“நபிமார்கள் தவறில் இருந்தும் பாதுகாக்கப்பட்டவர்கள்” என்பதற்கான விளக்கம்

بسم الله الرحمن الرحيم

கேள்வி: சிறப்புக்குரிய ஷெய்ஹ் அவர்களே! ரஸூல்மார்கள் தவறிழைப்பதிலிருந்தும் பாதுகாக்கப்பட்டவர்கள் என்பதை நாம் அறிவோம். அவர்கள் மார்க்க விடயங்களில் மாத்திரம் தான் தவறுகளிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்களா? அல்லது அனைத்து விடயங்களிலுமா (என்பதை விளக்குவீா்களா)?

விடை: நபிமார்களும் ரஸூல்மார்களும் (அலைஹிமுஸ்ஸலாத்து வஸ்ஸலாம்) அல்லாஹ்வுடைய வஹியைக் கொண்டு பேசுகின்றார்கள். அவர்களது உண்மைத் தன்மையையும் நம்பிக்கையையும் பாதிக்கக்கூடிய அனைத்து தீங்குகளைவிட்டும் அவர்கள் பாதுகாக்கப்பட்டவர்கள். இது தான் அவர்கள் விடயத்தில் உள்ள நம்பிக்கைக்குரிய இடமாகும். அவர்களுடைய ஆராய்வின் பெறுபேறாக அமைந்த ஒன்றில் அவர்கள் சிலவேளை தவறிழைக்கலாம். ஏனென்றால், நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தனது இறைவனிடம் அவர்களுடைய மகனைக் காப்பாற்றுமாறு வினவினார்கள். அதற்கு அல்லாஹுத்தஆலா (பின்வருமாறு) கூறினான்: "அவன் உனது குடும்பத்தைச் சார்ந்தவனல்ல. நிச்சயமாக அவன் ஒழுக்கமில்லாத செயலுடையவன். ஆகவே, எதில் உமக்கு அறிவு இல்லையோ அதைப் பற்றி நீர் என்னிடம் கேட்க வேண்டாம். அறியாதவர்களில் உள்ளவராய் நீர் ஆகுவதை விட்டும் நிச்சயமாக நான் உமக்கு நல்லுபதேசம் செய்து வைக்கின்றேன்.” (ஹூத்: 46)

ரஸூல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தன்னிடமிருந்து பெற்ற ஆராய்வின் படி அவர்களுக்கு அல்லாஹ் ஹலாலாக்கிய ஒன்றை அவர்கள் ஹராமாக்கினார்கள். அதற்கு அல்லாஹ் (பின்வருமாறு) கூறினான்: "நபியே! உம்முடைய மனைவியரின் திருப்தியை நீர் தேடியவராக அல்லாஹ் உமக்கு ஆகுமாக்கி வைத்ததை நீர் ஏன் விலக்கிக் கொண்டீர்? மேலும், அல்லாஹ் மிக்க மன்னிக்கின்றவன், மிக்க கிருபையுடையவன். உங்களுடைய சத்தியங்களை முறித்துவிடுவதை நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தியுள்ளான்." (தஹ்ரீம்: 1,2)

மேலும், அவர்கள் ஜிஹாதில் கலந்து கொள்ளாமல் இருக்க அனுமதி கேட்ட ஒரு கூட்டத்தாரை மன்னித்தார்கள். அதற்கு அல்லாஹ் (பின்வருமாறு) கூறினான்: "(நபியே!) அல்லாஹ் உம்மை மன்னித்தருள்வானாக! (போருக்கு வராது தங்கிவிட்ட) அவர்களில் உண்மை சொல்பவர்கள் (யார் என்பது) உமக்குத் தெளிவாகி, பொய்யர்களை நீர் அறியும் வரை ஏன் அவர்களுக்கு நீர் அனுமதியளித்தீர்?” (அத்தவ்பா:43)

என்றாலும், அவர்கள் தவறில் நீடித்து இருப்பதைவிட்டும் பாதுகாக்கப்பட்டவர்கள். அதாவது, அவர்கள் ஆராய்ந்த ஓர் ஆராய்ச்சியில் தவறு ஏற்பட்டால் கட்டாயமாக அல்லாஹ் அவர்களை அத்தவறில் தொடர்ந்திருப்பதைப் பாதுகாப்பான். அடுத்தவர்கள் இதற்கு மாற்றமானவர்கள். அவர்கள் அதிலிருந்து பாதுகாக்கப்படமாட்டார்கள்.

விடையளித்தவர்: அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ்

தமிழில்: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்