இயலாமையின் காரணமாக ஒருவர் உட்கார்ந்து தொழுதால் அவருக்கு நின்று தொழுபவரின் நன்மையில் கிடைப்பது பாதியளவா?

بسم الله الرحمن الرحيم

ஒருவர் தனக்கு இயலாமையின் காரணமாக உட்கார்ந்து தொழுதால் அவருக்கு நின்று தொழுபவரின் நன்மையே கிடைக்கும். ஏனென்றால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் முஸ்லிமான அடியானை அவனுடைய உடம்பில் ஒரு சோதனையை ஏற்படுத்தி சோதித்தால், அவன் தனது மலாஇகாமார்களைப் பார்த்து: எனது அடியானுக்கு அவர் ஆரோக்கியமாகவும் ஊரில் இருக்கும் போதும் செய்த அமலை எழுதுங்கள்” என்று கூறுவான். (அஹ்மத்) இந்த ஹதீஸை அஷ்ஷெய்ஹ் முக்பில் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது அஸ்ஸஹீஹ் அல்முஸ்னத் என்ற நூலில் பதிவு செய்திருக்கின்றார்கள்.

ஒரு மனிதர் நோய்வாய்ப்பட்டால் அவர் ஆரோக்கியமாக இருக்கும்போது செய்து வந்த அமல்களின் நன்மைகள் அவருக்குக் கிடைக்கும் என்பதை இந்த ஹதீஸின் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம். ஒருவர் ஆரோக்கியமாக இருக்கும்போது நின்று தொழுவார். அவர் இயலாமையின் காரணமாக அமர்ந்து தொழுதால் அவர் ஆரோக்கியமான நிலையில் இருக்கும்போது நின்று தொழுத நன்மையே அவருக்குக் கிடைக்கும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மற்றொரு ஹதீஸில் பின்வருமாறு கூறினார்கள்: “யார் நின்று தொழுகிறாரோ அது மிகச் சிறந்ததாகும். எவர் உட்கார்ந்து தொழுகிறாரோ அவருக்கு நின்று தொழுபவரின் கூலியில் அரைவாசியே கிடைக்கும்.” (புஹாரீ)

எவர் நபிலான தொழுகைகளில் நின்று தொழ சக்தியிருந்தும் உட்கார்ந்து தொழுவாரோ அவருக்கே நின்று தொழுபவரின் கூலியில் அரைவாசி கிடைக்கும் என்று இந்த ஹதீஸுக்கு விளக்கமாக பெரும்பான்மையான அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.

- பார்க்க: பத்ஹுல் அல்லாம், முதலாம் பாகம், 670ம் பக்கம்.

- அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்