அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை தொடர் – பகுதி 12

لأنه سبحانه لا سمي له ولا كفء له ولا ند له , ولا يقاس بخلقه سبحانه وتعالى . فإنه سبحانه أعلم بنفسه وبغيره وأصدق قيلا وأحسن حديثا من خلقه

விளக்கம்:

அல்லாஹ்வுக்கு ஏன் உவமை கிடையாது?

இவ்வசனத்தின் துவக்கத்தில் இமாமவர்கள் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் ஏன் அல்லாஹுத்தஆலாவுக்கு ஒப்புவமை கூறுவதில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினரைப் பொறுத்தளவில் அவர்கள் பின்வரக்கூடிய அல்குர்ஆன் வசனங்களை கருத்திற்கொண்டு அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகள் விடயத்தில் தமது கொள்கைக்கான காரணங்களைத் தெளிவுபடுத்தியுள்ளனர்.

 

  • ‘அவனுக்கு நிகராக எவரையேனும் நீர் அறிவீரா?’ (மர்யம்: 65)
  • ‘மேலும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை’ (அல் இஹ்லாஸ்: 4)
  • ‘எனவே, அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு இணையாளர்களை ஏற்படுத்தாதீர்கள்.’ (அல்பகரா: 22)

 

இத்திருவசனங்களின் கருப்பொருட்களை மையமாக வைத்து அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்தினரைச் சேர்ந்தவர்கள் கூறும்போது, அல்லாஹ்வின் பெயருக்குப் பாத்திரமாக உலகில் வேறு எவரும் இல்லை என்றும், அவனுக்கு ஒப்பாக அல்லது நிகராக ஆற்றல்படைத்தவர்கள் எவரும் இருக்க முடியாது எனவும் கூறுகின்றனர்.

இது தவிர ‘எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு உதாரணம் கூறாதீர்கள்.’ (அந்நஹ்ல்: 74) என்ற திருக்குர்ஆன் வசனத்தை வைத்து அவனை படைப்பினங்களுடன் ஒப்பிட முடியாது எனக் கூறுகின்றனர். இப்படியிருக்க சிந்திக்கும் ஆற்றல் படைத்த எவராவது பூரணத்துவம் மிக்க படைப்பாளனை குறைகள் நிறைந்த சிருஷ்டிகளுடன் ஒப்பிடுவாரா? மாற்றமாக அல்லாஹுத்தஆலா, தன்னையும் பிறரையும் பற்றி நன்கறிந்தவனாக இருக்கின்றான். எனவே, அதனைக் கருத்தில் கொண்டு அவன் தன்விடயத்தில் உறுதிப்படுத்தியவற்றை நாமும் உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும், படைப்பினங்களிடத்தில் அவனைப்பற்றிய பூரண அறிவு கிடையாது. அல்லாஹுத்தஆலாவோ படைப்பினங்களின் சிந்தனைக் கொட்டாத பூரண பண்புகளைக் கொண்டு வரணிக்கப்பட்டுள்ளான். எனவே, அல்லாஹ் தனக்குப் பொருந்திக் கொண்டவற்றை நாமும் அவனுக்குப் பொருந்திக் கொள்ள வேண்டும். ஏனெனில், அவனுக்குத்தகுதியானவற்றை அவனே நன்கறிந்தவனாகவுள்ளான். நிச்சயமாக அவன் அறிவித்தவை அழகானதும் உண்மையானதுமாகும். நாம் என்றென்றும் அவற்றை உண்மைப்படுத்தக்கூடியவர்களாகத் திகழ்வோமாக!

ثم رسله صادقون مصدقون , بخلاف الذين يقولون عليه ما لا يعلمون

விளக்கம்:

அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகள் விடயத்தில் தூதர்களின் நம்பகத்தன்மை.

மேற்குறித்த வசனமானது, இதற்கு முன்னால் நாம் பார்த்த வசனத்தின் தொடராக அமைந்துள்ளது. இவ்வசனத்தில் இமாமவர்கள் அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகள் விடயத்தில் தூதர்களின் நம்பகத்தன்மையைப் பற்றி விளக்கியுள்ளார்கள். அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட தூதர்கள், அவன் குறித்து மக்களுக்குப் போதித்தவற்றில் உண்மையாளர்களாகவும், வானவர்கள் மூலமாக அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட வஹியின் மூலம் உண்மைப்படுத்தப்பட்டவர்களாகவும் இருந்தார்கள். மேலும், அவர்கள் தங்களது மனோ இச்சையின் அடிப்படையில் எதையும் மொழியமாட்டார்கள். இது அவர்களுக்கு இருக்கின்ற நம்பகத்தன்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இதன் மூலம், அவர்களுக்கு அல்லாஹ்வின் விடயத்தில் சொல்லப்பட்டதும், அவர்கள் மக்களுக்கு போதித்ததும் உண்மையை அடிப்படையாகக் கொண்டிருந்தன என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனவே, அவர்கள் அல்லாஹ்வைப்பற்றி வர்ணித்தவற்றை முழுமையாக ஏற்றுக் கொள்வது எமது கடமையாகும்.

மேலும், அவர்கள் அல்லாஹ்வின் விடயத்தில் அறிவின்றிக்கூறக்கூடியவர்களுக்கு மாற்றமானவர்களாக இருந்தனர். அத்தகைய அறிவிலிகள் தமது மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டவர்களாக வெறும் கற்பனைகளையும் யூகங்களையும் வகுத்து ஷைத்தானுக்கு அடிமைப்பட்டவர்களாகத் திகழ்கின்றனர். இதற்குப் பின்வரும் வசனங்கள் சான்று பகருகின்றன.

‘ஷைத்தான்கள் யார் மீது இறங்குகின்றனர் என உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர். (ஒட்டுக்) கேட்டவற்றை (இவர்களின் காதுகளில்) போடுவார்கள். அவர்களில் அதிகமானோர் பொய்யர்களே!’ (அஷ்ஷுஅரா: 221-223)

‘அற்ப கிரயத்தைப் பெறுவதற்காக தம் கைகளால் ஒரு நூலை எழுதி பின்னர், இது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகின்றவர்களுக்குக் கேடுதான்.’ (அல்பகரா: 79)

அல்லாஹ் எம்மனைவரையும் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதைவிட்டும் பாதுகாப்பானாக!

ولهذا قال: { سبحانك ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين } سورة الصافات , الآيات : 180-182 فسبح نفسه عما وصفه به المخالفون للرسل . وسلم على المرسلين لسلامة ما قالوه من النقص والعيب

விளக்கம்:

அல்லாஹ்வினதும் அவனது தூதர்களினதும் வார்த்தைகள் உண்மையானதும் அழகானதுமாகும் என்பதற்கான சான்று.

இமாமவர்கள் மேற்குறித்த சான்றின் மூலம் அவர்கள் முன்பு குறிப்பிட்ட, அல்லாஹ்வினதும் அவனது தூதர்களினதும் வார்த்தைகள் உண்மையானதும் அழகானதுமாகும் என்பதை நிரூபிக்கின்றார்கள்.

அதற்காக அவர்கள் முன்வைத்த சான்றின் தமிழ் வடிவமாவது: ‘(நபியே!) அவர்கள் வர்ணிப்பதை விட்டும் கண்ணியத்தின் இரட்சகனாகிய உமது இரட்சகன் தூய்மையானவன். (நமது) தூதர்கள் மீது சாந்தி உண்டாவதாக. அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.’ (அஸ்ஸாப்பாத்: 180-182)

இச்சான்றானது பின்வரும் சிறப்பம்சங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

1. அல்லாஹ்வின் அந்தஸ்திற்குத் தகாதவிதத்தில் வழிகேடர்களும் அறிவிலிகளும் அவனை வர்ணித்தவைகளைவிட்டும் அவன் தூய்மையானவனாக இருக்கின்றான்.

2. தூதர்களின் நம்பகத்தன்மையும், அவர்கள் அல்லாஹ்வின் விடயத்தில் அறித்தவற்றை ஏற்றுக் கொள்வதின் அவசியமும் புலப்படுகின்றது.

3. தூதர்கள் மீது சாந்தியை வேண்டிப் பிரார்த்தித்தலும், அவர்களை கௌரவப்படுத்தலும்.

4. தூதர்கள் கொண்டுவந்ததிற்கு மாற்றமான கருத்துக்களைப் புறக்கணித்தல். அதிலும் குறிப்பாக, அவர்கள் அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகள் விடயத்தில் அறிவித்தவற்றிக்கு மாற்றமான கருத்துக்களைப் புறக்கணிப்பது அவசியமாகும்.

5. அல்லாஹ்வைப் புகழ்வதும், அவனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதும் எமது கடமையாகும். அத்தகைய அருட்கொடைகளில் பிரதானமாக எமக்கு ஏகத்துவம் என்ற அருட்கொடை கிடைத்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

இன்ஷா அல்லாஹ் தொடரும்

by: ABU HUNAIF MUHAMMAD HISHAM