஒரு தீங்கை மாத்திரமே எழுதுவான்”. (புஹாரி)

நல்ல நிய்யத்திற்கு கிடைக்கும் பிரதிபலனை நாம் இந்த ஹதீஸிலிருந்து புரிந்து கொள்ளலாம். எனவே, அடியானுடைய நிய்யத்தை வைத்தே அவனது கூலிகளும் அமையும்.

-    இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-    அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்