‘ஹிஸ்னுல் முஃமின் மின் அத்காரி வஅத்இயதின் நபிய்யி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்’ – 04

بسم الله الرحمن الرحيم

8. சபையில் திக்ரு செய்யாமல் இருப்பது குறித்த எச்சரிக்கை!

குறிப்பு: இத்தலைப்பை அல்ஜாமிஉஸ் ஸஹீஹ் எனும் நூலில் கிதாபுத் தஃவாத் வல்அத்கார் எனும் தலைப்பின் கீழ் உபதலைப்பு இல: 76ல் காணலாம்.

17. எந்த ஒரு கூட்டம் சபையில் இருந்து எழும்பும் போது அதிலே அல்லாஹ்வை ஞாபகிக்காத நிலையில் எழும்புகின்றதோ, அக்கூட்டம் இறந்த கழுதையின் சடலத்தைவிட்டும் எழும்புவதைப் போலன்றி வேறில்லை. (அவர்கள் கூலியின் நிமித்தம் பிரவேசிப்பவர்களாக இருந்தாலும்) அவர்களுக்கு நஷ்டம் உண்டாகும்.

மற்றோர் அறிவிப்பில்: ஒரு கூட்டம் சபையில் வீற்றிருக்கும் போது அதனில் உள்ளவர்கள் அங்கு அல்லஹ்வை ஞாகிக்காதவர்களாகவும் அவர்களது நபியின் மீது ஸலவாத்துச் சொல்லாதவர்களாகவும் இருப்பார்களேயானால் அவர்கள் மீது ஓர் அநியாயம் இருக்குமேயன்றி வேறில்லை. (அல்லாஹ்) நாடினால் அவர்களை வேதனை செய்வான். மேலும் (அவன்) நாடினால் அவர்களை மன்னிப்பான்.

பிறிதோர் அறிவிப்பில்: ஒரு கூட்டம் அல்லாஹ்வை ஞாபகிக்காத நிலையிலும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்லாத நிலையிலும் ஒன்று குழுமியிருந்தால் அதில் அங்கம் வகிப்பவர்கள் மீது மறுமை நாளில் ஒரு நஷ்டம் இருக்குமேயன்றி வேறில்லை. அவர்கள் கூலியைப் பெற்று சுவனம் நுழைந்திருந்தாலும் சரியே!

குறிப்பு: இச்செய்தியை அபூதாவுத் (4855) எனும் கிரந்தத்தில் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது. மேலும், இரண்டாவது அறிவிப்பு திர்மிதி (3380) எனும் கிரந்தத்திலும் மூன்றாவது அறிவிப்பு அஹ்மத் (2/463) எனும் கிரந்தத்திலும் பதிவாகியுள்ளன. இன்னும், அஸ்ஸஹீஹுல் முஸ்னத் (1328) எனும் கிரந்தத்தில் ஸஹீஹ் எனும் தரத்திலும் அஸ்ஸஹீஹா (76, 77) எனும் கிரந்தத்திலும் இச்செய்தியைக் காணலாம்.

9. சபையில் (ஏற்பட்ட) தவறுகளுக்காக அமையும் பரிகார துஆ

குறிப்பு: இத்தலைப்பை அல்ஜாமிஉஸ் ஸஹீஹ் (எனும் நூலில்) கிதாபுத் தஃவாத் வல்அத்கார் எனும் தலைப்பின் கீழ் உபதலைப்பு இல: 75ல் காணலாம்.

18. سبحانك وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك

பொருள்: (இறைவா!) நீ தூய்மையானவன். மேலும், உன்னுடைய புகழைக் கொண்டு (நான் உன்னைத் துதிக்கின்றேன்.) வணக்கத்திற்குரிய நாயன் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை.) உன்னிடத்தில் நான் பாவமன்னிப்புக் கேட்கின்றேன். மேலும், உன்னிடத்தில் பாவமீட்சி பெறுகின்றேன்.

குறிப்பு: இமாம் நஸாயி அவர்களின் அமலுல் யவ்மி வல் லைலா (308) எனும் நூலில் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைத் தொட்டும் இடம்பெற்றுள்ளதாவது: 'யார் நல்லதைக் கூறுகின்றாரோ அவருடைய நலவின் மீது ஒரு முத்திரை இடப்படும். மேலும், யார் தீயதைக் கூறுகின்றாரோ அவருக்கு அது குற்றப்பரிகாரமாக அமைந்துவிடும்.’ அஸ்ஸஹீஹ் அல்முஸ்னத் (1598) எனும் கிரந்தத்தில் ஸஹீஹ் எனும் தரத்தில் இச்செய்தி பதிவாகியுள்ளது. மேலும், இதனுடைய பூரண வடிவம் நூலின் கடைசிப்பகுதியில் இடம்பெற இருக்கின்றது.

பாடங்கள்

1.            ஒருவர் தனது தூக்கத்தை விட்டும் எழுந்தால் கூற வேண்டியவை.

 (19 – 1) الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور

பொருள்: எங்களை மரணிக்கச் செய்ததின் பிறகு உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! மேலும்,  அவன் பால் மீளுதல் இருக்கின்றது.

குறிப்பு: இச்செய்தி அபூதர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் புகாரி (6325, 7395) எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது. மேலும், இச்செய்தி ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் புகாரி (6314) எனும் கிரந்தத்திலும் அல்பரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் முஸ்லிம் (2711) எனும் கிரந்தத்திலும் பதிவாகியுள்ளது.

  (20 – 1) لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الحمد لله وسبحان الله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله

பொருள்: (இரவில் தூக்கத்தில் புரலும் போது:) அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறுயாரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு யாதொரு துணையும் இல்லை. அவனுக்கே ஆட்சி அதிகாரம் உள்ளது. இன்னும் அவனுக்கே புகழனைத்தும் உாியன. மேலும், அவனே வஸ்துக்கள் அனைத்தின் மீதும் ஆற்றல் படைத்தவன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியன. மேலும், அல்லாஹ் தூய்மையானவன். வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத்தவிர வேறுயாரும் இல்லை. அல்லாஹ் மிகப் பெரியவன். அல்லாஹ்வைக் கொண்டேயன்றி எவ்வித சக்தியும் ஆற்றலும் கிடையாது (என்ற கருத்தில் அமைந்த இந்த துஆவை ஓத வேண்டும்.)

குறிப்பு: இச்செய்தி உபாதத் இப்னு அஸ்ஸாமித் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் புகாரி (1154) எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது. 'எனவே அவன்: இறைவா என்னை மன்னிப்பாயாக! என்று கூறினால் அல்லது, பிரார்த்தனை செய்தால் அவனுக்கு பதிலளிக்கப்படும். அவன் வுழூச் செய்து தொழுதால் அவனுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்படும்.'

எனவே, இந்த ஹதீஸ் எவர்களின் செவியறைகளை எத்துகின்றதோ அவர்கள் இதனைக் கொண்டு அமல் செய்து சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், தனது நிய்யத்தை தன் இரட்சகனுக்காக தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும். (பத்ஹுல் பாரி)

இன்னும், மேற்குறித்த செய்தியில் இடம்பெற்றிருக்கும் تعار என்ற பதம் தூக்கத்தைவிட்டும் திடீர் என்று விழித்தெழுதலைக் குறிக்கும். அவ்விழித்தெழுதலானது பேச்சுடன் கலந்த விழிப்பாக இருக்கும். இதுவல்லாமல், ஆறுதல் அடைந்த கொட்டாவியுடனான விழிப்பு மற்றும் படுக்கையின் போது வெளிப்படும் சிணுக்கம் என்பது போன்ற சில விளக்கங்களும் அறிஞர்களினால் முன்வைக்கப்பட்டுள்ளன. (அந்நிஹாயா)

2. புத்தாடை அணிந்தவரைக் கண்டால் ஓதும் துஆ

21. புத்தாடை அணிந்தவர் பெண்ணாக இருந்தல்.

أبلي وأخلقي

பொருள்: நீ இதனை இத்துப்போகும் வரை அணிந்திடுவாய்! மேலும், நற்குணத்துடன் வாழ்ந்திடுவாய்! – என்று 3 விடுத்தங்கள் கூற வேண்டும்.

குறிப்பு: இச்செய்தி உம்மு ஹாலித் பின்த் ஹாலித் என்பவரைத் தொட்டும் புகாரி (5823, 3071) எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது. மேலும், أبلي என்ற வார்த்தை பெண்பாலைக் குறிக்கும் ஏவல் வினையாகும். இதனடிப்படையில் முன்னிலையில் உள்ளவர் பெண்பாலுக்குரியவராக இருக்கும் போது அவரை நோக்கி அதனை இத்துப்போகும் வரை அணியுமாறும் நற்குணத்தை உடையவராக நடந்து கொள்ளுமாறும் பணிக்கப்படுகின்றது. மேலும், இவ்விரு வார்த்தைகளும் கருத்தை அடிப்படையாகக் கொண்டே பிரயோகிக்கப்பட்டுள்ளன. பொதுவாக அரேபியர்களைப் பொறுத்தளவில் அவர்கள் இவ்வார்த்தைகளின் மூலம் பிரார்த்தனை செய்தலை நாடுவார்கள். அப்பிரார்த்தனையானது முன்னிலையில் உள்ளவருக்கு நீண்ட ஆயுளை வேண்டக் கூடியதாக இருக்கின்றது. அதாவது, குறித்த ஆடையைப் பழைய நிலையை அடையும் வரை அணிந்திடவும் நற்குணத்துடன் கூடியதாக ஆயுளை நீடித்திடவும் பிரார்த்தனை செய்வதாக அமையும். அல்ஹலீல் என்பவர் கூறும் போது: 'இத்துப்போகும் வரை அணிந்திடுவாய்! நற்குணத்துடன் வாழ்ந்திடுவாய்! என்ற வார்த்தைகளின் கருத்தாவது: உன்னுடைய ஆடை கிழிந்தாலும் நீ அதனைச் சீர் செய்து கொண்டு வாழ்ந்திடு! மேலும், ஆடையை நற்குணமாக்கு என்பது: அதனுடைய இத்துப்போன அடையாளத்தை தைத்து இல்லாமல் செய்துவிடு! என்பதாகும். (பத்ஹுல் பாரி)

மேலும், இப்பிரார்த்தனையை முன்னிலையில் உள்ள ஆணுக்குப் பிரயோகிக்கும் போது: أبل وأخلق என்று மாற்றிக் கொள்ள வேண்டும்.

-              இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-              தமிழாக்கம்: அபூஹுனைப்