அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை தொடர் – பகுதி 2

குறிப்பு (1), குறிப்பு (2)

‘ஹிதாயத்’ என்ற வார்த்தை இரு கருத்துக்களில் பயன்படுத்தப்படும்:
1. ‘அத்தலாலா வல்பயான்’
2. ‘அத்தவ்பீக் வல் இல்ஹாம்’

‘அத்தலாலா வல்பயான்’ என்பது, நேர்வழியை தெளிவுபடுத்தும் பணியாகும். இப்பணியை நபியவர்கள் மேற்கொள்வார்கள். இதனை அல்லாஹூத்தஆலா பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தில் பிரஸ்தாபிக்கின்றான்.

(நபியே!) நிச்சயமாக நீர் (மனிதர்களுக்கு) நேரான வழியின் பால் வழிகாட்டுவீர். (அஷ்ஷூரா:52)

‘அத்தவ்பீக் வல் இல்ஹாம்’ என்பது, நேர்வழியை வழங்கும் பணியாகும். இப்பணியை அல்லாஹூத்தஆலாவைத் தவிர வேறு எவராலும் செய்ய முடியாது. இது குறித்து அல்லாஹூத்தஆலா பின்வருமாறு கூறுகின்றான்.

(நபியே!) நிச்சயமாக நீர் விரும்பியோரை நேர் வழியில் செலுத்திவிடமாட்டீர், எனினும் அல்லாஹ் தான் நாடியோரையே நேர் வழியில் செலுத்துகின்றான். மேலும், நேர்வழி பெறுகிறவர்களை அவனே மிக அறிந்தவன். (அல்கஸஸ்: 56)

(1) பொருள்:

அடுத்து, இது மறுமை நாள்வரை வெற்றி மற்றும் உதவி பெறக்கூடிய கூட்டத்தின் கொள்கையாகும்.

(2) விளக்கம்:

(أما بعد) இவ்வாசகமானது ஒரு விடயத்திலிருந்து மற்றொரு விடயத்திற்கு நகரும் போது உபயோகிக்கப்படும்;. நபியவர்களின் வழிமுறை என்ற அடிப்படையில் இவ்வாசகத்தை அழைப்புப் பணியில் ஈடுபடக்கூடிய அனைவரும் உபயோகிப்பது கடமையாகும்.

(فهذا) இவ்வாசகத்தின் மூலம், இந்நூலில் இடம்பெற்றிருக்கக்கூடிய அனைத்து அகீதா சார்ந்த அம்சங்களும் நாடப்படுகின்றன.

(اعتقاد) இச்சொல் اعتقد என்ற மூலச் சொல்லில் இருந்து பிறந்ததாகும். اعتقد என்பது ஒரு விடயத்தை கொள்கையாக – அகீதா – எடுத்துக் கொள்வதாகும். எனவே, அகீதா என்பது, ‘ஒருவர் ஒரு விடயத்தை மனதால் ஏற்றுக் கொள்ளல்’ என்ற மையக்கருத்தை உணர்த்துகின்றது. இவ்வார்த்தையின் மூலச் சொல் கயிற்றால் ஒரு பொருளை பிணைத்துக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டது. பின்பு இதே வாசகம் ஒரு விடயத்தை உள்ளத்தால் உறுதியாக நம்புவதற்குப் பயன்படுத்தப்பட்டது.

(الفرقة) கூட்டம், அமைப்பு என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

(الناجية) இப்பண்பானது இன்பங்கள் பல பெற்று இன்மையிலும் மறுமையிலும் அழிவு, மற்றும் தீங்குகளை விட்டும் ஈடேற்றம் பெற்ற ஒரு கூட்டத்தைக் குறிக்கின்றது. மேலும், இப்பண்பானது புகாரி, முஸ்லிம் ஆகிய கிரந்தங்களில் இடம்பெற்றுள்ள ஒரு ஹதீஸில் இருந்து பெறப்பட்டதாகும். அந்த செய்தியின் தமிழ் வடிவமானது, ‘என்னுடைய உம்மத்தில் ஒரு கூட்டம் உதவி பெறும் நிலையில் உண்மையில் நிலைத்திருப்பார்கள். அல்லாஹூத்தஆலாவின் (மறுமை தொடர்பான) கட்டளை அவர்களுக்கு மத்தியில் வரும் வரை உதவி புரியாது விட்டுவிட்டவர்களினால் எவ்விதத் தீங்கும் இழைக்க முடியாது.

(المنصورة) அதாவது, இக்கூட்டத்தினருக்கு மாறு செய்பவர்களைவிட்டும் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு கூட்டமாக இருக்கும் என்ற கருத்தைக் கொடுக்கின்றது. இத்தகைய பல சிறப்பியல்புகளைத் தன்னகத்தே கொண்ட கூட்டம் எது? என்ற விடயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் பலவாறான கருத்துக்கள் காணப்படுகின்றன. அந்த அடிப்படையில் பின்வரும் கூற்றுக்களை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகின்றேன்.

- அக்கூட்டமானது அஹ்லுல் ஹதீஸினரைக் குறிக்கின்றது : இக்கருத்தை அறிஞர்களான யஸீத் இப்னு ஹாரூன், அஹ்மத் இப்னு ஹன்பல், இப்னுல் முபாரக், அலீ இப்னு மதீனி, அஹ்மத் இப்னு ஸினான், புகாரி (ரஹ்) போன்றோர் கூறுகின்றனர்.

- அக்கூட்டமானது அரேபியர்களைக் குறிக்கின்றது : இக்கருத்தை இப்னு மதீனி (ரஹ்) அவர்கள் பிறிதோர் அறிவிப்பில் கூறியுள்ளார்.

أهل

குறிப்பு (1)

- ‘அக்கூட்டமானது முஃமீன்களில் உள்ள அனைத்து குழுவினரையும் உள்ளடக்கியதாக இருக்கும். அதனடிப்படையில், முஃமீன்களில் உள்ள போராளிகள், இஸ்லாமிய சட்டக்கலை அறிஞர்கள், ஹதீஸ்களை அறிஞர்கள், அல்குர்ஆன் விரிவுரையாளர்கள், நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பவர்கள், இஸ்லாம் கூறும் துறவறத்தைப் பேணுபவர்கள் மற்றும் வணக்கஸ்தாரிகள் உள்ளிட்ட பல்வேறுபட்ட குழுவினரை தன்னகத்தே கொண்டதாக இருக்கும். மேலும், அவர்கள் அனைவரும் ஒரே நாட்டில் ஒன்றாக வேண்டும் என்ற நிபந்தனையும் கிடையாது. அவர்கள் ஓரிடத்திலோ அல்லது உலகின் பல பாகங்களிலோ பரந்து வாழலாம். இன்னும், அவர்கள் அனைவரும் ஒரே பிரதேசத்தில் ஒன்றாக வாழ வேண்டும் என்ற நிபந்தனையும் கிடையாது. மாற்றமாக, அவர்கள் அனைவரும் கடைசியில் ஒன்று சேரும் வரை தத்தம் பிரதேசங்களில் உள்ளவர்களோடு மாத்திரம் தொடர்புள்ளவர்களாகக் கூட இருக்கலாம்.’ இக்கருத்தை இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

- இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறும் போது: அக்கூட்டமானது பைதுல் முகத்தஸ்ஸில் இருக்கும் என்றும் அவர்கள் அனைவரும் ஷாம் வாசிகளாகவும் ஜிஹாத் செய்வதற்கு ஆற்றல் படைத்தவர்களாகவும் இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார். (பத்ஹூல் பாரி)

- இந்த ஹதீஸ் தொடர்பாக ‘பத்ஹூல் மஜீத்’ இன் ஆசிரியர், ‘அஷ்ஷேய்க் அப்துர் ரஹ்மான் இப்னு ஹஸன் ஆலி ஷெய்க்’ (ரஹ்) அவர்கள் கூறும் போது: ‘அக்கூட்டத்தினர் சொற்ப தொகையினராக இருந்தும் கூட அவர்களை ஒதுக்கியவர்களினாலும் அவர்களுடன் முரண்பட்டுச் சொன்றவர்களினாலும் எவ்விதத் தீங்கும் செய்ய முடியாது போய்விடும். இந்நிலை அவர்கள் என்றென்றும் முழுமையாக உண்மையில் நிலைத்திருப்பவர்கள் என்ற நன்மாராயத்தை தெரிவிக்கக்கூடியதாக இருக்கின்றது’ என்கிறார்.

நிச்சயமாக இத்தகைய நன்மாராயத்தைப் பெற்ற கூட்டம் ‘அஹ்லுஸ் ஸூன்னத் வல் ஜமாஅத்’ ஆகத்;தான் இருக்க வேண்டும் என்பதை இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களே மேற்குறிப்பிடப்பட்ட அறபி வாசகத்தின் ஈற்றில் கூறியுள்ளார். அது தொடர்பான விரிவான விளக்கத்தை பிறகு காண்போம்.

(إلى قيام الساعة) இவ்வாசகத்தின் மூலம் ‘அவர்கள் மரணிப்பதற்கான வேளை வரும் வரை’ என்ற பொருள் நாடப்படுகின்றது. அவ்வேளையானது முஃமின்கள் மற்றும் காபிர்கள் என்ற பிரிவினருக்கு ஏற்ற விதத்தில் அமைந்திருக்கும். முஃமின்களைப் பொருத்தளவில் அவர்களை நோக்கி ஒரு மெல்லிய காற்று வீசப்படும். அதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரினதும் உயிர்கள் கைப்பற்றப்படும். ஈற்றில் உலகில் கெட்டமனிதர்கள் மாத்திரம் எஞ்சியிருக்கும் நிலையில் மறுமை ஏற்படும். இதனைப் பின்வரும் நபிமொழிகளின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

‘பூமியில் ‘அல்லாஹ்’ ‘அல்லாஹ்’ என்று சொல்வதற்குக் கூட ஒருவரும் இல்லாது போகும் வரை மறுமை ஏற்படமாட்டாது.’ (முஸ்லிம்) பிறிதோர் அறிவிப்பில், ‘பிறகு அல்லாஹூத்தஆலா ஒரு காற்றை அனுப்புவான், அக்காற்றானது ‘மிஸ்க்’ எனும் வாடையை உடையதாகவும் பட்டைவிட மென்மையானதாகவும் இருக்கும். மேலும், அக்காற்றானது உள்ளத்தில் அணுவாளவு கூட ஈமான் உள்ள எவரையும் விட்டுவைக்காது. இறுதியில் கெட்ட மனிதர்கள் மாத்திரம் எஞ்சியிருக்கும் நிலையில் மறுமை ஏற்படும். (முஸ்லிம், ஹாகிம்)

குறிப்பு (1)

(أهل) இங்கு أهل என்ற வாசகத்தை கஸ்ரு (ـــِ) செய்தும் ரப்உ (ـــُ) செய்தும் வாசிக்கலாம். கஸ்ரு செய்து வாசித்தால் முன்பு வசனத்தில் இடம்பெற்ற فِرْقَة (கூட்டம்) என்பதற்குப் பகரமாக வந்துள்ளது என்றும், ரப்உ செய்து வாசித்தால் மறைமுகமாக هم (அவர்கள்) என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டு விளக்கமாக வந்துள்ளது என்றும் கூற முடியும்.

السنة

குறிப்பு (1)

விளக்கம்:

குறிப்பு (1)
இச்சொல்லுக்குப் ‘பாதை’ என்று பொருளாகும். அப்பாதையானது நபியவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றை அடியொட்டியதாக இருக்கும். இங்கு ‘அஹ்லுஸ் ஸூன்னத்’ (ஸூன்னாவை சார்ந்தவர்கள்) என்பதின் மூலம் அக்கூட்டத்தாருக்கும் ஸூன்னாவுக்கும் இடையிலான தொடர்பை பிரதிபளிக்கச் செய்கின்றது. மாற்றமாக, பித்அத்வாதிகளுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்களைப் பொருத்தளவில் அவர்களின் குணாதிசயங்களுக்குத் தக்கவாறு அவைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில், அவர்களில் சிலர் தாங்கள் புரிகின்ற பித்அத்களை மையமாகக் கொண்டு அழைக்கப்படுகின்றனர். இதற்கு உதாரணமாக கதரிய்யாக்களையும் முர்ஜிய்யாக்களையும் குறிப்பிடலாம். மேலும் சிலர், தாங்கள் பின்பற்றுகின்ற தலைவர்களை அடிப்படையாகக் கொண்டு அழைக்கப்படுகின்றனர். இதற்கு ஜஹ்மிய்யாக்கள் சிறந்த உதாரணமாகும். வேறு சிலர், தாங்கள் புரிகின்ற மோசமான செயல்களைக் கொண்டு அழைக்கப்படுகின்றனர். இதற்கு உதாரணமாக றாபிழாக்களையும் ஹவாரிஜ்களையும் கூறலாம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்

by: ABU HUNAIF MUHAMMAD HISHAM