அல்அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை – 25

بسم الله الرحمن الرحيم

அல்லாஹுத்தஆலா அவனது அந்தஸ்துக்குத் தக்கவிதத்தில் சூழ்ச்சி செய்கின்றான் என்பதை உறுதி செய்யும் சான்றுகள்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “மேலும், (அவர்களைத் தண்டிக்க நாடினால், அவர்களை நழுவாது பிடிப்பதில்) அவன் மிக்க சூழ்ச்சி செய்பவன்.” (அர்ரஃது: 13)

இப்னுல் அஃராபி என்பவர் கூறும்போது: “(இவ்வசனத்தில் இடம்பெறும்) 'அல்மிஹால்' என்ற வார்த்தை சூழ்ச்சியைக் குறிக்கின்றது. அல்லாஹுத்தஆலா மிக்க சூழ்ச்சி செய்பவனுமாக இருக்கின்றான். மேலும், அல்லாஹ்வுடைய சூழ்ச்சியானது வெறுக்கத்தக்க ஒன்றை உரியவருக்கு அவர் உணராத விதத்தில் கொண்டு சேர்ப்பதாகும்” என்கிறார்.

இன்னும், அல்லாஹ் கூறுகின்றான்: “மேலும், (ஈஸாவை நிராகரித்த) அவர்கள் (அவரைக் கொலை செய்யச் சதி செய்தார்கள்.) (எனினும், அல்லாஹ் அவரை இரட்சித்துக் கொண்டு தங்களில் ஒருவனையே அவர்கள் கொலை செய்துவிடும்படி) அல்லாஹ்வும் (அவர்களுக்குச்) சதி செய்துவிட்டான். இன்னும், அல்லாஹ் சதி செய்பவர்களி(ன் சதியை முறியடித்துக் கூலி கொடுப்பவர்களி)ல் மிகச் சிறந்தவன்.” (ஆலுஇம்றான்: 54)

“அல்லாஹ்வும் (அவர்களுக்குச்) சதி செய்துவிட்டான்” என்ற வார்த்தை தொடர்பாக அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல்பவ்ஸான் அவர்கள் கூறும் போது: “அல்லாஹ் அவர்களைப் படிப்படியாகப் பிடித்து அவர்களின் சதிக்குத் தக்கவிதத்தில் கூலி வழங்கினான். அதன்படி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தோற்றத்தை அவர்களல்லாத ஒருவருக்கு வழங்கி ஈஸா அலைஹிஸ்ஸலாத்தைத் தன்பக்கம் உயர்த்திக் கொண்டான்” என்கிறார்கள்.

மேலும் கூறுகின்றான்: “இன்னும், (இது போன்றே) அவர்கள் ஒரு சூழ்ச்சி செய்தார்கள். நாமும் (நம் தண்டனையைக் கொண்டு அவர்களின் சூழ்ச்சியை முறியடிக்கச்) சூழ்ச்சி செய்தோம். அவர்களோ (அதனை) உணர்ந்து கொள்ளவில்லை.” (அந்நம்லு: 50)

இவ்வசனத்தில் இடம்பெறும் “நாமும் சூழ்ச்சி செய்தோம்” என்ற வார்த்தைக்கு விளக்கமளிக்க முற்பட்ட ஸாலிஹ் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்கள்: “அவர்களது அந்த செயலுக்கு நாம் கூலி வழங்கினோம். அதன் நிமித்தமாக நாம் அவர்களை அழித்தோம். எங்களது நபியைப் பாதுகாத்தோம்” என்கிறார்கள்.

பிறிதோர் இடத்தில் கூறும் போது: “(நபியே!) நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கின்றார்கள். நானும் (அவர்களுக்கெதிராக அதை முறியடிக்க) ஒரு சூழ்ச்சி செய்வேன்.” (அத்தாரிக்: 15,16)

இவ்வசனத்தில் இடம்பெறும் “நானும் ஒரு சூழ்ச்சி செய்வேன்” என்ற வாசகத்திற்கு ஸாலிஹ் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் விளக்கமளிக்கையில் : “நான் அவர்களைப் படிப்படியாகப் பிடிப்போன் அவர்களது சூழ்ச்சிக்காக அவர்களுக்குக் கூலி வழங்குவேன். மேலும், அவர்கள் உணராத விதத்தில் பொடுபோக்கில் வீற்றிருக்கும் போது நாம் அவர்களைப் பிடிப்போம்” என்கிறார்கள்.

அன்பார்ந்த வாசகர் நெஞ்சங்களே! மேற்கூறப்பட்ட திருக்குர்ஆன் வசனங்களில் அல்லாஹுத்தஆலா சூழ்ச்சி, சதி போன்ற வார்த்தைகளைக் கொண்டு வர்ணிக்கப்பட்டுள்ளான். இத்தகைய பண்புகள் அல்லாஹ்வின் அளவில் சேர்க்கப்பட்டுள்ளன என்பது எதார்த்தமானவை என்ற அடிப்படையிலாகும். சூழ்ச்சியானது மறைவான அமைப்பில் ஒருவர் மீது ஒன்றைக் கொண்டு சோர்ப்பதாகும். இதேபோன்ற கருத்தை சூழ்ச்சியைச் சுட்டிக்காட்டக்கூடிய அல்கைத், அல்முஹாதஆ போன்ற வார்த்தைகள் குறிக்கின்றன.

சூச்சியின் வகைகள்

சூழ்ச்சியை இரு வகைகளாகப் பிரிக்கலாம்.

1.   மோசமான சூழ்ச்சி: இவ்வகை சூழ்ச்சியானது உரியவருக்கல்லாமல் ஒன்றைச் சேர்ப்பதாகும்.

2.   அழகான சூழ்ச்சி: உரியவருக்கு ஒன்றைத் தண்டனை என்ற அமைப்பில் சேர்ப்பதையே இவ்வகை அமைப்பு குறிக்கும்.

இப்பிரிப்புக்களில் முதல் வகை இழிவுக்குரியதும் இரண்டாவது வகை புகழுக்குரியதுமாகும். இப்படியான சூழ்ச்சியை அல்லாஹ் செய்வது அவன் நீதத்தைக் கொண்டும் ஞானத்தைக் கொண்டும் புகழப்படுவதற்காகும். அவனே அநியாயக்காரனையும் பாவியையும் அவர்கள் எண்ணிப்பார்க்காத விதத்தில் பிடிப்பவன்.

மேலும், படைப்பினங்களுக்கு மத்தியில் தண்டனை என்ற அமைப்பில் சிலர் சிலரைப் பிடிப்பது ஆகுமானதாக இருக்கும் போது படைப்பாளனான அல்லாஹ்வுக்கு ஏன் அப்படித் தண்டனையைக் கொண்டு முடியாது?

குறிப்பு: சூழ்ச்சி செய்தல் மற்றும் சதி செய்தல் போன்ற வார்த்தைகள் அல்லாஹ்வின் செயல்கள் என்ற அமைப்பில் பொதுப்படையாகக் கூறப்பட்டுள்ளன. பொதுவாகச் செயல்கள் பெயர்களைவிட விசாலத் தன்மையுடையனவாகக் காணப்படுகின்றன. அதனால் தான் அல்லாஹ் தனது செயல்களைப் பொதுப்படையாகக் கூறியுள்ளான். ஆனால், அவைகளில் இருந்து பெயர்கள் உருவாக்கப்படமாட்டாது. உதாரணமாக அல்லாஹ் நாடுகின்றான் என்று கூறியுள்ளான். அதற்காக அதனில் இருந்து அல்முரீத், அஷ்ஷாஇ போன்ற பெயர்கள் உருவாக்கப்படுவதில்லை. அதேபோன்றே அல்லாஹ் சூழ்ச்சி செய்கிறான் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இச்சொற்களை வைத்து அல்லாஹ்வை அல்மாகிர், அல்காயித் என்று பெயர் சூட்டி அழைக்க முடியாது. ஏனெனில், பெயர் சூட்டப்பட்டவைகள் புகழத்தக்கவை இகழத்தக்கவை என இருவகைகளாகப் பிரிக்கப்படுகின்றன என்பதை நினைவில் கொள்க!

-    இன்ஷா அல்லாஹ் தொடரும்

-    அபூஹுனைப்