அல்குர்ஆனை ஓதிய பின் “ஸதகல்லாஹுல் அளீம்” – மகத்துவமிக்க அல்லாஹ் உண்மை கூறிவிட்டான் – என்ற வார்த்தையைக் கூறலாமா?

بسم الله الرحمن الرحيم

அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:

ஒரு மனிதன் "ஸதகல்லாஹுல் அளீம்" என்று கூறுவது, அல்லாஹ்வைப் புகழும் வார்த்தையாகக் கவனத்தில் கொள்ளப்படுகின்றது. அல்லாஹ்வைப் புகழும் வார்த்தைகளைப் பொறுத்தவரையில் அவை இபாதத்தைச் சார்ந்தவைகளாகும். ஏனென்றால், அதற்கு மனிதனுக்கு கூலி வழங்கப்படுகின்றது. அதன் காரணமாக எந்தவோர் இபாதத்தாக இருந்தாலும் அல்லாஹ்வும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் மார்க்கமாக்கினாலே அன்றி அதனை ஒரு மனிதன் இபாதத்தாக எடுத்துக் கொள்ளக் கூடாது. குர்ஆன் ஓதி முடிக்கும் போது ஸதகல்லாஹுல் அளீம் என்று கூறுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதல்ல. நாம் அறிந்த அளவில் அது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்தோ அவர்களுடைய தோழர்களிடமிருந்தோ இடம்பெறவில்லை.

மாறாக, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு சூரதுந் நிஸாவை ஓதுமாறு ஏவினார்கள். அவர்கள் "எனவே (நபியே!) ஒவ்வொரு கூட்டத்தினரையும் (அவர்களுடைய) சாட்சியுடன் நாம் கொண்டு வரும் போது, நாம் இவர்கள் மீது சாட்சியாக உம்மையும் கொண்டு வந்தால் (உம்மை நிராகரிக்கும் இவர்களின் நிலை) எப்படி இருக்கும்" என்ற வசனத்தை அடைந்த போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "போதும்" என்றார்கள். அப்போது இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஓதுவதை நிறுத்திக் கொண்டார்கள். இந்த வசனத்திலோ இதுவல்லாத ஏனைய வசனங்களின் போதோ அவர்கள் "ஸதகல்லாஹுல் அளீம்" என்று கூறியதாக அவர்களைத் தொட்டும் இடம்பெறவில்லை. அவர்கள் அதை ஏவவுமில்லை. இதன்படிக்கு இவ்வார்த்தையைக் கூறுவது ஒரு மனிதனுக்கு அவசியமன்று.

இவ்வார்த்தையைக் கூறுவது "(நபியே!) அல்லாஹ் உண்மை கூறிவிட்டான், கலப்பற்றவிதத்தில் இப்றாஹீமுடைய மார்க்கத்தை நீங்கள் பின்பற்றுங்கள்” என்ற வசனத்திலிருந்து எடுக்கப்பட்டதாக சில மனிதர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இது சரியான ஒரு கருத்தல்ல. மாறாக, இவ்வசனத்தைப் பொறுத்தவரையில் அல்லாஹுத்தஆலா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பொய்ப்பித்தவர்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் அவனது தூதர்களுக்கு அறிவித்த வஹீயிலே உண்மையானவன் என்பதை எத்திவையுங்கள் என்று கட்டளையிடும் வசனமே இதுவாகும்.

முஸ்லிமே! “ஸதகல்லாஹுல் அளீம்” என்று நீ கூறக் கூடாது என்று நாம் உமக்கு கூறவில்லை. மாறாக, நீ அவ்வார்த்தையை உனது உள்ளத்தாலும் உனது நாவினாலும் கூறு! ஆனால், அவ்வார்த்தையை ஒரு நிலையில் மாத்திரம் கூறுவதற்கு குறிப்பாக்காதே! அதாவது, குர்ஆனை ஓதி முடிக்கும் நிலையில் அதைக் கூறுவதைக் குறிப்பாக்காதே! ஏனென்றால், அது மார்க்கத்தில் இடம்பெறவில்லை.

“ஸதகல்லாஹுல் அளீம்” என்று தனது உள்ளத்தாலும் நாவினாலும் ஒரு மனிதன் கூறுவது, அல்லாஹுத்தஆலா "பேச்சால் அல்லாஹ்வைவிட வேறு யார் உண்மையாளனாக இருக்க முடியும்” என்று கூறுவதைப் போல் அல்லாஹ்வைவிட உண்மையாளன் வேறு யாருமில்லை என்று நம்பிக்கை கொள்வதும் கட்டாயமாகும் என்பது அறியப்பட்ட ஒரு விடயமாகும்.

சில மனிதர்கள் குர்ஆனை ஓதி முடிக்கும் போது கூறும் “ஸதகல்லாஹுல் அளீம்” என்ற வார்த்தையை நாவினால் கூறுவதற்கு இவ்வசனத்தில் ஆதாரம் இல்லை என்பதே முக்கியமான ஒரு விடயமாகும்.

-    மாதாந்த சந்திப்பின் போது வழங்கிய பத்வா: பாகம்:4, பக்கம்:49

சஊதி அல்லஜ்னதுத் தாஇமாவின் பத்வா:

குர்ஆன் ஓதி முடித்த பின்பு “ஸதகல்லாஹுல் அளீம்” என்று கூறுவது பித்அத்தாகும். ஏனென்றால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நேர்வழி பெற்ற நான்கு கலீபாக்கள், ஏனைய ஸஹாபாக்கள், ஸலப் இமாம்கள் (ரஹிமஹுமுல்லாஹ்) ஆகியோர் அல்குர்ஆனை அதிகமாக ஓதக் கூடியவர்களாக இருந்தும், அதனைக் கவனமெடுக்கக் கூடியவர்களாக இருந்தும், அது பற்றிய விடயங்களை அறிந்தவர்களாக இருந்தும் இச்செயலைச் செய்யவில்லை. எனவே, குர்ஆன் ஓதிய பின்பு இவ்வாறு கூறுவது, அதனைப் பற்றிப் பிடிப்பது புதிதாக உண்டாக்கப்பட்ட பித்அத்தாகும். "யார் எமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை உருவாக்குகிறாரோ அது நிராகரிக்கப்படும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக உறுதியாகியுள்ளது. (புஹாரீ, முஸ்லிம்). "யார் எங்கள் மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலைச் செய்கின்றாரோ அது நிராகரிக்கப்படும்” என்றும் அவர்கள் கூறியிருக்கின்றார்கள். (முஸ்லிம்)

-    பதாவா அல்லஜ்னதுத் தாஇமா, பத்வா இலக்கம்: 3303

-    தமிழில்: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்