வெள்ளிக்கிழமையில் அரபா தினம் ஏற்பட்டால் அத்தினத்தில் அரபா நோன்பு நோற்க முடியுமா?

بسم الله الرحمن الرحيم

அரபா நோன்பைப் பொறுத்தவரையில் அது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட ஒரு நோன்பாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்நோன்பு குறித்து கூறுகையில்: 'அது கடந்த வருடத்தின் பாவங்களுக்கும் வரக்கூடிய வருடத்தின் பாவங்களுக்கும் பரிகாரமாக அமையும்” என்றார்கள். (முஸ்லிம்)

அரபா தினம் வெள்ளிக்கிழமையில் ஏற்பட்டால் அதை நோற்க முடியுமா? என்பது பலருக்கும் சிக்கலான விடயமாக இருக்கின்றது. ஏனென்றால், வெள்ளிக்கிழமை மாத்திரம் தனியாக நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டது என்பதை அவர்கள் பின்வரும் ஹதீஸின் மூலம் புரிந்து கொண்டிருக்கின்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'முன்னால் ஒரு நாள் அல்லது பின்னால் ஒரு நாள் சேர்த்து நோன்பு நோற்காமல் வெள்ளிக்கிழமையில் மாத்திரம் தனியாக உங்களில் எவரும் நோன்பு நோற்க வேண்டாம்.” (புஹாரீ, முஸ்லிம்)

இந்த ஹதீஸ் பொதுவாகவே வெள்ளிக்கிழமையில் தனியாக நோன்பு நோற்கப்படுவது தடை என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. ஆகவே, அரபா நாள் வெள்ளிக்கிழமையில் ஏற்பட்டாலும் நாம் அதை நோற்கக்கூடாது. ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அரபாவுக்கு இவ்வாறான ஒரு விதிவிலக்கை வழங்கவில்லை என்று சில அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

ஆனாலும் அரபா, ஆஷுரா ஆகிய நோன்புகள் வெள்ளிக்கிழமையில் ஏற்பட்டால் அதை நோற்கலாம் என்பதே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தும் சரியான கருத்துமாகும். அதற்கான ஆதாரத்தையும் மற்றும் அறிஞர்களின் கருத்துக்களையும் இங்கு நாம் குறிப்பிட்டிருக்கின்றோம்.

வெள்ளிக்கிழமையில் நோன்பு நோற்கத் தடை குறித்து வந்த ஹதீஸைப் பொறுத்தவரையில் அது பொதுவாக அமைந்திருக்கின்றது. ஆனால், மேலும் சில ஹதீஸ்கள் எந்த அடிப்படையில் வெள்ளிக்கிழமையில் நோன்பு நோற்கக்கூடாது? இன்னும், வழமையாக நோன்பு நோற்பவரின் நோன்பு வெள்ளிக்கிழமையில் ஏற்பட்டால் நோற்கலாமா? என்பதைத் தெளிவுபடுத்தியதாக இடம்பெற்றிருக்கின்றன. அவற்றினுள் ஒரு ஹதீஸே பின்வரும் ஹதீஸாகும்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'இரவுகளில் வெள்ளிக்கிழமை இரவை மட்டும் இரவுத் தொழுகைக்காகத் தேர்ந்தெடுக்க வேண்டாம். தினங்களில் வெள்ளிக்கிழமை தினத்தை மட்டும் நோன்பு நோற்பதற்காகத் தேர்ந்தெடுக்க வேண்டாம். ஒருவர் (வழக்கமாக) நோன்பு நோற்கும் நாள் வெள்ளிக்கிழமையாக அமைந்துவிட்டாலே தவிர.” (முஸ்லிம்)

இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டே அறிஞர்கள் வெள்ளிக்கிழமையில் அரபா நோன்பு ஏற்பட்டால் நோற்க முடியும் என்று கூறியிருக்கின்றார்கள். ஏனெனில், இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருவர் தானாகவே வெள்ளிக்கிழமையை மாத்திரம் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்பதையே தடை செய்திருக்கின்றார்கள். அரபா மற்றும் ஆஷூரா தினங்களைப் பொறுத்தவரையில் அவை மனிதனால் குறிப்பாக்கப்படக்கூடிய, தேர்ந்தெடுக்கப்படக்கூடிய நாட்களாக இல்லை. மாறாக, அல்லாஹ்வின் நாட்டப்படி வெள்ளிக்கிழமையில் அவை ஏற்படுகின்றன. எனவே, வெள்ளிக்கிழமையில் அரபா நோன்பு நோற்பவர் அவராகவே வெள்ளிக்கிழமையைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்றவராகக் கருதப்படமாட்டார். முதலாவதாகக் கூறப்பட்ட ஹதீஸ் பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் நோன்பு நோற்பைத் தடை செய்திருந்தாலும் இரண்டாவது ஹதீஸ் எந்த அமைப்பில் நோன்பு நோற்கத் தடை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. ஆகவே, வெள்ளிக்கிழமை தினத்தை நாமாகத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்க முடியாது. மாறாக, நாம் வழமையாக ஒவ்வொரு வருடமும் நோற்று வருகின்ற நோன்பு வெள்ளிக்கிழமையில் அமைந்தால் அதை நோற்கலாம் என்பதை இந்த ஹதீஸ் எமக்குத் தெளிவுபடுத்துகின்றது. ஏனெனில், நாம் நோன்பு நோற்கும் நாள் வெள்ளிக்கிழமையாக அமைந்தால் அதை நோற்கலாம் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே கூறியிருக்கின்றார்கள்.

நாம் வழமையாக வருடந்தோறும் அல்லது மாதந்தோறும் அல்லது நாள்தோறும் நோற்கின்ற நோன்பு வெள்ளிக்கிழமையில் ஏற்பட்டால் அதன் தீர்வு என்ன? என்பது குறித்து ஸலபுஸ் ஸாலிஹீன்களில் உள்ள இமாம்கள், நவீன காலத்து அறிஞர்கள் கூறிய சில கருத்துக்களையும் பத்வாக்களையும் இங்கு நாம் பதிய வைத்திருக்கின்றோம்.

1. அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: "வழமையாக நோற்கும் நோன்பு வெள்ளிக்கிழமையில் எற்பட்டால் நோற்க முடியும். ஏனெனில், அவராகவே வேண்டுமென்றே வெள்ளிக்கிழமையைத் தனியாக நோன்பு நோற்பதற்குத் தெரிவு செய்யவில்லை.”

2. இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: "அரபா தினத்தில் மற்றும் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்க முடியும். அவை வெள்ளிக்கிழமையில் ஏற்பட்டாலும் சரியே!”

3. இப்னு ஹஸ்ம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: "ஒரு மனிதன் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்கக்கூடியவனாக இருந்தால், அவனுடைய ஒரு நோன்பு வெள்ளிக்கிழமையில் ஏற்பட்டாலும் அதை அவன் நோற்கட்டும்.”

4. இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் நாம் மேற்குறிப்பிட்ட முஸ்லிமில் பதிவு செய்யப்பட்ட ஹதீஸுக்குப் பின்வருமாறு விளக்கமளிக்கின்றார்கள்: "வெள்ளிக்கிழமைக்கு முன்னைய நாள் அல்லது பின்னைய நாள் நோன்பு நோற்பவருக்கு வெள்ளிக்கிழமை நோன்பு நோற்பது கூடுமாகும். அல்லது மாதத்தின் பிறை 13, 14, 15 ஆகிய தினங்களின் நோன்பு நோற்கும் வழமையுடைய ஒருவர் அத்தினங்களில் ஒன்றை வெள்ளிக்கிழமைக்கு உடன்பட்டதாகப் பெற்றுக் கொண்டால் நோன்பு நோற்க முடியும். அல்லது, அரபா போன்ற குறிப்பாக்கப்பட்ட தினங்களில் நோன்பு நோற்கும் வழமை இருந்தால் அது வெள்ளிக்கிழமையில் ஏற்பட்டாலும் அதை நோற்க முடியும்.”

இந்நான்கு இமாம்களின் கருத்துக்களையும் அல்முஹல்லா: 795, அல்முங்னீ: 3/165, அல்மஜ்மூஃ: 6/479, ஸாதுல்மஆத்: 2/86, பத்ஹுல்பாரீ: 4/233 ஆகிய நூட்களில் பார்க்கலாம்.

5. இப்னு குதாமா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: "ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்கும் ஒரு மனிதர் இருக்கின்றார். அவர் நோன்பை விடும் தினமாக வியாழக்கிழமையும் நோன்பு நோற்கும் தினமாக வெள்ளிக்கிழமையும் ஏற்படுகின்றது. மேலும், அவர் நோன்பை விடும் தினமாக சனிக்கிழமை அமைகின்றது. இவர் தனியாக வெள்ளிக்கிழமையில் நோன்பு நோற்றரவரா? இவர் வேண்டுமென்றே வெள்ளிக்கிழமையைக் குறிப்பாக்கவில்லை. மாறாக, வேண்டுமென்றே வெள்ளிக்கிழமையை குறிப்பாக்குவதே வெறுக்கப்பட்டது." (பார்க்க: அல்முங்னீ)

6. அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்: "வெள்ளிக்கிழமை நோன்பு நோற்பது வெறுக்கத்தக்கது. என்றாலும், பொதுவாகவே வெறுக்கப்பட்டதல்ல. யார் தானாக நாடி வெள்ளிக்கிழமையை மாத்திரம் நோன்பு நோன்பதற்குக் குறிப்பாக்குகிறாரோ அவருக்கே வெள்ளிக்கிழமையில் நோன்பு நோற்பது வெறுக்கத்தக்கதாகும். ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: வெள்ளிக்கிழமையை மாத்திரம் நோன்பு நோற்பதற்குத் தேர்ந்தெடுக்க வேண்டாம். இன்னும், அதன் இரவை மாத்திரம் இரவுத் தொழுகைக்காகத் தேர்ந்தெடுக்க வேண்டாம். ஆனால், ஒரு மனிதன் வெள்ளிக்கிழமையில் அவன் வழமையாக நோற்கும் நோன்பு உடன்பட்டதற்காக நோன்பு நோற்றால் அது விடயத்தில் அவருக்குக் குற்றமில்லை.” (மஜ்மூஉல் பதாவா, கிதாபுஸ் ஸியாம், பாகம்: 20)

7. அஷ்ஷெய்ஹ் பின்பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: "வெள்ளிக்கிழமையில் அரபா நோன்பு ஏற்பட்டால் அத்தினத்தில் மாத்திரம் அவன் நோன்பு நோற்பது குற்றமாகாது. ஏனெனில், இந்த மனிதர் அத்தினம் அரபா என்பதற்காகவே நோன்பு நோற்றார். வெள்ளிக்கிழமை என்பதற்காக அல்ல.” (பார்க்க: பதாவ பின்பாஸ்: 15/414)

- தொகுப்பு: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்