ஸகாதுல் பித்ருடைய சட்டங்கள் – 02

بسم الله الرحمن الرحيم

ஸகாதுல் பித்ரை அதனுடைய பெறுமதியை வைத்து பணமாக வழங்கலாமா?

பெரும்பாலான அறிஞர்களின் கருத்து ஸகாதுல் பித்ரை பணமாக வழங்க முடியாது என்பதேயாகும். இக்கருத்தை அஹ்மத், மாலிக், ஷாபிஈ ஆகியவர்களின் மத்ஹபுகளைச் சார்ந்த கருத்துமாகும்.

அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: 'உணவைத்தவிர வேறொன்றிலும் ஸகாதுல் பித்ர் கடமையாகாது. அதனைப் பெறுமதியாக வழங்குவதும் கூடாது. ஏனென்றால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரீச்சம்பழத்திலிருந்து ஒரு சாஉ அல்லது வாற்கோதுமையிலிருந்து ஒரு சாஉ அளவை கடமையாக்கினார்கள். அபூஸஈத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: 'நாங்கள் ஸகாதுல் பித்ரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் உணவிலிருந்து ஒரு சாஉ அளவாக வழங்கினோம்.

எனவே, எவருக்கும் ஸகாதுல் பித்ரை திர்ஹமாகவோ ஆடையாகவோ விரிப்புக்களாகவோ வழங்க முடியாது. மாறாக, அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நாவினூடாக எதனைக் கடமையாக்கினானோ அதனை வழங்குவதே கடமையாகும். பணமாக வழங்கலாம் என்ற கருத்தை நல்ல ஒரு விடயமாகக் கருதியவர்களின் நலவை நாம் கருத்தில் கொள்ளக்கூடாது. ஏனென்றால், மார்க்கம் அபிப்பிராயங்களைத் துயர்ந்து வரக்கூடியதல்ல. மாறாக, அது ஞானமிக்க யாவற்றையும் அறிந்தவனிடமிருந்து வந்தாகும். அல்லாஹ் மிக்க அறிந்தவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கின்றான். ஸகாதுல் பித்ர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நாவினூடாக உணவிலிருந்து சாஉ அளவு கடமையாக்கப்பட்டிருப்பதனால் எங்களுடைய புத்திகள் பணமாக வழங்குவதை சரியாகக் கருதினாலும் அதைவிட்டு வேறொன்றின்பால் செல்ல முடியாது. மாறாக, தனது புத்தி மார்க்கத்திற்கு முரணான விடயங்களை சரியாகக் கருதினால் அப்புத்தியை சந்தேகம் கொள்வதுதான் ஒரு மனிதனுக்கு கடமையாகும்.” (மஜ்மூஉல் பதாவா)

ஆகவே, இது விடயத்தில் பெரும்பாலான அறிஞர்களின் கருத்தின்படி ஸகாதுல் பித்ரை பெறுமதியாக வழங்க முடியாது. மேலும், அவ்வாறு வழங்குவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னாவுக்கு முரணான அம்சமுமாகும்.

ஸகாதுல் பித்ராக வழங்கப்படும் உணவின் அளவு யாது?

ஸகாதுல் பித்ராக வழங்கப்படும் உணவு ஒரு சாஉ அளவாகும். இதையே மேற்குறிப்பிடப்பட்ட இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் ஹதீஸ் தெரிவிக்கின்றது.

ஒரு சாஉ என்பது நான்கு முத்துகளாகும். ஒரு முத்து என்பது நடுத்தரமான ஒரு மனிதனின் இரு கைகளால் அள்ளினால் எவ்வளவு இருக்குமோ அதுவேயாகும். அதனடிப்படையில் ஒரு சாஉ என்பது நடுத்தரமான மனிதனின் கைகளால் அள்ளப்படும் பொருளின் நான்கு மடங்கேயாகும். இந்த அளவு சுமார் மூன்று கிலோவாகும் என்று சஊதி பத்வாக்குழு தீர்ப்பு வழங்கியிருக்கின்றது. இன்னும் சிலர் அது 2176 கிராம் என்றும் கூறியிருக்கின்றனர். இன்னும் சிலர் அது 2751 கிராம் என்றும் கூறியிருக்கின்றனர்.

நடுத்தரமான மனிதரின் கையளவு ஒருவருக்கொருவர் வேறுபடுகின்ற காரணத்தினாலேயே அறிஞர்கள் இவ்வாறு கிராமுடைய அளவில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னாவின்படி கைகளினால் அளந்து கொடுப்பதே மிகச் சிறந்ததாகும். என்றாலும், ஒவ்வொருவருடையதும் கையளவு வித்தியாசப்படுகின்ற காரணத்தினால் இன்னும் அதன் சரியான அளவை கணக்கிட முடியாததன் காரணமாகவும் அதனை சுமார் இரண்டரைக் கிலோவாக அளந்து கொடுப்பதில் குற்றமில்லை என்று கூறலாம்.

ஸகாதுல் பித்ர் கடமையாகும் ஆரம்ப நேரம் எது?

இமாம் நவவீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: 'எங்களிடத்தில் சரியான கருத்தின்படி பெருநாள் இரவன்று சூரியன் மறைவதுடன் ஸகாதுல் பித்ர் கட்டாயமாகிறது. இக்கருத்தையே அஸ்ஸவ்ரீ, அஹ்மத், இஸ்ஹாக் ஆகிய அறிஞர்கள் கூறியிருக்கின்றார்கள். அபூஹனீபா அவர்கள் பெருநாள் தினத்தில் பஜ்ர் உதயமானதுடன் அது கடமையாகும் என்று கூறியிருக்கின்றார்கள். (ஷர்ஹுல் முஹத்தப்: 6/141-142)

பெருநாள் இரவன்று சூரியன் மறைவதுடன் ஸகாதுல் பித்ர் கடமையாகும் என்பதே சரியான கருத்தாகும். ஏனென்றால், ஸகாதுல் பித்ர் என்பது நோன்பை நிறைவு செய்தவற்காக வழங்கப்படும் தர்மமேயாகும். அதனடிப்படையில் நோன்பு பெருநாள் இரவு சூரியன் மறைவதுடன் ஆரம்பமாகிறது. எனவே, அந்த நேரத்திலிருந்தே ஸகாதுல் பித்ர் கடமையாகும்.

பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகைக்குப் பின் ஸகாதுல் பித்ரை வழங்குவதின் சட்டம் என்ன?

அதிகமான அறிஞர்கள் அதனைப் பெருநாள் தொழுகைக்கு முன் முற்படுத்தி வழங்குவதுதான் மிகச்சிறந்தது என்றும் யாராவது அதே தினத்தில் பெருநாள் தொழுகைக்கப் பின் வழங்கினாலும் அதில் குற்றம் இல்லை என்றும் கூறியிருக்கின்றார்கள்.

தாவூத் அள்ளாஹிரீ, இப்னு ஹஸ்ம் போன்ற அறிஞர்கள் தொழுகைக்கு முன்பு ஸகாதுல் பித்ர் வழங்கப்பட வேண்டும் என்றும் யாராவது தொழுகைக்குப் பின் அதனை வழங்கினால் ஸகாதுல் பித்ரை உரிய நேரத்தில் வழங்காத பாவத்தை அவர் சுமந்து கொள்வார் என்றும் கூறியிருக்கின்றார்கள். இக்கருத்தை அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களும் சரிகண்டிருக்கின்றார்கள். இதுவே சரியான கருத்தாகும். ஏனென்றால், இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள்: 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதர்கள் தொழுகைக்குப் புறப்பட முன் அதனை நிறைவேற்றுமாறு ஏவினார்கள்.”

இன்னும், பெருநாள் தினம் கழிந்து அடுத்து வரக்கூடிய நாட்களில் இதனை நிறைவேற்றினாலும் அது அனுமதிக்கப்படாத பாவத்திற்குரிய ஒரு செயலாகும் என்பதையும் அதிகமான அறிஞர்கள் கூறியிருக்கின்றார்கள்.

பார்க்க: அல்முங்னீ (4/298), அல்மஜ்மூஃ (6/142), அஷ்ஷர்ஹுல் மும்திஃ (6/171)

ஸகாதுல் பித்ரை அது கடமையாகும் நேரத்திற்கு முன் வழங்குவதின் சட்டம் என்ன?

இதுவிடயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து முரண்பாடுகள் உள்ளன. மிகவும் சரியான கருத்து தேவைப்படும்போது உரிய நேரத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் முன்பு அதனை வழங்கலாம். ஏனென்றால், சிலவேளை ஏழைகள் தூர இடங்களில் வசிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். இவ்வாறான அவசியமான நிலை இல்லாதபோது உரிய நேரத்திலேயே அது வழங்கப்பட வேண்டும்.

இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் ஸகாதுல் பித்ரை அதனை சேமிப்பவரிடம் பெருநாளுக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பே வழங்கியதாக புஹாரீ மற்றும் முவத்தா போன்ற கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸஹாபாக்கள் இரண்டு நாட்களுக்கு முற்படுத்தி வழங்கியது ஸகாதுல் பித்ரை ஒன்று சேர்த்துக்கொள்வதற்கேயாகும், மாறாக இரண்டு நாட்களுக்கு முன்பு  ஏழைகளுக்கு அவர்கள் வழங்கிவிட்டதாக எந்தச் செய்தியும் இடம்பெறவில்லை. இக்கருத்தை இமாம் புஹாரீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியிருக்கின்றார்கள். எனவே, ஸகாதுல் பித்ரை ஒன்று சேர்த்துக்கொள்வதற்காக பெருநாளுக்கு முன் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன் வழங்குவதில் தவறில்லை என்பதற்கே இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் ஹதீஸ் ஆதாரமாக அமைகின்றது.

-    தொகுப்பு: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்