இஸ்லாத்தின் பார்வையில் மோதிரம் – 02

بسم الله الرحمن الرحيم

5. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இடது கையிலும் மோதிரத்தை அணிந்திருக்கிறார்கள். அதனை அவர்கள் தனது சுண்டு விரலிலேயே அணிந்திருந்தார்கள்.

ஸாபித் அல்புனானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த விரலில் மோதிரம் அணிந்திருந்தார்கள் என்று அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறித் தனது இடக்கையின் சுண்டு விரலை நோக்கி சைகை செய்தார்கள். (முஸ்லிம்)

6. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மோதிரத்தின் கல் பதிக்கும் இடமும் வெள்ளியிலானதாகவே இருந்தது.

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மோதிரம் வெள்ளியால் ஆனதாக இருந்தது. அதன் (கல் பதிக்கும்) இடமும் வெள்ளியில் ஆனதாகவே இருந்தது. (புஹாரீ)

இந்த ஹதீஸ்கள் யாவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மோதிரம் எந்த அமைப்பில் காணப்பட்டது, அதை எவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அணிந்திருந்தார்கள் என்பதை விளக்குகின்றன.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மோதிரத்தில் 'முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” என்ற வார்த்தை எந்த அமைப்பில் எழுதப்பட்டுள்ளது என்பது குறித்து இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்: 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மோதிரத்தில் கீழிருந்து மேல்நோக்கியே (முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்) எழுத்தப்பட்டிருந்தது என்று சில அறிஞர்கள் கூறிய கருத்தைப் பொறுத்தவரையில் அதாவது மூன்று வரிகளிலும் அல்லாஹ்வின் பெயர் உயரத்தில் இருந்ததாகவும் முஹம்மத் என்ற பெயர் கடைசியில் இருந்ததாகவும் சில அறிஞர்கள் கூறிய கருத்தைப் பொறுத்தவரையில் எந்த ஹதீஸ்களிலும் இதுபற்றிய தெளிவை நான் காணவில்லை. மாறாக, அல்இஸ்மாஈலீ என்பவரின் அறிவிப்பு இதன் வெளிரங்கமான கருத்துக்கு முரண்படுகின்றது. அந்த அறிவிப்பில் முஹம்மத் முதலாவது வரியில் இருந்ததாகவும் ரஸூல் இரண்டாவது வரியில் இருந்ததாகவும் அல்லாஹ் மூன்றாவது வரிசையில் இருந்ததாகவும் இடம்பெற்றிருக்கின்றது.” (பத்ஹுல் பாரீ: 10/341)

மோதிரம் அணிவது குறித்த மார்க்கத்தின் நிலைப்பாடு

மோதிரம் அணிவதன் சட்டம் என்னவென்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் மூன்று வகையான கருத்துக்கள் காணப்படுகின்றன.

முதல் கருத்து: மோதிரம் அணிவது சுன்னாவாகும். இக்கருத்தை இமாம் முனாவீ ரஹிமஹுல்லாஹ் அவர்களும் இப்னுல் அரபீ ரஹிமஹுல்லாஹ் அவர்களும் கூறியுள்ளார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மோதிரம் அணிந்ததாக வரக்கூடிய செய்திகளை இவர்கள் ஆதாரமாக முன்வைக்கின்றார்கள்.

இரண்டாவது கருத்து: சமூகத் தலைவர்கள் மோதிரம் அணிவது சுன்னாவாகும். அவரல்லாத ஏனையோர் மோதிரம் அணிவது ஆகுமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முத்திரையிடப்படாத கடிதங்கள் அரபியர்கள் அல்லாதவர்களிடம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதற்காகவே மோதிரம் அணிந்தார்கள். எனவே, தலைவர்கள் அணிவது சுன்னாவாகும். ஸஹாபாக்கள் அணிந்ததைப்போன்று ஏனையவர்கள் அணிந்து கொள்வது ஆகுமானதாகும் என்று இவர்கள் கூறுகின்றார்கள். இக்கருத்து அல்மவ்ஸூஅதுல் பிக்ஹிய்யா என்ற நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

மூன்றாவது கருத்து: மோதிரம் அணிவது சுன்னாவல்ல. மாறாக, அது ஆகுமான ஒரு விடயமாகும். இக்கருத்தை இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ், சஊதி பத்வாக் குழுவைச் சேர்ந்த அறிஞர்கள் சரிகண்டிருக்கின்றார்கள்.

சரியான கருத்து: மூன்றாவது கருத்தே மிகவும் சரியான கருத்தாகும். ஏனென்றால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆரம்பத்தில் மோதிரம் அணியக்கூடியவர்களாக இருக்கவில்லை. முத்திரையிடப்படாத கடிதங்களை அரேபியர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதற்காக வேண்டியே அவர்கள் மோதிரத்தை அணிந்து கொண்டார்கள். பின்பு ஸஹாபாக்களும் அணிந்து கொண்டார்கள். மோதிரம் அணிவது சுன்னாவாக இருப்பின் அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆரம்பமாகவே அணிந்திருப்பார்கள். ஸஹாபாக்களுக்கும் அதை வலியுறுத்தியிருப்பார்கள். அல்லாஹ் மிக அறிந்தவன்.

இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் மோதிரம் அணிவதன் சட்டம் குறித்து வினவப்பட்டபோது: 'அதில் குற்றம் இல்லை. என்றாலும் அதில் எச்சிறப்பும் இல்லை” என்று பதிலளித்தார்கள். (மஸாஇலு அபீதாவூத்: 262ம் பக்கம்)

சஊதி பத்வாக் குழுவைச் சேர்ந்த அறிஞர்கள் கூறுகின்றார்கள்:

'ஆண்கள் வெள்ளி மோதிரம் அணிவது தேவையின்போதோ தேவையல்லாதபோதோ கூடுமாகும்.” (பத்வா இலக்கம்: 4644)

குறிப்பு: மோதிரம் அணிவது ஆகும் என்பது நாம் விரும்பிய வகையில் விரும்பிய உறுப்புக்களுக்கு மோதிரம் அணிவது கூடும் என்பதைக் குறித்து நிற்காது. மாறாக, மோதிரம் அணிந்தவர் மார்க்கம் வழிகாட்டிய விதத்திலேயே அதை அணிந்து கொள்ள வேண்டும்.

மோதிரம் அணியப்பட வேண்டிய உறுப்பு

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது கையில்தான் மோதிரம் அணிந்ததாக அவர்களது மோதிரம் குறித்து வரக்கூடிய செய்திகளில் இருந்து நாம் புரிந்து கொள்ளலாம். எனவே, மோதிரம் கையில் அணியப்பட வேண்டிய ஓர் ஆபரணமாகும்.

மோதிரத்தை வலக்கரத்திலும் இடக்கரத்திலும் அணிய முடியும். இது அனைத்து அறிஞர்களின் ஒன்றுபட்ட முடிவாகும். எந்த அறிஞரும் குறித்த ஒரு கரத்தை சுட்டிக்காட்டி இக்கரத்தில் மோதிரம் அணிவதுதான் அவசியமாகும் என்று கூறவில்லை.

ஆனால், எக்கரத்தில் அணிவது மிகவும் சிறப்புக்குரியது என்பதிலேயே அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். இது விடயமாக அவர்களுக்கு மத்தியில் மூன்று விதமான கருத்துக்கள் காணப்படுகின்றன.

முதல் கருத்து: மோதிரத்தை இடது கரத்தில் அணிவது மிகச் சிறந்தது.

இக்கருத்தை ஹன்பலீ, மாலிகீ, ஹனபீ மத்ஹபைச் சார்ந்த அறிஞர்கள், இமாம்களான மாலிக், அஹ்மத், அபுல் வலீத் அல்பாஜீ, தாரகுத்னீ, இப்னு அபீ ராபிஃ ரஹிமஹுமுல்லாஹ் ஆகிய அறிஞர்கள் கூறியுள்ளனர்.

இவர்களுடைய ஆதாரங்கள்:

1.   ஸாபித் அல்புனானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த விரலில் மோதிரம் அணிந்திருந்தார்கள்”  என்று கூறி தனது இடக்கையின் சுண்டு விரலை நோக்கி சைகை செய்தார்கள். (முஸ்லிம்)

2. அபூபக்கர், உமர், உஸ்மான், அல்ஹஸன், அல்ஹுஸைன், இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹும் ஆகியோரும், அல்காஸிம், ஸாலிம் இன்னும் சில ஸலபுகளும் இடக்கரத்தில் மோதிரம் அணிந்ததாக இப்னு அபீஷைபா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது அல்முஸன்னப் என்ற நூலில் பதிவு செய்திருக்கின்றார்கள்

3. அதிகமாக மோதிரங்கள் முத்திரையிடப்படுவற்காகவே பயன்படுத்தப்படுகின்றன. இடது கையில் அணிவதாலே பலமான முறையில் முத்திரையிடலாம்.

4. வலக்கரத்தில் மோதிரம் அணிவது ராபிழாக்களின் அடையாளச் சின்னமாகும். அவர்களுக்கு மாற்றம் செய்வது விரும்பத்தக்கது.

இரண்டாவது கருத்து: வலக்கரத்தில் மோதிரம் அணிவது மிகச் சிறந்தது.

இக்கருத்தை ஷாபிஈ மத்ஹபைச் சார்ந்த அறிஞர்கள், இமாம் நவவீ, இப்னு ஹஜர் அல்ஹைதமீ, இப்னு ஹஜர் அல்அஸ்கலானீ, அல்பானீ ரஹிமஹுமுல்லாஹ் ஆகியோர் சரிகண்டுள்ளனர்.

இவர்களுடைய ஆதாரங்கள்:

1.   அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது வலக்கரத்தில் வெள்ளி மோதிரம் ஒன்றை அணிந்திருந்தார்கள். அதில் பொறிக்கப்பட்ட கல் அபீசீனியாவைச் சார்ந்ததாக இருந்தது. அதன் கல் தமது உள்ளங்கைப் பக்கம் அமையும்படி அணிந்திருப்பார்கள். (முஸ்லிம்)

2.   அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலது கரத்தில் மோதிரம் அணியக்கூடியவர்களாக இருந்தார்கள்.” (அஹ்மத்)

இமாம் புஹாரீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: “இது தொடர்பாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்ட செய்திகளில் இதுவே மிகச்சரியான செய்தியாகும்.”

இந்த ஹதீஸை அஷ்ஷெய்ஹ் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் முஹ்தஸருஷ் ஷமாஇல் என்ற நூலில் ஸஹீஹ் என்று கூறியுள்ளார்கள்.

3.   ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செறுப்பு அணிவதிலும் தலை முடி சீவுவதிலும் சுத்தம் செய்வதிலும் தங்களின் எல்லா விடயங்களிலும் வலப்புறத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை விரும்பக்கூடியவர்களாக இருந்தார்கள்.” (புஹாரீ)

மோதிரம் அணிவது ஓர் அலங்காரமாகும். எனவே, அதை வலக்கரத்தில் அணிவது விரும்பத்தக்கதாகும் என்று இந்த ஹதீஸை ஆதாரமாக வைத்து இந்த அறிஞர்கள் கூறியுள்ளனர்.

இக்கருத்தைக் கூறும் அறிஞர்கள் முதலாவது கருத்தைக் கூறிய அறிஞர்கள் முன்வைத்த ஆதாரங்களுக்குப் பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்கள்.

1.   நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலக்கரத்தில் மோதிரம் அணிந்ததாக வரக்கூடிய செய்திகள் மிகவும் சரியானதாகவும் அதிகமானதாகவும் இருக்கின்றன. எனவே, இச்செய்திகளையே நாம் ஏனையவைகளைவிட முற்படுத்த வேண்டும்.

இப்னு ஹஜர் அல்ஹைதமீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: வலக்கரத்தில் அணிவதே மிகவும் சிறப்பானதாகும். ஏனெனில், இவ்விடயம் அதிகமான ஹதீஸ்களில் இடம்பெற்றுள்ளன. (துஹ்பதுல் முஹ்தாஜ்)

2. வலக்கரத்தில் மோதிரம் அணிவது ராபிழாக்களின் அடையாளச் சின்னம் என்று அவர்கள் கூறிய கருத்துக்கு இமாம் நவவீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு மறுப்புத் தெரிவித்திருக்கின்றார்கள்: 'பெரும்பான்மையான நகரங்களில் அது அவர்களுடைய அடையாளச் சின்னமாகக் காணப்படவில்லை. அது அவர்களுக்குரிய அடையாளச் சின்னமாக இருந்தாலும் வலதில் அணிவதை விடமுடியாது. பித்அத்வாதிகளில் ஒரு கூட்டம் செய்கின்றார்கள் என்பதற்காக வேண்டி எவ்வாறு சுன்னாக்கள் விடப்பட முடியும்?; (அல்மஜ்மூஃ)

3. பெரும்பான்மையான ஸஹாபாக்கள் இடக்கரத்தில் மோதிரம் அணிந்ததாக அவர்கள் கூறினார்கள். ஆனால், ஏனைய ஸஹாபாக்கள் வலக்கரத்தில்தான் அணிந்ததாகப் பதிவாகியுள்ளது. அவர்களில் உள்ளவர்களே ஜஃபர் இப்னு முஹம்மத், இப்னு அப்பாஸ், அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் ரழியல்லாஹு அன்ஹும் ஆகியோர்கள். இவர்களுடைய செய்திகள் யாவும் இப்னு அபீஷைபா ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய அல்முஸன்னப் என்ற நூலில் பதிவாகியுள்ளன.

இப்னு ஹஜர் அல்அஸ்கலானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அபூபக்கர், உமர், பெரும்பான்மையான ஸஹாபாக்கள் ரழியல்லாஹு அன்ஹும், மதீனாவைச் சேர்ந்த தாபிஈன்கள், இன்னும் ஏனையோர்கள் வலக்கரத்தில் அணிந்ததாகக் கூறியிருக்கின்றார்கள். (பத்ஹுல் பாரீ)

மூன்றாவது கருத்து: வலக்கரத்திலும் அணியலாம். இடக்கரத்திலும் அணியலாம். சிறப்பென்ற அடிப்படையில் எக்கரத்தையும் குறிப்பாக்க முடியாது. இக்கருத்தைக் கூறும் அறிஞர்கள் இரு வகையான செய்திகளையும் ஒன்று சேர்த்து இந்த முடிவை வழங்கியிருக்கின்றார்கள். இக்கருத்தை இப்னுல் கைய்யிம், இப்னு உஸைமீன், பின்பாஸ் ரஹிமஹுமுல்லாஹ் மற்றும் சஊதி பத்வாக் குழுவைச் சேர்ந்த அறிஞர்கள் ஆகியோர் கூறியிருக்கின்றனர்.

இமாம் அபூதாவூத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது சுனனில் 'வலக்கரத்திலும் இடக்கரத்திலும் மோதிரம் அணிதல்” என்று தலைப்பிட்டிருக்கின்றார்கள். பின்பு இரு வகையான ஆதாரங்களையும் இடம்பெறச் செய்திருக்கின்றார்கள்.

சரியான கருத்து: மூன்றாவது கருத்தாகும். ஏனென்றால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும்  அவரது தோழர்களும் இரு கரங்களிலும் மோதிரம் அணிந்திருக்கின்றார்கள். இந்த இரு வகையான செய்திகளையும் ஒன்று சேர்த்து இரு கரங்களிலும் மோதிரம் அணியலாம் என்ற முடிவையே நாம் தீர்மானமாக எடுக்க முடிகிறது. குறித்த ஒரு கரத்தில் மோதிரம் அணிவது சிறப்பென்றிருந்தால் அதற்கு அவர்கள் எமக்கு வழிகாட்டியிருப்பார்கள். ஏனெனில், எக்காரியத்திலும் அவர்கள் மிகச் சிறந்ததையே மேற்கொண்டிருக்கின்றார்கள். அல்லாஹ் மிக அறிந்தவன்.

-    இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-    தொகுப்பு: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்