அல்அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை – 23

بسم الله الرحمن الرحيم

قوله تعالى : (واصبر لحكم ربك فإنك بأعيننا) - الطور : 48
وقوله تعالى : (وحملناه على ذات ألواح ودسر تجري بأعيننا جزاء لمن كان كفر) - القمر : 13،14
وقوله تعالى : (وألقيت عليك محبة مني ولتصنع على عيني) - طه : 39

விளக்கம்:

அல்லாஹுத்தஆலாவுக்கு இரு கண்கள் உள்ளன என்பதை உறுதி செய்யக்கூடிய ஆதாரங்கள்

அல்லாஹ் கூறுகிறான்: '(நபியே!) உமது இரட்சகனின் கட்டளைக்காகப் பொறுமையாக இருப்பீராக! நிச்சயமாக நீர் எமது கண்களுக்கு முன் இருக்கிறீர்.” (அத்தூர் : 48)

மேலும் கூறுகிறான்: 'மேலும், பலகைகளையும் ஆணிகளையும் கொண்ட (கப்பல்) ஒன்றின் மீது நாம் அவரைச் சுமந்து சென்றோம். நிராகரிக்கப்பட்டவருக்குரிய கூலியாக, அது நமது கண்களின் முன்னே சென்றது.” (அல்கமர்: 13, 14)

இன்றும் கூறுகிறான்: 'மேலும், எனது கண்காணிப்பில் நீர் வளர்க்கப்படுவதற்காக உம்மீது எனது நேசத்தைப் பொழிந்தேன்.” (தாஹா: 39)

மேற்குறித்த வசனங்களில் அல்லாஹுத்தஆலா தனக்கு இரு கண்கள் இருப்பதை உறுதி செய்துள்ளான். அக்கண்களாவன எதார்த்தமானவையாகவும் அவனது அந்தஸ்திற்குத் தக்கனவாகவும் காணப்படுகின்றன.

உண்மையில் அல்குர்ஆனில் கண்ணைக் குறிப்பிடும் வார்த்தையான عين என்ற வார்த்தை அல்லாஹ்வின் பால் ஒருமையாகவும் பன்மையாகவும் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், சுன்னாவில் குறித்த வார்த்தை இருமையாகப் பயன்படுத்தப்பட்டள்ளது. சான்றாக:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'நிச்சயமாக உங்களுடைய இரட்சகன் ஒரு கண் குருடானவன் அல்லன்.” (புகாரி, முஸ்லிம்)

பொதுவாக, இப்படியான சந்தர்ப்பங்களில் அறபு மொழியில் எதன்பால் சேர்க்கப்பட்டுள்ளதோ அதன் நிலைகளைக் கருத்தில் கொண்டே சேர்க்கப்படும் விடயத்தை ஒருமையாகவோ அல்லது, இருமையாகவோ அல்லது, பன்மையாகவோ கருத்தில் கொள்ளப்படும்.

அந்த அடிப்படையில் அவ்வாசகம் ஒருமையான ஒன்றுடன் இணைக்கப்பட்டுக் கூறப்பட்டால் அவர்கள் - அறேபியர்கள் - ஒருமைப்படுத்துவார்கள். மாற்றமாகப், பன்மையுடன் வெளிப்படையாகவோ அல்லது, மறைமுகமாகவோ இணைக்கப்பட்டால் சொல்லுக்குத் தோதுவாக அதனைப் பன்மையாகக் கொண்டுவருவதே மிகச் சிறந்ததாகும். இவ்வடிப்படையிலேயே 'அது நமது கண்முன்னே சென்றது” என்ற வசனமும் 'நமது கைகள் செய்தவற்றிலிருந்து நிச்சயமாக நாமே அவர்களுக்காகக் கால்நடைகளைப் படைத்தோம்” (யாஸின்: 71) என்ற வசனமும் அமைந்துள்ளன.

அதேபோன்று, இருமையில் அமைந்து ஒரு பெயர்ச் சொல்லுடன் இணைந்து வரும் போது, மிகச் சரியான கருத்தின் அடிப்படையில் பன்மையாகக் கருதுவதே ஏற்புடையதாகும். இவ்வடிப்படையை மையமாக வைத்துப் பின்வரும் வசனம் அமைந்துள்ளது.

'ஏனெனில், உங்கள் இருவரின் உள்ளங்களும் (உண்மையை விட்டும்) சாய்ந்திருத்தன.” (அத்தஹ்ரீம்: 4) இவ்வசனத்தில் இரு உள்ளங்களைப் பற்றிப் போசப்பட்டுள்ளன. ஆனால், பயன்படுத்தப்பட்ட வார்த்தை பன்மை வார்த்தையாகும்.

எனவே, இவ்வடிப்படையை வைத்து பேசக்கூடிய ஒருவரின் வார்த்தையைச் செவிமடுப்பவர் ஒருபோதும் 'நாங்கள் எங்களுடைய கண்களைக் கொண்டு உன்னைப் பார்க்கிறோம்” என்று கூறும் போது ஒரு முகத்தில் பல கண்கள் உள்ளன என்றோ, 'எங்களுடைய கரங்களைக் கொண்டு நாம் உன்னைப் பிடிக்கிறோம்” என்று கூறும் போது ஓர் உடம்பில் பல கைகள் உள்ளன என்றோ விளங்கிக் கொள்வதில்லை.

மேற்குறித்த விளக்கங்ளைப் பின்வரும் நூட்களில் காணலாம்:

1.    இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அர்ரிஸாலதுல் மதனிய்யா (பக்கம்: 61)

2.    இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் பத்ஹு ரப்பில் பரிய்யா தல்ஹீஸுல் ஹமவிய்யா (பக்கம்: 71)

3.    அல்கவாகிபுல் ஜலிய்யா (பக்கம்: 253)

4.    இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் ஷர்ஹுல் அகீததில் வாஸிதிய்யா (1ஃ312)

5.    ஸாலிஹ் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்களின் ஷர்ஹுல் அகீததில் வாஸிதிய்யா (பக்கம்: 51)

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-     அபூஹுனைப்