ஷவ்வால் மாத ஆறு நாட்கள் நோன்பின் சட்டம் என்ன?

بسم الله الرحمن الرحيم

விடை: ஷவ்வால் மாத ஆறு நாட்கள் கொண்ட நோன்பை நோற்பது அதிகமான அறிஞர்களின் கருத்துக்களின்படி விரும்பத்தக்கதாகும். இக்கருத்தை ஷாபிஈ, அஹ்மத் ஆகிய மத்ஹபைச் சார்ந்தவர்கள் சரி கண்டிருக்கின்றனர். இதுவே சரியான கருத்துமாகும். ஏனென்றால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'யார் ரமழான் மாதத்தில் நோன்பு நோற்று பின்பு அதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நாட்கள் நோன்பு நோற்கிறாரோ, அது காலம் முழுவதும் நோன்பு நோற்றதைப் போன்றதாகும்” என்று கூறினார்கள். (முஸ்லிம்: 1164)

இமாம்களான மாலிக், அபூஹனீபா ஆகியோர் ஷவ்வால் மாத நோன்பை வெறுக்கத்தக்கது என்று கூறியிருக்கின்றார்கள். இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் 'அறிஞர்களில் யாரும் இந்நோன்பை நோற்றதாக நான் காணவில்லை” என்று காரணம் கூறுகின்றார்கள். இந்நோன்பை விரும்பத்தக்கது என்று கூறினால் அதனை எவராவது வாஜிப் என்று புரிந்து கொள்வார், எனவே இந்நோன்பு வெறுக்கத்தக்கது என்றும் அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

முன்னால் குறிப்பிடப்பட்ட ஹதீஸை விடுவதற்கும் அதனைக் கொண்டு அமல் செய்யாமலிருப்பதற்கும் இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கூற்று ஆதாரமல்ல. இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்களுக்கு இந்த ஹதீஸ் கிடைத்திருக்காது என்று இப்னு அப்தில்பர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள். இக்கருத்தை முன்வைத்தவர்கள் கூறிய இரு காரணங்களையும் பொறுத்தவரையில் ஆதாரங்களுக்கு அவை முரண்படுகின்றன. எனவே, ஷவ்வால் மாத நோன்பு நோற்பது விரும்பத்தக்கதாகும் என்பதே சரியான கருத்தாகும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

-    பார்க்க: பத்ஹுல் அல்லாம்: 2/707, அல்முங்னீ: 4/438, அல்மஜ்மூஉ: 6/379, சுபுலுஸ்ஸலாம்: 4/157.

-    தொகுப்பு: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்.