அறுப்புப் பிராணிகளை அறுக்கும் போது அவசியம் கிப்லாவை முன்னோக்க வைத்துத்தான் அறுக்க வேண்டுமா?

بسم الله الرحمن الرحيم

உண்மையில் இது விடயத்தில் கூடிய கரிசனை காட்டுவது தொடர்பாக ஏவக்கூடிய எவ்வித ஸஹீஹான செய்திகளும் நபியவர்களைத் தொட்டும் இடம்பெறவில்லை.

குறித்த விடயம் தொடர்பாக சில செய்திகள் ஆயிஷா, ஜாபிர், இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹும் ஆகியோரைத் தொட்டும் பதிவாகியுள்ளன. ஆயினும், அவை அனைத்தும் விமர்சனத்திற்குள்ளானவையாகக் காணப்படுகின்றன.

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கும் ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் உபைத் இப்னு காலிப் என்ற ஒருவர் இடம்பெறுகின்றார். அவர் ஹதீஸ்கலை அறிஞர்களினால் விடப்பட்டவராவார்.

மற்றும், ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களது ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் இரு குறைகள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று யார் என்று அறிமுகமில்லாத ஒரு நபர் இடம்பெறுவதும் மற்றையது இப்னு இஸ்ஹாக் என்பவரின் அன்அனா என்ற தொடரமைப்பு அறிவிப்பு முறை காணப்படுவதுமாகும். இன்னும், இப்னு இஸ்ஹாக் இருட்டடிப்புச் செய்யக்கூடியவராகவும் இருக்கின்றார்.

மேலும், இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் இப்னு ஜுரைஹ் என்பவரின் அன்அனா என்ற தொடரமைப்பு அறிவிப்பு முறை காணப்படுகின்றது. அதனால் இச்செய்தியும் தன் உறுதிநிலையை இழந்துவிடுகிறது.

எனவே, இது போன்ற காரணங்களை மையமாக வைத்து மேற்கூறப்பட்ட செய்திகள் யாவும் பலவீனம் என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

மாற்றமாக, இது விடயத்தில் குறித்த அம்சத்தைத் தவிர்த்து பல செய்திகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் நபியவர்கள் கிப்லாவை முன்னோக்கும் விடயத்தைப் பேணியதாக இடம்பெறவில்லை. எடுத்துக்காட்டாக:

நபியவர்கள் உழ்ஹிய்யாவின் போது கருப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் கலந்த இரு செம்மெறி ஆடுகளைத் தனது கரத்தால் அறுத்ததாகவும் அதன்போது தனது காலை அவற்றின் புறப்பகுதியின் மீது வைத்ததாகவும் பிறகு பிஸ்மில்லாஹ் அல்லாஹு அக்பர் என்று கூறி அறுத்ததாகவும் இடம் பெற்றுள்ளது. (அறிவிப்பவர்: அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: (புகாரி முஸ்லிம்) ஆனால், குறித்த செய்தியில் நபியவர்கள் கிப்லாவை முன்னோக்க வைத்து அவற்றை அறுத்ததாக இடம்பெறவில்லை. மேலும், அவ்வாறு நபியவர்கள் செய்திருந்தால் நிச்சயம் அவர்களது தோழர்கள் அதனை அறிவித்திருப்பார்கள். ஏனெனில், அதனை விடவும் அற்பமான விடயங்களை கிப்லா தொடர்பில் அவர்கள் அறிவித்திருக்கின்றார்கள். அந்தவிதத்தில், கிப்லாவின் திசையில் துப்புதல் கூடாது, மலசல தேவைகளை நிறைவேற்றும் போது கிப்லாவை முன்னோக்கவோ பின்னோக்கவோ கூடாது போன்றவற்றைக் குறிப்பிடலாம். அத்தோடு நபித்தோழர்களைப் பொருத்தளவில் அவர்கள் நபியவர்களில் இருந்தும் தாம் கண்டவற்றை மற்றும் கேட்டவற்றை அறிவிப்பதில் மிக்க ஆர்வமுடையவர்களாக இருந்திருக்கிறார்கள்.

அதேபோன்று நபியவர்கள் ஒரு சமயத்தில் தனது கரத்தால் 63 ஒட்டகங்களை அறுத்திருக்கிறார்கள். (புகாரி முஸ்லிம்) அதன் போது குறித்த ஒட்டகங்களின் இடது கையின் மணிக்கட்டுகளை அதனதன் புயங்களுடன் கட்டியதாகவும் நிற்கவைத்து அறுத்தாகவும் இடம் பெற்றுள்ளது. ஆனால், இதுபோன்ற எச்செய்தியிலும் நபியவர்கள் கிப்லாவை முன்னோக்க வைத்து அறுத்ததாக இடம்பெறவில்லை.

மேலும், நபியவர்கள் தனது மனைவிகளுக்காக மாட்டை உழ்ஹிய்யா கொடுத்திருக்கிறார்கள். அதன் போதும் கூட கிப்லாவை முன்னோக்க வைத்ததாக இடம்பெறவில்லை.

எனவே, அறுப்புப் பிராணியை அறுக்கும் போது கிப்லாவை முன்னோக்க வைப்பதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது என்பதை நல்ல முறையில் புரிந்து கொண்டிருப்பீர்கள். மேலும், இம்முடிவை அமுல்நடாத்துகையில் பொது மக்களில் பலரும் எமது அறுப்பையிட்டு விசனம் தெரிவிப்பார்கள். அவர்களை அனுகி கனிவான முறையில் அறுப்புப் பிராணிகளை எத்திசையை நோக்கியும் அறுக்கலாம். கிப்லாவை நோக்க வைத்து அறுப்பதற்கு சுன்னாவில் எவ்வித உறுதியான ஆதாரமும் இல்லை என்று விளக்கம் கொடுக்க வேண்டும்.

- பார்க்க: 'அல்கன்ஸுஸ் ஸமீன் பில் இஜாபதி அலா அஸ்இலதி தலபதில் இல்ம் வஸ்ஸாஇரீன்” பகுதி – 03