அஹ்லுஸ்ஸுன்னாவின் அகீதாவிலிருந்து – 03

بسم الله الرحمن الرحيم

21. அல்லாஹுத்ஆலா அர்ஷில் இருந்து கொண்டு உறங்காது படைப்பினங்களின் நிலமைகளை அறிவான். இன்னும், அவற்றின் வார்த்தைகளை கேட்கிறான். அவைகளின் செயல்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவற்றை அடக்கி ஆளுகிறான். மேலும், நிருவகிக்கிறான் என்று நாம் ஈமான் கொண்டுள்ளோம். ஏனெனில், அல்லாஹ் பின்வருமாறு கூறியிருக்கிறான்:

'என் அருமை மகனே! (உன் நன்மையோ, தீமையோ) அது கடுகின் வித்தளவாக இருந்து, அது ஒரு பாறைக்குள் அல்லது வானம் பூமியில் (மறைந்திருந்தாலும்) அவைகளை அல்லாஹ் கொண்டுவருவான். நிச்சயம் அல்லாஹ் மிக நுட்பமானவனும் நன்குணர்பவனுமாவான்.' (ஸூரா லுக்மான்-  31: 16)

'(நபியே!) உம்மிடம் தன் கணவனைப் பற்றி தர்க்கித்து அல்லாஹ்விடமும் முறைப்பட்ட (அப்பெண்ணின்) கூற்றை திட்டமாக அல்லாஹ் செவிமடுத்துவிட்டான்.' (ஸூரதுல் முஜாதலா- 58: 01)

'(நபியே!) நீங்கள் நின்று வணங்கும் போது  அவன் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.' (ஸூரதுஷ் ஷுஅரா - 26: 218)

'(...பின்பு அவன் அர்ஷின் மீது உயர்ந்து சகல காரியங்களையும் நிர்வகிக்கின்றான். அவனின் அனுமதிக்குப் பின்பே தவிர பரிந்துரைப்போர் எவரும் இல்லை.'  (ஸூரது யூனுஸ் - 10: 03)

22. 'அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியவனுக்கு ஆட்சியைக் கொடுக்கிறாய். இன்னும், நீ நாடியவரிடமிருந்து ஆட்சியை பிடுங்கிக் கொள்கிறாய்! இன்னும், நீ நாடியவனை கண்ணியப்படுத்துகிறாய்! மேலும், நீ நாடியவனை இழிவுபடுத்துகிறாய்! நன்மைகள் யாவும் உன் கைவசமே உள்ளன. நீ ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுள்ளவன்.' (ஸூரது ஆலஇம்ரான் - 03: 26) என்று  அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகளை மாற்று விளக்கம் கொடுக்காது  நம்புவோம்.

23. நாங்கள் ஜஹ்மிய்யாக்களில் உள்ள ஹுலூலிய்யாக்கள் கூறுவதைப் போன்று 'அல்லாஹ் படைப்புக்களுடன் பூமியில் இருக்கிறான்' என்று கூறமாட்டோம். மாறாக, அல்லாஹ் தன் தோற்றத்தில் அர்ஷில் இருந்து கொண்டு அறிவுடனும் கண்காணிப்புடனும் படைப்புக்களுடன் இருக்கிறான் என்று கூறி எந்த குர்ஆன் வசனங்களையும் மறுக்காது மாற்று விளக்கம் கொடுக்காது அவ்வசனங்களை அவ்வாறே நம்புவோம்.

24. ஹுலூலிய்யாக்களின் கூற்றான: 'அல்லாஹ் படைப்புக்களுடன் பூமியில் இருக்கிறான்' என்ற கூற்றை யார் கூறுகிறாரோ அவர் காபிர் மற்றும் வழிகெட்டவர் என்று ஸலபிகளான நாங்கள் கூறுவோம். ஏனெனில், அவன் அல்லாஹ்வுக்குத் தகுதியற்ற குறையான ஒன்றைக் கொண்டு அல்லாஹ்வை வரணித்தான் என்பதற்காகவேயாகும்.

25. நாங்கள் (மறைவானவற்றில் உள்ளடங்கக்கூடிய) அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள் விடயத்தில் அல்லாஹ்வும், அவனின் தூதர் முஹம்மத் நபி صلى الله عليه وسلم அவர்களும் எவைகளை உறுதிப்படுத்தினார்களோ அவைகளை அப்படியோ உறுதிப்படுத்துவோம். எவைகளை அவ்விருவரும் மறுத்தார்களோ அப்படியானவைகளை நாங்களும் மறுப்போம். அதேபோல் அவ்விருவரும் எந்த விடயங்களிள் மௌனமாக இருந்தார்களோ அப்படியான விடயங்களில் நாங்களும் மௌனமாக இருப்போம்.

உதாரணம்: 01

அல்லாஹ்வுக்கு இரு கண்கள், பாதம், விரல்கள், இரண்டு கைகள் (அவ்விரண்டும் வலது கைகள்) உள்ளன போன்றவை. இன்ஷா அல்லாஹ். இவை தொடர்பான விரிவான விளக்கம் பின்னர் இடம்பெறவுள்ளது.

உதாரணம்: 02

அல்லாஹ்வுக்கு சிறு தூக்கம், பெருந்தூக்கம், மனைவி, பிள்ளை, படைப்புக்களிடம் குறையுள்ளதாகக் கருதப்படும் அனைத்து விடயங்கள் போன்றன இருக்காது. இன்ஷா அல்லாஹ். இவை தொடர்பான விரிவான விளக்கம் பின்னர் இடம்பெறவுள்ளது.

உதாரணம்: 03

அல்லாஹ்வுக்கு காது உள்ளதா? இல்லையா? நகங்கள் உள்ளனவா? இல்லையா? போன்றன தொடர்பான ஆராய்ச்சி. இன்ஷா அல்லாஹ். இவை தொடர்பான விரிவான விளக்கம் பின்னர் இடம்பெறவுள்ளது.

அதேபோல் நாங்கள் மேலே குறிப்பிடப்பட்ட அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் விடயத்தில் எந்த ஒரு திரிவும் செய்யாமலும் உரிய கருத்தைக் கொடுக்காது மறுக்காமலும் எந்த ஓர் அமைப்பையும் கற்பிக்காமலும், படைப்பினங்களில் எந்த ஒன்றிற்கும் ஒப்பிட்டுக் காட்டாமலும் அவ்விருவரும் கூறியது போன்று நாங்களும் கூறுவோம்.

திரிவுபடுத்தலுக்கு உதாரணம்: அல்லாஹ்வின் முகம் என்றால் அல்லாஹ்வின் கூலி என்று சரியான கருத்தைக் கொடுக்காது வேறுகருத்துகளைக் கொடுப்பது.

மறுத்தலுக்கு உதாரணம்: அல்லாஹ்வின் முகம் என்பது வெறும் மூன்று எழுத்துக்களைக் கொண்ட ஒரு சொல். கருத்துக்கிடையாது. அல்லது, அதற்கு எமக்குக் கருத்துத் தெரியாது, அல்லாஹ் மாத்திரம் தான் அறிவான் போன்ற கருத்துக்களைக் கூறுவது.

அமைப்பு கற்பித்தலுக்கு உதாரணம்: அல்லாஹ்வின் முகம் என்றால் அது இப்படித்தான் இருக்கும் என்று கூறுவது.

உவமித்தலுக்கு உதாரணம்: அல்லாஹ்வின் முகம் என்றால் அது மனிதனின் முகத்தைப் போன்றது அல்லது, குறித்த படைப்பின் முகத்தைப் போன்றது என்று ஒப்பிட்டுக் காட்டுவதாகும்.

இந்த நான்கையும் நன்றாகக் கட்டாயம் பிரித்து விளங்கிக் கொள்ளுங்கள்! வழிதவறி வழிகேட்டில் செல்லாதீர்கள்!

26. நாங்கள் அல்லாஹ்வும் நபி  صلى الله عليه وسلم அவர்களும் அறிவித்தவைகளை ஈமான் கொள்வோம். நபி صلى الله عليه وسلم கூறினார்கள்: 'எம் றப்பான  அல்லாஹ்வாகிய அவன் ஒவ்வோர் இரவும் அதன் மூன்றில் கடைசிப் பகுதி எஞ்சியிருக்கும் நிலையில் உலகத்தின் வானத்திற்கு இறங்குகிறான். (அவ்வாறு) இறங்கி, யார் என்னை அழைக்கிறாரோ அவருக்கு நான் விடையளிப்பேன். இன்னும், யார் என்னிடம் கேட்கிறானோ அவருக்கு நான் கொடுப்பேன். மேலும், யார் என்னிடம் பாவமன்னிப்பு வேண்டுகிறாரோ அவருக்கு நான் மன்னிப்பு வழங்குவேன்' என்று அல்லாஹ் கூறுவதாக  நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுறைரா رضى الله عنه , ஆதாரம்: புஹாரி - 1145, முஸ்லிம் - 168)

அல்லாஹ்வின் செயல்சார்ந்த பண்புகள்

01 - 'இறங்குதல்'

இந்த ஹதீஸ் மூலம் ஸலபிகளாகி நாங்கள் அல்லாஹ்வுக்கு 'இறங்குதல்' என்ற செயல் சார்ந்த பண்பு இருக்கிறது என்று உறுதிப்படுத்துவதுடன், அல்லாஹ் அர்ஷில் இருந்து கொண்டு ஒவ்வொரு இரவினதும் மூன்றில் ஒரு பகுதியான கடைசிப் பகுதியில் அடிவானத்திற்கு இறங்குகிறான் என்றும் ஈமான் கொள்கின்றோம். மேலும், எங்கள் புத்திகளை அல்லாஹ்வுடன் தொடர்புபட்ட விடயங்களில் நுழைக்கமாட்டோம். ஹதீஸ் ஸஹீஹாக இருந்தால் அப்படியே ஈமான் கொள்வோம்.

27. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

02 - 'வருதல்'

நாங்கள் அல்லாஹுதஆலா மறுமை நாளில் அடியார்களிக்கு மத்தியில் தீர்ப்புக் கூறுவதற்காக வருவான் என்று நம்பி, 'வருதல்' என்ற செயல்சார்ந்த பண்பை அல்லாஹ்வுக்கு உறுதிப்படுத்துவோம்.

ஏனெனில், அல்லாஹ் ஸூரதுல் பஜ்ரின் 89: 21- 23 ஆகிய வசனங்களில் கூறுகிறான்: 'அவ்வாறல்ல பூமி துண்டு துண்டாகத் தகர்க்கப்பட்டு நொறுக்கப்படும் போது, மலக்குமார்கள் அணியணியாக நின்று கொண்டிருக்க உமது றப்பு வருவான்.’

அந்நாளில் நரகம் கொண்டுவரப்படும். அந்நாளில் தான் மனிதன் உணர்வு பெறுவான். அவ்வுணர்வு அவனுக்கு எப்படிப் பயனளிக்கும்?

28. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

03 - 'விரும்புதல்'

நாங்கள் அல்லாஹ்வுக்கு 'விரும்புதல்' என்ற செயல் சார்ந்த பண்பு இருக்கிறது என்று நம்புவோம். ஏனெனில், அல்லாஹ்  ஸூரது ஆலஇம்ரான் 31 ஆம் வசனத்தில் 'நீங்கள் அல்லாஹ்வை விரும்புபவர்களாக இருந்தால் (நபியாகிய) என்னைப் பின்பற்றுங்கள் (அப்படிப் பின்பற்றினால்) அவன் உங்களை விரும்புவான் என்று நபியே நீ கூறுவீராக!' என்று அல்லாஹ் கூறுகிறான்.

29. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

04 - 'பொருந்திக் கொள்ளுதல்'

நாங்கள் அல்லாஹ்வுக்கு 'பொருந்திக் கொள்ளுதல்' என்ற செயல் சார்ந்த பண்பு இருக்கிறது என்று நம்புவோம். ஏனெனில், அல்லாஹ்  ஸூரதுல் பைய்யினாவில்  98: 8 ஆம் வசனத்தில் கூறும் போது: 'அல்லாஹ்வும் அவர்களைப் பொருந்திக் கொண்டான். அவர்களும் (அல்லாஹ்வாகிய) அவனைப் பொருந்திக் கொண்டார்கள் ' என்று கூறுகிறான்.

30. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

05 - 'கோபப்படுதல்'

நாங்கள் அல்லாஹ்வுக்குக் 'கோபப்படுதல்' என்ற செயல் சார்ந்த பண்பு இருக்கிறது என்று நம்புவோம். ஏனெனில், அல்லாஹ் ஸூரதுந் நிஸா 04: 93 ஆம் வசனத்தில் கூறும் போது: 'யார் வேண்டுமென்று ஒரு முஃமினை கொலை செய்கிறாரோ அவனின் கூலி நரகமாகும். அதில் நிரந்தரமாக இருப்பான். மேலும், அவன் மீது அல்லாஹ் கோபப்படுவான்' என்று தனக்குக் கோபம் என்ற பண்பை உறுதிப்படுத்துகிறான்.

-       இன்ஷா அல்லாஹ் தொடரும்.

- தொகுப்பு: அஹ்ஸன் இப்னு அபீபக்கர்