யார் இவர்களுக்குத் தொழுகையை விடச் சொன்னது?!

بسم الله الرحمن الرحيم

அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் "அல்முளஹ்ஹஸுல் பிக்ஹி” (1/67) என்ற தனது நூலில் கூறும் போது: "சில அறிவீனர்கள் வைத்தியசாலையில் கட்டில்களின் மீதிருந்து சிகிச்சை பெறும்போது (ஐங்காலத்) தொழுகைகளை விடக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். அப்படியானவர்கள் தங்களால் கட்டில்களில் இருந்து இறங்க முடியாது என்றும் தம்முடைய அழுக்குப்படிந்த ஆடைகளை மாற்ற முடியாது என்றும் தம்மிடத்தில் தயம்மம் செய்வதற்கு மண் இல்லை என்றும் தமக்கு நீரையோ அல்லது மண்ணையோ கொண்டு வந்து சுத்தம் செய்வதற்கு உதவி புரிய யாரும் இல்லை என்றும் சாட்டுப்போக்கு கூறுகின்றார்கள். மேலும், எம்முடைய சூழ்நிலை சீராகியவுடன் தொழுது கொள்வோம் என்றும் கூறுகின்றார்கள்.

இது ஒரு பெரிய தவறாகும். இப்படியாகத் தொழுகைகளை வீணடிக்கும் நிலையானது அறியாமையின் காரணமாகவும் தமக்கு அறிவில்லாத விடயங்களை கோள்வி கேட்டுப் படிக்காததின் காரணமாகவுமே ஏற்பட்டுள்ளது. எனவே, இவ்வாறான சூழ்நிலைக்கு முகம் கொடுக்கும் நோயாளிகள் தாம் இருக்கும் நிலையிலேயே தமது தொழுகைகளைத் தொழுது கொள்ள வேண்டும். அவ்வாறு தொழப்படும் தொழுகைகள் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியனவாக இருக்கும். அவர்கள் தயம்மம் செய்யாமலும் அல்லது நஜீஸான ஆடையுடன் தொழுதாலும் சரியே!

அல்லாஹ் கூறுகின்றான்: ‘உங்களால் முடியுமான அளவு அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்.’ (அத்தகாபுன்: 16)

அதேபோன்று, இப்படியான நோயாளிகள் கிப்லாவை முன்னோக்கித் தொழ முடியாத போது கிப்லா அல்லாத திசையை நோக்கித் தொழுதாலும் அவர்களது தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட்ட தொழுகையாகவே இருக்கும் என்கிறார்கள்.”

-    தமிழில்: அபூஹுனைப்