அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை தொடர் – பகுதி 3

கதரிய்யாக்கள்

அறிமுகம்:

‘கதர்’ என்னும் அறபுப் பதத்திற்கு ‘விதி’ என்று பொருளாகும். இதனடிப்படையில் விதியை மறுப்பவர்களே ‘கதரிய்யாக்கள்’ என்று அழைக்கப்பட்டனர். ஸகாப்பாக்களின் இறுதிக்காலத்தில் மஃபத் அல் ஜூஹனி என்பவனால் இக்கொள்கை உலகில் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது, ஈராக் நாட்டின் பஸரா நகரத்தின் ஆளுநராக இருந்த ஹஜ்ஜாஜ் இப்னு யூஸூப் என்பவரால் இவன் கொலை செய்யப்பட்டான். இக்கொள்கை கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த ஸோஸான் என்பவன் வழியாகவே மஃபத் அல் ஜூஹனிக்குக் கிடைத்தது.

இமாம் அவ்ஸாஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ‘முதன் முதலில் விதியைப் புறக்கணித்துப் பேசியவன் ஸோஸான் என்பவனே, இவன் ஈராக் நாட்டைச் சார்ந்த கிறிஸ்தவன் ஆவான். இவன் இஸ்லாத்தைத் தழுவி இஸ்லாத்தில் சிறிது காலம் இருந்துவிட்டு மீண்டும் மதம்மாறி கிறிஸ்தவ மதத்தில் இணைந்து கொண்டான்.

எனவே, ஸோஸான் வழியாக இக்கொள்கை முறையே மஃபத் அல் ஜூஹனிக்கும் அவனிடமிருந்து டமஸ்கஸ் நகரத்தைச் சார்ந்த கயலான் என்பவனுக்குத் கிடைத்தது. பின்னர் இக்கொள்கை பரிணாமம் பெற்று உலகின் பல நாடுகளிலும் பரவ ஆரம்பித்தது. (அஷ் ஷரீஆ: 243)

கொள்கை:

பின்வரும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டார் கதரிய்யாக்களாவர்.

1. உலகில் நடைபெறுகின்ற செயல்கள் அனைத்தும் அல்லாஹ்வின் கற்பனைக்கோ அல்லது அவனது அறிவுக்கோ அப்பாற்பட்டதாகும்.
2. எல்லாச் செயல்களும் நடைபெற்று முடிந்த பின்னரே அவன் அவைகளைப் பற்றி அறிந்து கொள்கிறான்.

இமாம் ஷாபி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ‘செயல்கள் நடைபெறாதவரை அவைகளை அல்லாஹ் அறியமாட்டான் என்று கூறுபவர் கதரிய்யாக்களைச் சார்ந்தவராவார்.’ (அல்லாலகாஈ: 4:701)

இமாம் அபூ ஸவ்ர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ‘மனிதனது செயல்களை அல்லாஹ் படைக்கவில்லை. மற்றும், பாவச் செயல்களை அல்லாஹ் மனிதன் மீது விதியாக்கவோ அவைகளைப் படைக்கவோ மாட்டான் என்று கூறுபவர்களே கதரிய்யாக்களாவர்.’

கதரிய்யாக்களின் கொள்கையில் ஏற்பட்ட மாற்றம்:

இமாம் குர்துபி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ‘இக்கொள்கை காலப்போக்கில் அழிந்துவிட்டது. இன்று இக்கொள்கையைப் பின்னபற்றுபவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இன்று உலகில் உள்ள கதரிய்யாக்களைப் பொறுத்தவரை ‘கருமங்கள் நடைபெற முன்னால் அல்லாஹ் அவைகளைத் தெரிந்து வைத்துள்ளான்’ என்ற முதலாவது அடிப்படையில் அஹ்லுஸ் ஸூன்னாவுடன் உடன்படுகின்றனர். எனினும், ‘மனிதனுடைய செயல்கள் இறைவனால் கற்பிக்கப்பட்டு விட்டன, ஆனால், அவைகள் மனிதன் புறத்திலிருந்து தனியாக நடைபெறுகின்றன, இறைவன் அவைகளைப் படைப்பதில்லை’ என்ற தமது கொள்கையில் அஹ்லுஸ் ஸூன்னாவுடன் மாறுபடுகின்றனர். இவர்கள் ஆரம்ப காலத்தில் இருந்த கதரிய்யாக்களைவிட கொள்கையில் சிறிது தெளிவுடையவர்களாக இருந்தாலும் அன்றைய கதரிய்யாக்களும் இன்றைய கதரிய்யாக்களும் அசத்தியத்திலேயே நிலைத்திருக்கின்றனர்.

கதரிய்யாக்கள் தொடர்பான மார்க்கத் தீர்ப்பு:

நம் முன்னோர்களான ஸலபு ஸாலிஹீன்கள் கதரிய்யாக்கள் இறை நிராகரிப்பாளர்களா? அல்லது இறை விசுவாசிகளா? என்பது பற்றிக் கருத்துத் தெரிவிக்கும் போது, ‘அல்லாஹ்வின் அறிவைப் புறக்கணிப்பவர்கள் இறை நிராகரிப்பாளர்களே. எனினும், மனிதனுடைய செயல்களை அல்லாஹ் படைப்பதில்லை அவைகள் நடைபெற முன்னர் அல்லாஹ் அவற்றை அறிந்து வைத்திருக்கிறான் என்போர் இறை நிராகரிப்பாளர்களல்லர்’ என்கின்றனர்.

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்களின் புதல்வரான அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது: ‘எனது தந்தையிடம் கதரிய்யாக்கள் இறை நிராகரிப்பாளர்களா? என்று வினவப்பட்டது. அதற்கவர்கள், நடைபெற இருக்கின்ற செயல்கள் பற்றி அல்லாஹ் அறியமாட்டான் என்று கூறி அல்லாஹ்வுடைய அறிவைப் புறக்கணித்தால் அவர்கள் இறை நிராகரிப்பாளர்களே என்று பதிலுரைத்தார்கள்.

இமாம் மர்வஸீ (ரஹ்) அவர்கள் கூறுவதாவது: இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்களிடம் கதரிய்யாக்கள் பற்றிக் கேட்டபோது அல்லாஹ்வின் அறிவைப் புறக்கணிக்காதவர்கள் இறை நிராகரிப்பாளர்களல்லர் என்றார்.

மேற்கூறப்பட்ட கருத்தை இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கீழ்வருமாறு தெளிவுபடுத்துகிறார்கள்: விடயங்கள் நடைபெற முன்னர் அவைகளை அல்லாஹ் அறியமாட்டான், அவ்வாறான விடயங்களை அவன் லௌஹூல் மஹ்பூளில் பதிவு செய்து வைக்கவில்லை என்று கூறுபவர்கள் இறை நிராகரிப்பாளர்களே. என்றாலும் விடயங்கள் நடைபெற முன்னர் அல்லாஹ் அவற்றை அறிந்து வைத்துள்ளான். எனினும், அவற்றை அல்லாஹ் படைப்பதில்லை என்று கூறுபவர்கள் இறை நிராகரிப்பாளர்களல்லர் என்கிறார். (மஜ்மூஉல் பதாவா: 3: 352)

இமாம் இப்னு ரஜப் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது: கதரிய்யாக்கள் இறை நிராகரிப்பாளர்களா? இல்லையா ? என்பதில் மார்க்க அறிஞர்களின் மத்தியில் முரண்பட்ட கருத்துக்கள் உள்ளன. இமாம் ஷாபிஈ (ரஹ்) இமாம் அஹ்மத் (ரஹ்) போன்றோர் அல்லாஹ்வின் அறிவைப் புறக்கணிப்பவர்கள் இறை நிராகரிப்பாளர்கள் ஆவர் என்று தெளிவாகக் கூறியுள்ளார்கள் என்கிறார். (ஜாமிஉல் உலூம் பக்கம்: 26)

கதரிய்யாக்களின் புதிய பரிநாமம்:

இஸ்லாமிய வரலாற்றில் பிரபலமாக இருந்த கதரிய்யாக்கள் மறைந்து விட்டனர். எனினும், முஃதஸிலாக்கள் இவர்களது அடிப்படைக் கொள்கைகளைப் பாதுகாத்து வருகின்றனர். எனவே தான் முஃதஸிலாக்கள், கதரிய்யாக்கள் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டு வருகின்றனர். (முஃதஸிலா: பக்கம்:40)

முர்ஜிஆக்கள்

அறிமுகம்:

முர்ஜிஆ என்பது ‘இர்ஜாஃ’ என்ற பதத்திலிருந்து பிறந்த சொல்லாகும். இதற்கு அறபு மொழியில் ‘பிற்படுத்துதல்’, ‘ஆதரவு வைத்தல்’ போன்ற கருத்துக்கள் உள்ளன. (அல்மிலல் வந்நிஹல்: 139)

கொள்கை:

முர்ஜிஆக்களின் கொள்கை தொடர்பாக இமாம் அஹ்மத் இப்னு அன்பல் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது : ‘ஈமான் என்பது, கலிமாவை நாவினால் மொழிவது மாத்திரமாகும். மனிதர்கள் மத்தியில் ஈமானின் தரத்தில் வித்தியாசம் கிடையாது. எனவே, மனிதர்கள் நபிமார்கள், மலக்குகள் அனைவருடைய ஈமானும் ஒரே தரத்தையுடையதாக இருக்கும். மேலும், ஈமான் கூடவோ குறையவோ மாட்டாது. இன்னும், எவரேனும் கலிமாவை தனது நாவினால் மாத்திரம் கூறி விசுவாசம் கொண்டு (அமல் செய்யாவிடினும் கூட) அவர் உண்மையான முஃமின் ஆவார். மேலே சொல்லப்பட்ட கருத்துக்களையும் கொள்கைகளையும் கொண்டோர் முர்ஜிஆக்கள் எனப்படுவர்’ என்கிறார். மேற்கூறப்பட்ட முர்ஜிஆக்களது கருத்துக்களைப் பார்க்கும் போது, ‘ஈமானுக்கும் அமலுக்கும் இடையில் எந்த உறவும் இல்லை’ என்ற கருத்தை அவர்கள் கூறுகின்ற காரணத்தினால், இறைநிராகரிப்பாளர்களுக்கு தாம் செய்த நல்லறங்கள் பயனளிக்காதது போன்று முஃமின்களுக்கும் தமது பாவச் செயல்கள் எந்தத் தீங்கும் செய்யாது என்று நம்பிக்கை கொள்வதே இவர்களது கோட்பாடாக உள்ளது என்பதை புரிய வைக்கின்றது.

வகைகள்:

இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: முர்ஜிஆக்கள் மூன்று வகைப்படுவர்.

1. ஈமான் என்பது உள்ளத்தில் இருக்கின்ற நம்பிக்கையாகும் என்போர் முதலாம் வகையினர். இவர்களில் பெரும்பாலானோர் ஈமானுக்கும் அமலுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு என்கின்றனர். எனினும், மற்றும் சிலர் ஈமானுக்கும் அமலுக்கும் எந்தத் தெடர்பும் இல்லை என்கின்றனர். மேலே குறிப்பிட்ட இரண்டாது கருத்தையே ‘ஜஹம் இப்னு ஸப்வான்’ என்பவனும் அவனைப் பின்பற்றியோரும் ஏற்றுக் கொண்டிருந்தனர்.

2. ஈமான் என்பது கலிமாவை நாவினால் மொழிவது மாத்திராகும். இவர்கள் ‘கராமிய்யாக்கள்’ என்று அழைக்கப்படுகின்றனர்.

3. ஈமான் என்பது கலிமாவை நாவினால் மொழிந்து அதனை உள்ளத்தல் விசுவாசம் கொள்வதை மட்டுமே குறிக்கும் என்போர் மூன்றாவது வகையினர், இவர்கள் ‘முர்ஜிஅதுல் புகஹா’ என்று அழைக்கப்படுவர்.

முர்ஜிஆக்கள் தொடர்பான மார்க்கத் தீர்ப்பு:

முர்ஜிஆக்கள் முஸ்லிம்களா? அல்லது இறை நிராகரிப்பாளர்களா? என்ற நிலைப்பாட்டில் கீழ்வரும் கருத்துக்கள் காணப்படுகின்றன: இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறுவதாவது: ‘… முர்ஜிதுல் புகஹாக்கள் பற்றிய தீர்ப்பும் அவ்வாறுதான். இவர்களுடைய பித்அத்துக்கள் புகஹாக்களுடைய பித்அத்களைச் சார்ந்தவைகளோ! அவை இறை நிராகரிப்பை ஏற்படுத்தக் கூடியவைகளல்ல என்பதில் மார்க்க அறிஞர்களுக்கிடையே கருத்து முரண்பாடுகள் காணப்படவில்லை. ஆயினும், இவர்களுடைய பித்அத்துக்கள் இறை நிராகரிப்பை ஏற்படுத்தக் கூடியவைகளே என சில மார்க்க அறிஞர்கள் கருதுகின்றனர், இது மிகவும் தவறான கருத்தாகும். அமல்கள் ஈமான் சார்ந்ததல்ல என்கிற இவர்களது கருத்து குப்ரை ஏற்படுத்தக் கூடியது என்று சில அறிஞர்கள் கூறினர். எனினும், அமல்களை விட்டுவிடுதல் அல்லது அலட்சியம் செய்தல் ஈமானின் கடமையை விட்டுவிடுவதாகக் கருதப்படுமே தவிர ஈமானைப் புறக்கணிப்பதாகக் கருதப்படமாட்டாது. முர்ஜிஆக்களில் சிலர் மறுமையில் தண்டனை வழங்கப்படும் என்கிற விடயத்தைப் புறக்கணிக்கின்றனர். இன்னும் சிலர், அல்குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் யதார்த்தமாக நடைபெற முடியாத சில தண்டனைகளைக் கூறி மனிதர்களை அச்சுறுத்துவதாகக் கூறுகின்றனர். இவ்வாறு மறுமையில் வழங்கப்படும் தண்டனையைப் புறக்கணிக்கும் கூட்டத்தினர் இறை நிராகரிப்பாளர்களாவர். (மஜ்மூஉல் பதாவா: 20:104)

இன்ஷா அல்லாஹ் தொடரும்

by: ABU HUNAIF MUHAMMAD HISHAM