சுத்ரா பற்றித் தெரிந்து கொள்வோம் – 01

بسم الله الرحمن الرحيم

சுத்ரா என்ற அரபுப் பதத்திற்குத் தமிழில் தடுப்பு என்று சுருங்கக் கூறலாம். தொழக்கூடிய ஒருவர் சுத்ராவை எற்படுத்திக் கொள்வதானது, அவர் தனக்கு முன்னிலையில் தன்னை ஒருவரும் கடந்து செல்லாத விதத்தில் ஒன்றைத் தடுப்பாக ஏற்படுத்திக் கொள்வதாகும்.

தொழக்கூடிய ஒருவரைக் கடந்து செல்வதின் சட்டம்

தொழுகையாளியைக் கடந்து செல்வது ஹராமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "தொழுகையாளியைக் கடந்து செல்லக்கூடியவர் அதில் உள்ள பாவத்தை அறிந்து கொள்வாரானால் அவர் 40கள் தரித்துதிருப்பது கடந்து செல்வதை விடச் சிறந்ததாக இருக்கும்.” (புகாரி, முஸ்லிம்)

இந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்ட 40 என்ற எண்ணிக்கை தொடர்பாக அதன் அறிவிப்பாளர் அபுந்நள்ர் என்பவர் கூறும் போது: "அவர் 40 நாட்கள் என்றா அல்லது, 40 மாதங்கள் என்றா அல்லது, 40 வருடங்கள் என்றா கூறினார் என்பதை நானறியேன்” என்கிறார்.

இப்னு அப்தில் பர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அத்தம்ஹீத் என்ற தனது நூலில் கூறும் போது: "தொழக்கூடியவரைக் கடந்து செல்வது வெறுக்கத்தக்கது என்ற விடயத்தில் கருத்து வேறுபாடு கிடையாது. அவ்வாறு கடந்து செல்லும் போது தன்னைக் கடந்து செல்ல அனுமதிக்கின்றவரைவிட கடந்து செல்பவருக்கே அதிகளவான பாவம் கிடைக்கின்றது. இது தொடர்பான தடையை அவர்கள் இருவரும் அறிந்திருக்கும் காலமெல்லாம் இருவருமே பாவிகளாகத்தான் கருதப்படுவார்கள். அதிலும் குறிப்பாகக் கடந்து செல்பவர் வேண்டுமென்று இச்செயலில் ஈடுபட்டால் கடுமையான பாவத்திற்கு உள்ளாவார். இந்த விடயம் கருத்து வேறுபாடு அறிப்படாத விடயமாகும்” என்கிறார்கள்.

இப்னு ஹஸ்ம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மராதிபுல் இஜ்மா என்ற நூலில் கூறும் போது: "தொழக்கூடியவருக்கும் அவருடைய சுத்ராவுக்கும் மத்தியில் நடந்து செல்வது வெறுக்கத்தக்கது என்ற விடயத்தில் அறிஞர்கள் ஏகோபித்த கருத்தில் இருக்கிறார்கள்” என்கிறார்கள்.

குறிப்பு: அறிஞர்கள் தொழுகையாளியைக் கடந்து செல்வது வெறுக்கத்தக்கது என்று குறிப்பிட்டது குறித்த நடவடிக்கை ஹராமானது என்பதைக் குறிக்கின்றது என்று இப்னு ரஜப் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பத்ஹுல் பாரி என்ற தனது நூலில் கூறியுள்ளார்கள். ஏனெனில், முன்சென்ற அறிஞர்கள் ஹராமானதைக் குறிப்பதற்கு மக்ரூஹ் - வெறுக்கத்தக்கது - என்ற வாசகத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள். இவ்விளக்கத்தை நாம் முன்பு குறிப்பிட்ட இப்னு அப்தில் பர், இப்னு ஹஸ்ம் ரஹிமஹுமல்லாஹ் ஆகியோரின் கருத்துக்களில் இருந்து புரிந்து கொள்ள முடியும். அவர்கள் குறித்த செயலை மேற்கொள்வோருக்குப் பாவம் கிடைக்கும் என்றும் இயம்பியுள்ளார்கள். உண்மையில் வெறுமனே வெறுக்கத்தக்கது என்று மாத்திரம் எடுத்துக் கொண்டால் பாவம் கிடைக்கும் என்று கூறுவதில் அர்தமற்றுப் போய்விடும். ஏனெனில், ஹராமானதைப் புரிந்தாலே பாவம் கிடைக்கும் என்பதை நாம் விதியாகப் புரிந்து வைத்துள்ளோம்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

-    இன்ஷா அல்லாஹ் தொடரும்

-    அபூஹுனைப்