சூனியத்தை உண்மைப்படுத்துதல் என்றால் என்ன?

بسم الله الرحمن الرحيم

கேள்வி: 'மூவர் (உள்ளனர், அவர்கள்) சுவனம் நுழையமாட்டார்கள். (அத்தகையோர்) தொடர்ந்தேர்ச்சியாக மதுபானம் அருந்துபவரும் உறவு முறையைத் துண்டித்து நடப்பவரும் சூனியத்தை உண்மைப்படுத்துபவரும் (ஆவர்)” என்ற செய்தி எந்தளவு உறுதிமிக்கது? மேலும், சூனியத்தை உண்மைப்படுத்துதல் என்ற செயல் எவ்வாறு நிகழும்? (அவ்வாறு உண்மைப்படுத்துதென்பது) சூனியக்காரனின் ஆற்றலைக் கொண்டு (அமையுமா?) அல்லது சூனியம் செய்யப்பட்டவர் தான் முன்பைவிட வித்தியாசமாகக் காணும் அம்சத்தைக் கொண்டு (அமையுமா?)

பதில்: (மேற்குறிப்பிடப்பட்ட) ஹதீஸைப் பொருத்தளவில் இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்களும் இமாம் இப்னு ஹிப்பான் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது ஸஹீஹ் எனும் நூலிலும் இடம்பெறச் செய்துள்ளார்கள். மேலும், இமாம் ஹாகிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறித்த செய்தி ஸஹீஹ் எனும் தரத்தைப் பெறுவதாகவும் அதற்கு இமாம் தஹபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது ஒப்புதலை அளித்துள்ளதாகவும் இடம்பெற்றுள்ளது.

மேற்குறித்த ஹதீஸில் “சூனியத்தை உண்மைப்படுத்துதல்” என்று இடம் பெற்ற வாசகத்தின் கருத்தாவது: இச்செய்தியில் பொதுவாக எல்லா வகையான சூனியங்களையும் உண்மைப்படுத்துபவர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அதனில் உள்ளடங்கும் அம்சம் தான் நட்சத்திர சாஸ்திரமாகும். ஏனெனில், நபியவர்கள் கூறினார்கள்: 'யார் நட்சத்திரம் தொடர்பான அறிவில் இருந்தும் ஓர் அறிவைப் பெற்றுக் கொள்கிறாரோ, அவர் சூனியத்தில் நின்றும் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டவராவார். இவ்வாறு எடுக்கும் பகுதிகள் அதிகரிக்க அதிகரிக்க சூனியத்தில் நின்றும் எடுக்கும் பகுதிகள் அதிகரித்துக் கொண்டே செல்லும்.” (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா, நூல்: அபூதாவுத்)

சூனியத்தை உண்மைப்படுத்துதல் என்ற செயல் மகத்தான குற்றமாகவும் மிகப்பெரிய பாவத்தை ஈட்டித்தரக்கூடியதாகவும் இருக்கும். எனவே, இதுவிடயத்தில் எமது பொறுப்பானது சூனியக்காரர்கள் மற்றும் நட்சத்திர சாஸ்திரம் சொல்பவர்கள் போன்றோரைப் பொய்ப்பிப்பதும் அவர்களைத் தடுப்பதுமாகும். மேலும், இம்மோசமான செயலில் ஈடுபடக்கூடிய நபர்களைக் கையோடு பிடித்து உரியவர்களிடத்தில் ஒப்படைத்து ஆவன செய்வதுமாகும். ஏனெனில், அவர்கள் இதன் மூலம் படைப்பினங்களை வழிசறுகச் செய்கிறார்கள். மக்களுக்குத் தமது செயல்களை அலங்கரித்துக் காட்டி ஏமாற்றுகிறார்கள். மற்றும் அவர்களது அகீதாவை சீர்குழைக்கிறார்கள்.

சூனியம் என்பது குர்ஆன் சுன்னாவில் இடம்பெற்ற பிரகாரம் இறைநிராகரிப்பான காரியமாகும். இத்தகைய செயலில் ஈடுபடக்கூடியவர்களைக் கொலை செய்வது வாஜிப் ஆகும். இப்படியிருக்க சூனியக்காரர்களை உண்மைப்படுத்துவதென்பது அவர்களுக்கு உடன்பட்டதற்குச் சமனான காரியமாகும். இன்னும், அவர்களுடைய அசிங்கமான சம்பாத்தியத்தை அங்கீகரித்ததாகவும் அமையும்.

சூனியத்தின் தாக்கம் மற்றும் அதன் மூலம் ஏற்படும் விளைவுகளைப் பொருத்தளவில் அவை நிகழக்கூடியவையே! அதன் மூலம் தாக்கம் என்ற ஒன்று நிகழும். கொலை உண்டாகும். நோய் ஏற்படும். கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிவு உண்டாகும். மற்றும் மனிதர்களுக்கு மத்தியில் குழப்பத்தைக் கூட விளைவிக்கும்.

சூனியக்காரன் மற்றும் நட்சத்திர சாஸ்திரம் கூறுபவன் போன்றவர்கள் கூறும் எதிர்காலத்துடன் தொடர்புடைய மறைவான விடயங்களை உண்மைப்படுத்துவது கடும் எச்சரிக்கைக்கும் பெரும் பாவத்திற்கும் பாத்திரமான செயலாக அமையும். நபியவர்கள் கூறினார்கள்: 'யார் சாஸ்திரம் கூறக்கூடியவனிடத்தில் சென்று அவன் கூறக்கூடியவற்றை உண்மைப்படுத்துகின்றாரோ அவர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸஸல்லம் அவர்கள் மீது இறக்கியருளப்பட்டதை நிராகரித்தவராகக் கருதப்படுகின்றார்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா, நூல்: அஹ்மத்)

-     பதிலளித்தவர்: அஷ்ஷெய்க் ஸாலிஹ் இப்னு பவ்ஸான் இப்னி அப்தில்லாஹ் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ்.

-     தமிழில்: அபூஹுனைப்