ஸூரதுன் நூர் விளக்கவுரை – 14

بسم الله الرحمن الرحيم

வீட்டினுள் பிரவேசிக்கும் போதும், வீட்டைவிட்டு வெளியேறும் போதும் ஓதப்பட வேண்டிய துஆக்கள்

வீட்டினுள் பிரவேசிக்கும் போதும், வீட்டைவிட்டு வெளியேறும் போதும் ஓதுவதற்கென்று பிரத்தியோகமான சில துஆக்களை நபியவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.

வீட்டினுள் பிரவேசிக்கும் போது...

“ஒருவர் தனது வீட்டினுள் பிரவேசிக்கும் போதும் அதில் சாப்பிடும் போதும் அல்லாஹ்வை ஞாபகப்படுத்தினால், ஷைத்தான் (தன்னோடு இருப்பவர்களை நோக்கி) 'உங்களுக்கு இராத்தரிப்பிடமும் இராப்போசனமும் இல்லை' என்று கூறுவான். மேலும், (அவர்) பிரவேசிக்கையில் அல்லாஹ்வை ஞாபகிக்காது இருந்துவிட்டால், ஷைத்தான் (தன்னோடு இருப்பவர்களை நோக்கி) 'நீங்கள் இராத்தரிப்பிடத்தைப் பெற்றுக் கொண்டு விட்டீர்கள்' என்று கூறுவான். இன்னும், அவர் உணவு பரிமாறும் போதும் அவருடைய உட்பிரவேசத்தின் போதும் அல்லாஹ்வின் பெயரைக் கூறாமல் இருந்தால், (ஷைத்தான் தன்னோடு இருப்பவர்களை நோக்கி) 'நீங்கள் இராத்தரிப்பிடத்தையும் இராப்போசனத்தையும் பெற்றுக் கொண்டு விட்டீர்கள் என்று கூறுவான்.” (முஸ்லிம்)

வீட்டிலிருந்து புறப்படும் போது...

اللهم إني أعوذ بك أن أضل أو أضل أو أزل أو أزل أو أظلم أو أظلم أو أجهل أو يجهل علي

பொருள்: யா அல்லாஹ்! நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். நான் வழிதவறிப் போவதில் இருந்தும்! அல்லது, நான் வழி கெடுக்கப்படுவதில் இருந்தும்! அல்லது, நான் வழி சறுகுவதில் இருந்தும்! அல்லது, வழி சறுக்கப்படுவதில் இருந்தும்! அல்லது, நான் பிறர் மீது அநீதி இழைப்பதில் இருந்தும்! அல்லது, பிறர் என் மீது அநீதி இழைப்பதில் இருந்தும்! அல்லது, நான் பிறரிடம் அறியாத்தனமாக நடப்பதில் இருந்தும்! அல்லது, என்னிடம் பிறர் அறியாத்தனமாக நடப்பதில் இருந்தும் (உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.) (ஸஹீஹூத் திர்மிதி: 3 ∕ 152, ஸஹீஹ் இப்னு மாஜா: 2 ∕ 336)

மேலும், வீடுகளில் பிரவேசித்த ஒருவர் அங்கு தங்கும் காலமெல்லாம் எந்தத் தீங்கும் ஏற்படாமல் இருப்பதற்கென்று ஒரு தனியான துஆவை நபியவர்கள் கற்றுத்தந்துள்ளார்கள். அதன் வாசகமாவது...

أعوذ بكلمات الله التامات من شر ما خلق

பொருள்: அல்லாஹ்வின் பூர்த்தியான வார்த்தைகளைக் கொண்டு (அல்லாஹ்) படைத்தவற்றின் தீங்கை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன்.

இவ்வாறு ஒருவர் கூறிவிட்டுப் பிரவேசித்தால் அவர் அவ்வீட்டை விட்டு வெளியேறும் வரை எந்தத் தீங்கும் அவருக்கு ஏற்படமாட்டாது. (முஸ்லிம்: 2708)

மேலும் வீட்டில் அழகாக வுழுச் செய்து, பள்ளிவாசலை நோக்கி நடந்து வரும் போது, பின்வரும் துஆவை ஓதக் கூடிய வழிமுறையை செயலில் கொண்டு வருவதற்கு எத்தனிக்க வேண்டும்.

اللهم اجعل في قلبي نورا وفي لساني نورا واجعل في سمعي نورا واجعل في بصري نورا واجعل من خلفي نورا ومن أمامي نورا واجعل من فوقي نورا ومن تحتي نورا اللهم أعطني نورا

பொருள்: யா அல்லாஹ்! என் உள்ளத்தில் ஒளி வழங்குவாயாக! எனது நாவில் ஒளி வழங்குவாயாக! எனது செவியில் ஒளி வழங்குவாயாக! எனக்குப் பின்னால் ஒளி வழங்குவாயாக! எனக்கு முன்னால் ஒளி வழங்குவாயாக! எனக்கு மேலே ஒளி வழங்குவாயாக! எனக்கு கீழே ஒளி வழங்குவாயாக! யா அல்லாஹ்! எனக்கு ஒளி வழங்குவாயாக! (முஸ்லிம்: 1 ∕ 530)

குறிப்பு: புகாரியின் விரிவுரை நூலான 'பத்ஹூல் பாரி'யில் சில பயனுள்ள வார்த்தைகள் கூடுதலாக உள்ளன. (பார்க்க: 11 ∕ 116)

ஆண் பெண் தனித்திருத்தல் தவிர்க்கப்படல் வேண்டும்

வீடுகளில் பிரவேசிக்க அனுமதி கிடைத்தாலும் ஆண் பெண் தனித்திருத்தல் தவிர்க்கப்படல் வேண்டும். ஏனெனில், அன்னியர்களான அவ்விருவரும் தனித்திருப்பதால் ஷைத்தானின் வலையில் சிக்குண்டு மானக்கேடான காரியங்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்புள்ளது. இது குறித்து நபியவர்களின் எச்சரிக்கையைக் கேட்போம்.

“ஓர் ஆண், பிரிதொரு பெண்ணுடன் தனிமையில் இருக்கும் போது மூன்றாம் நபராக ஷைத்தான் (அவர்களுடன்) இருக்கின்றான்.” (திர்மிதி: 2165, அஹ்மத்: 115)

'ஓர் ஆண், மற்றொரு பெண்ணுடன் அவளின் மஹ்ரமுடனன்றி தனித்திருக்க வேண்டாம்.' (முஸ்லிம்: 1341)

திருமணம் பேசி முடிவெடுக்கப்பட்ட பெண்ணுடன் தனித்திருக்க முடியுமா?

இது தொடர்பான வினா அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடத்தில் தொடுக்கப்பட்ட போது கீழ் வருமாறு பதிலளித்தார்கள்.

“திருமணம் பேசி முடிவெடுக்கப்பட்டு, திருமண உடன்படிக்கையிலும் கைச்சாத்திடப்பட்டுவிட்டால் அவ்விருவருக்குமிடையில் எந்தத் தொடர்புகளும் இருப்பதை இஸ்லாம் தவறெனக் கருதாது. மாற்றமாக, திருமண உடன்படிக்கைக்கு முன்னதாக குறித்த பெண்ணுடன் பேச்சுக்களை வைத்துக் கொள்வது, அவளைப் பார்வையிடச் செல்வது, தனிமையில் இருவரும் சந்திப்பது போன்ற அம்சங்களை இஸ்லாம் ஒரு போதும் ஆதரிக்காது. ஏனெனில், திருமண சட்டதிட்டங்கள் முழுமையாக நிறைவேறும் வரை அப்பெண்மணி அன்னிய பெண்ணாகவே கருதப்படுவாள்.” (பதாவா அல்மர்ஆ: 51)

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-           அபூஹுனைப்