பெருநாள் வாழ்த்துத் தெரிவித்தல் கூடுமா?

بسم الله الرحمن الرحيم

கேள்வி: இன்று மனிதர்களின் நாவுகளில் இருந்து வெளிப்படக்கூடிய பெருநாள் வாழ்த்துக்களாக இருக்கக்கூடிய ஈத் முபாரக் போன்ற வார்த்தைகளுக்கு மார்க்கத்தில் ஏதாவது அடிப்படை உள்ளதா? அப்படி ஓர் அடிப்படை இருந்தால் எப்படியான வார்த்தைகள் அதன் நிமித்தமாகக் கூறப்பட வேண்டும் என்பது பற்றிய மார்க்கத்தீர்ப்பை எங்களுக்கு வழங்குங்கள்! நீங்கள் நற்கூலி கொடுக்கப்படுவீர்கள்!

பதில்: ஷைஹுல் இஸ்லாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: 'பெருநாள் தொழுகையைத் தொடர்ந்து சிலர் சிலரை சந்திக்கும் போது தகப்பலல்லாஹு மின்னா வமின்கும், அஹாலல்லாஹு அலைக்க போன்ற வார்த்தைகளைக் கொண்டு வாழ்த்துத் தெரிவிப்பதைப் பொறுத்தளவில் அது தொடர்பான செய்திகள் நபித்தோழர்களில் உள்ள ஒரு சாராரைத் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளன. அவர்கள் அவ்வாறு சொல்லக் கூடியவர்களாக இருந்துள்ளார்கள். இமாம் அஹ்மத் மற்றும் அவரல்லாத இமாம்கள் இது விடயத்தில் சலுகை அளித்துள்ளார்கள். என்றாலும், இமாம் அஹ்மத் அவர்கள் கூறும் போது: ‘என்னைப் பொறுத்தளவில் நான் ஒருவருடனும் பெருநாள் வாழ்தைக் கொண்டு (பேச்சை) ஆரம்பிக்கமாட்டேன். மாற்றமாக, யாராவது ஒருவர் என்னுடன் பெருநாள் வாழ்த்தைக் கொண்டு (பேச்சை) ஆரம்பித்தால் நான் அவருக்கு பதில் வாழ்த்துக் கூறுவேன். ஏனெனில், வாழ்த்துக்கு பதிலளிப்பது வாஜிபாகும். வாழ்த்தைக் கொண்டு (பேச்சை) ஆரம்பிப்பது ஏவப்பட்ட சுன்னாவுமன்று தடைசெய்யப்பட்ட விடயமுமன்று. எனவே, எவர் அதனில் ஈடுபடுகின்றாரோ அவரில் முன்மாதிரி உண்டு. மேலும், எவர் அதனை விட்டுவிடுகிறாரோ அவரிலும் முன்மாதிரி உண்டு’ என்கிறார்கள். அல்லாஹ் மிக அறிந்தவன்.” (மஜ்மூஉல் பதாவா: 24/253)