அஹ்லுஸ்ஸுன்னாவின் அகீதாவிலிருந்து – 09

بسم الله الرحمن الرحيم

21. அல்அலீம் - நன்கறிந்தவன் - (அல்ஹதீத்: 03)

22. அல்காபிழ் - பற்றிப்பிடிப்பவன் - (அபூதாவுத்: 3450)

23. அல்பாஸித் - விசாலப்படுத்துபவன் - (அபூதாவுத்: 3450)

24. அல்ஹாபிழ் -  பாதுகாவலன் - (யூஸுப்: 64)

25. அர்ராஸிக் - வாழ்வாதாரம் அளிப்பவன் - (அபூதாவுத்: 3450)

"அல்லாஹ்வுக்கு தொண்ணூற்றொன்பது பெயர்கள் உள்ளன. அவைகளை யார் கணக்கிட்டுக் கொள்கிறாரோ, அவர் சுவனம் நுழைவார்” என்ற ஹதீஸின் கருத்து ஒரு தாளில் அவைகளை எழுதி மனனமாகும் வரை மீட்டுவதல்ல. இன்னும், அவைகளைப் பாட்டுப்பாடுவது போன்று பாடுவதுமல்ல. மாறாக, அதன் கருத்து:

01.  அவைகளின் சொற்களையும் எண்ணிக்கைகளையும் தேடிப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

02.  அதன் கருத்துக்களையும் அவை அறிவிக்கக் கூடியவைகளையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

03.  அவைகள் மூலம் பிராத்திக்க வேண்டும். அல்லாஹ்வின் பெயர் மூலம் பிரார்த்தனை செய்வதற்கு இரு முறைகள் உள்ளன. உதாரணமாக 'கப்பார்' என்ற வார்த்தையைக் கொண்டு பிரார்த்திக்கும் போது:

01. யா கப்பார்! அதிகம் மன்னிப்பவனே! என்னை மன்னிப்பாயாக! என்று பிராத்திக்க வேண்டும்.

02. அல்லாஹ் கப்பார் ஆக இருக்கிறான். ஆகையால் மன்னிப்பைப் பெற்றுத்தரும் செயல்களைச் செய்ய வேண்டும். (முஹம்மத் இப்னு ஹாலிஹ் அல்உஸைமீன் ரஹிமஹுல்லாஹ்) இப்படியே நாமும் இந்த ஹதீஸை விளங்குவோம்.

26. அல்கதீர் - அனைத்திலும் ஆற்றல் பெற்றவன் - (புஹாரி: 6398)

27. அல்லதீப் - நுட்பமானவன் - (அல்முல்க்: 14)

28. அல்ஹபீர் - நன்கறிந்தவன் - அல்முல்க்: 14)

29. அல்ஹலீம் - சகிப்புத்தன்மையுடையவன் - (அத்தகாபுன்: 17)

30. அல்அழீம் - மிக மகத்தானவன் - (அல்பகரா: 255)

31. அல்கபூர் - மிக்க மன்னிப்பவன் - (அல்புரூஜ்: 15)

32. அஷ்ஷகூர் - நன்றி செலுத்துபவன் - (அத்தகாபுன்: 17)

33. அல்அலீ - மிக உயர்ந்தவன் - (அல்பகரா: 255)

34. அல்கபீர் - மிகப்பெரியவன் - (அர்ரஹ்து: 09)

35. அல்ஹபீழ் - கண்கானிப்பவன் - (அல்ஹூத்: 57)

எங்களுக்கு அல்லாஹ் என்ற ஒருவன் இருக்கிறான் என்பதை நான்கு விடயங்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

01.  இயற்கைத் தன்மையின் மூலம்

02.  புத்தியின் மூலம்

03.  மார்க்கத்தின் மூலம்

04.  உணர்வு ரீதியாக இப்படி 04 முறைகள் மூலம் அறியலாம். இவை ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்தனியாகக் காண்போம்.

01. இயற்கைத் தன்மையின் மூலம் அறிதல்

ஒவ்வொரு படைப்பும் எந்த ஒரு முன்னறிவுமின்றி தன்னைப் படைத்த ஒருவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையுடன் பிறக்கின்றது. எமக்கு ஏதாவது ஆபத்து ஏற்படும் போது உடனே எம்மை அறியாமலே எங்கள் முகங்களும் உள்ளங்களும் வானத்தின் பக்கம் உயர்வதை அவதானிக்கலாம். இப்படியான நிகழ்வுகள் இயற்கையிலே அல்லாஹ் ஒருவன் இருக்கிறான். அவன் தான் எம்மைப் படைத்தான் என்பதை அறிவிக்கின்றன. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒருமுறை  கூறும்போது: "பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் அல்லாஹ்வை ரப்பாக ஏற்றுக் கொள்ளும் சுபாவத்தில் பிறக்கின்றது. அவைகளின் பெற்றோர்களே யூதனாக அல்லது கிருஸ்தவனாக அல்லது நெருப்புவணங்கியாக மாற்றுகிறார்கள்” என்று கூறினார்கள்.

எனவே, அல்லாஹ் என்ற ஒருவன் இருக்கிறான் என்பதை இயற்கையாகவே எம்மால் அறிய முடியும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

02. புத்தி ரீதியாக அறிதல்

நாம் படைப்புகளை சற்று சிந்திக்கும் போது அவைகளுக்கு ஒரு படைப்பாளன் இருக்க வேண்டும் என்றும் அவைகள் ஒருபோதும் தானாக உண்டாகுவதில்லை என்றும் எதுவும் தன்னைத்தானே படைத்துக்கொள்ள சக்தி பெறமாட்டாது என்றும் எம் புத்தி மூலம் அறிய முடியும். அல்லாஹ் கேட்கிறான் (ஸுரதுத் தூர்: 35-37) "எந்தப் பொருளுமின்றி அவர்கள் படைக்கப்பட்டவர்களா அல்லது, அவர்கள் தான் படைக்;கக்கூடியவர்களா அல்லது, அவர்கள் வானங்கள் பூமியை படைத்தனரா” என்று கேட்கிறான்.

எனவே, எம் புத்தியும் இப்பிரபஞ்சத்தை படைத்த ஒருவன் இருக்கிறான் என்பதை ஏற்றுக் கொள்கின்றது. அவன் தான் அல்லாஹ் என்பதையும் ஏற்றுக் கொள்கின்றது.

03.  மார்க்கத்தின் மூலம் அறிதல்

வானத்திலிருந்து இறக்கப்பட்ட ஒவ்வொரு வேதமும் இதுபற்றிப் பேசுவதை எமக்கு அவதானிக்க முடியும். இன்னும், அவ்வேதங்களில்  படைப்பினங்களுக்கு உள்ள சீர்திருத்தம், அதேபோல் அவைகளில் உள்ள ஒன்றுக்குகொன்று முரண்பாடற்ற சட்டங்கள், மற்றும் அவைகளிள் உள்ள நவீனம் உண்மைப்படுத்தும் தகவல்கள் ஆகிய அனைத்தும் அல்லாஹ் ஒருவன் இருக்கிறான் என்பதை அறிவிக்கின்றன. எமக்கு இதன் மூலமும் அல்லாஹ்வை அறிய முடியும்.

04.  புலன்களால் அறிதல்

அல்லாஹ் ஒருவன் இருக்கிறான் என்பதை துஆக் கேட்பவனின் துஆ ஏற்றுக் கொள்ளப்படுகின்றதன் மூலமும் கஷ்டத்தில் இருப்பவனின் கஷ்டம் நீங்குகின்றதன் மூலமும் அறிய முடியும்.

இதுபற்றி புஹாரியில் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்ட செய்தியாவது: "ஒரு முறை வெள்ளிக்கிழமையன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜுமுஆ உரையாற்றிக் கொண்டிருக்கும் போது ஒரு நாட்டுப்புற அரபி சமுகம் தந்து: “அல்லாஹ்வின் தூதரே! சொத்துக்கள் அழிந்துவிட்டன. குடும்பங்கள் பசிபட்டினியில் உள்ளனர். எனவே, எங்களுக்காக அல்லாஹ்விடம் துஆக் கேளுங்கள்” என்றார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது இரு கைகளையும் உயர்த்தி துஆக் கேட்டார்கள். அப்போது  மேகங்கள் மலைகள் போன்று ஒன்று சேர்ந்து நீரைக் கொட்டின. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிம்பரிலிருந்து இறங்கும் போது அவரது தாடியிலிருந்து நீர் வடிந்துகொண்டிருந்தது. அடுத்த ஜுமுஆவில் அதே நாட்டுப்புற அரபி எழுந்து: “அல்லாஹ்வின் தூதரே! கட்டிடங்கள் இடிந்துவிட்டன. சொத்துக்கள் மூழ்கிவிட்டன. எங்களுக்காக அல்லாஹ்விடத்தில் துஆக் கேளுங்கள்” என்று வேண்டினார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது கரத்தை உயர்த்தி: “அல்லாஹ்வே! எங்களைச் சூழ மழையை இறக்குவாயாக! எங்களுக்குப் பாதிப்பாக அதை ஆக்கிவிடாதே!” என்று பிராத்தித்தார்கள். அப்போது அம்மழை மேகங்கள்  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்தத் திசையை சுட்டிக் காட்டினார்களோ அத்திசையை நோக்கிச் சென்றன. எனவே, இச்சம்பவமும் அல்லாஹ் ஒருவன் இருக்கிறான் என்பதை எமக்கு உணர்த்துகின்றது.

-    இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-    அஹ்ஸன் இப்னு அபீபக்கர்