சூரா யாஸீன் அல்குர்ஆனின் இதயமா?

بسم الله الرحمن الرحيم

"ஒவ்வொரு விடயத்திற்கும் இதயம் உண்டு. நிச்சயமாக அல்குர்ஆனின் இதயம் சூரா யாஸீன் ஆகும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றதாகக் கூறிவருகின்றனர். ஆனால், இச்செய்தி இட்டுக்கட்டப்பட்ட பலவீனமான ஒரு செய்தியாகும். அஷ்ஷெய்ஹ் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மிஷ்காதுல் மஸாபீஹ் என்ற நூலில் இடம்பெறும் ஹதீஸ்களைத் தரம் பிரிக்கும் போது இச்செய்தியை இட்டுக்கட்டப்பட்டது என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். இப்னு கஸீர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அவருடைய தப்ஸீரில் இச்செய்தியின் அறிவிப்பாளர் வரிசை பலவீனம் என்ற காரணத்தினால் இது ஸஹீஹான ஹதீஸல்ல என்று குறிப்பிட்டுள்ளார்கள். இமாம் திர்மிதீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இச்செய்தியை அபூர்வமான செய்தியென்று கூறியுள்ளார்கள். இன்னும், இதன் அறிவிப்பாளர் வரிசையில் ஹாரூன் அபூ முஹம்மத் என்பவர் இடம் பெற்றிருக்கின்றார். இவர் அறியப்படாத ஒருவர் என்றும் இமாம் திர்மிதீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அவர்களுடைய ஸுனனிலே குறிப்பிட்டுள்ளார்கள். அல்ஜாமிஉஸ் ஸகீர் என்ற நூலில் இமாம் ஸுயூதி ரஹிமஹுல்லாஹ் அவர்களும் இச்செய்தியை பலவீனமானது என்று குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் அல்மிஸ்ஸீ, அஸ்ஸைலஈ, இப்னுல் அறபீ, அபூஹாதிம் ஆகிய அறிஞர்களும் இச்செய்தியை பலவீனமானது என்று தெளிவுபடுத்தியிருக்கின்றார்கள். அல்லாஹ் மிக அறிந்தவன்.

-    அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்