சுத்ரா பற்றித் தெரிந்து கொள்வோம் – 02

بسم الله الرحمن الرحيم

சுத்ராவின் உயரம்

சுத்ராவின் உயரம் தொடர்பாக இமாம் இப்னு குதாமா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அல்முக்னி (3/82) எனும் நூலில் கூறும்போது: "வெளிப்படையான அமைப்பில் (பார்க்கையில்) நபியவர்கள் (ஒட்டகத்தின் மீது அமர்வதற்காகப் பயன்படுத்தும்) இருக்கை அளவுக்கான ஒன்றை சுத்ராவாக எடுத்துக் கொண்டது அந்தளவிலான ஒன்றை சுத்ராவின் போது ஆக்கிக் கொள்வற்கேயாகும். (மாற்றமாக), அளவை நிர்ணயம் செய்வதற்காகவல்ல. ஏனெனில், நபியவர்கள் சுத்ராவை பிரயாணத்தின் இருக்கை அளவுக்குக் கூறினாலும் பிரயானத்தின் இருக்கையானது நீளம், குட்டை என்ற அமைப்பில் வேறுபடுகின்றது. சில சமயங்களில் அது ஒரு முழம் அளவுடையதாகவும் வேறு சில சமயங்களில் அதைவிடக் குறைவான அளவுடையதாகவும் காணப்படும். எனவே, ஒரு முழமளவிற்கு நெருக்கமான அளவுடையதே சுத்ராவாக எடுப்பதற்குப் போதுமானதாகும். அல்லாஹ் மிக அறிந்தவன்” என்கிறார்கள்.

சுத்ராவின் அகலம்

சுத்ராவின் அகலம் எந்தளவுடையதாக இருக்க வேண்டும்? என்பது தொடர்பாக இமாம் இப்னு குதாபா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அல்முக்னி (3/83) எனும் நூலில் பின்வருமாறு கூறுகின்றார்கள்: "(சுத்ராவுடைய) அகலம், ஒடுக்கம் ஆகிய தன்மைகளை வரையறுக்கக்கூடிய எந்த ஓர் அளவையும் நாங்கள் அறிந்ததில்லை. எனவே, (சுத்ராவானது) ஈட்டி, அம்பு போன்ற அகலம் (குறைந்ததாகவும்) அல்லது, சுவர் போன்று அகலம் (கூடியதாகவும்) இருக்கலாம்”.

எனவே, சுத்ராவுக்காக எடுக்கப்படும் பொருளானது தொழுகையாளியைக் கடந்து செல்ல முற்படுபவருக்கு வித்தியாசமாகத் தென்படக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதைக் கவனத்திற் கொள்க!

குறிப்பு: சுத்ராவைப் பேண வேண்டும் என்ற நோக்கில் இன்று சில பள்ளிவாசல்களில் சுத்ராக்கள் செய்து வைக்கப்பட்டள்ளன. இப்படியான அமைப்பு நபிவழிக்கு மாற்றமானதாகும். ஏனெனில், சுத்ராவைப் பேணுவது தொடர்பாக வழியுறுத்திய நபியவர்கள் அதனைப் பேணுவதற்கான ஏற்பாடுகள் எதனையும் செய்து வைக்கவில்லை. மாற்றமாக, நபியவர்களும் ஸகாபாக்களும் தூண்கள் மற்றும் சுவர்கள் போன்றவற்றை நோக்கியே தொழுதுள்ளார்கள். எனவே, இது விடயத்தில் நபியவர்களினதும் ஸகாபாக்களினதும் வழிகாட்டல் எமக்குப் போதுமானதாகும். அப்படித்தான் அவசியம் சுத்ராவுக்காகப் பயன்படுத்த ஏதாவது ஒன்றை ஏற்படுத்த வேண்டிய தேவையை நபியவர்கள் கண்டிருந்தால் நிச்சயமாக அவர்கள் அதற்கான ஏற்பாட்டைச் செய்திருப்பார்கள்.

மற்றொரு புறத்தில், சுத்ராவைப் பேணுவதற்காக இன்று பள்ளிவாசல் நிரம்பத் தயார் செய்யப்பட்டு வைத்திருக்கக்கூடிய மரக் குற்றிகளில் மார்க்கத்துக்கு முரணான சில அம்சங்கள் பொதிந்து காணப்படுகின்றன. அந்தவிதத்தில் போதிய அளவு உயரமின்மை, அளவுக்கதிகமான வேலைப்பாடுகள் என சிலவற்றை எடுத்துக்காட்டலாம். அதிலும் குறிப்பாக சுத்;ராவுக்காகச் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களின் உருவமைப்பு பிற்பட்ட காலங்களில் சிலைவணக்கத்திற்கு இட்டுச் சென்று விடுமோ என்று அச்சம் கொள்ளப்படுகின்றது. காரணம், அப்பொருட்களில் தலைபோன்ற ஓர் உருவமைப்பும் மேனி போன்ற மற்றோர் அமைப்பும் இணையக் காணப்படுகின்றது. தொலைவில் இருந்து பார்ப்பவர்கள் அதிலும் குறிப்பாக மார்க்க அறிவில்லாதவர்கள் மற்றும் சிறார்கள் ஏதோ சிலை போன்ற ஒன்றுக்கு சுஜூது செய்கிறார்கள் என்று எண்ணுவதற்கு வாய்ப்புள்ளது. அப்படித்தான் அவர்கள் தற்போது எண்ணாவிட்டாலும் காலப்போக்கில் ஷைத்தானின் வழி சறுகவைக்கும் முயற்சியால் ஒரு சமுகம் மீண்டும் சிலைவணக்கத்திற்குத் திரும்புவதற்கும் வாய்ப்புள்ளது. அல்லாஹ் எம்மைப் பாதுகாக்க வேண்டும்.

-    இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-    அபூஹுனைப் அஸ்ஸைலானி