அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை தொடர் – பகுதி 1

முன்னுரை:

எல்லாம் வள்ள நாயன் அல்லாஹூத்தஆலாவைப் போற்றிப் புகழ்ந்தவனாக, இறுதித் தூதர் கண்மணி நாயகம் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் மீதும், அன்னாருடைய குடும்பத்தினர் மீதும், அன்னாருடைய வாழ்க்கை வழிமுறைகளை அப்படியே பின்பற்றிய ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபஉத்தாபயீ;ன்கள் மற்றும் முஃமினான முஸ்லிமான நல்லடியார்கள் அனைவர் மீதும் என்றென்றும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

இவ்வாக்கம் ‘ஷைஹுல் இஸ்லாம் இப்னு தைமியா’ (ரஹ்) அவர்களின் நூலான ‘அல் அகீததுல் வாஸிதிய்யா’ வின் விரிவுரையாகும். இஸ்லாம் பல நம்பிக்கை சார்ந்த அம்சங்களைத் தன்னகத்தே கொண்ட மார்க்கமாகும். அவ்வம்சங்களைப்பற்றி ஒவ்வொரு இஸ்லாமியனும் அறிந்திருப்பது இன்றியமையாத ஒன்றாகும். அதற்கான முயற்சிகள் புத்திஜீவிகளினாலும் அறிஞர்பெருமக்களினாலும் காலத்திற்குக் காலம் மேற்கொள்ளப்படவேண்டும்.

அம்முயற்சிகள் நனிசிறக்கும் உரைகளாகவோ எழுத்துருப்பெற்ற நூட்களாகவோ சஞ்சிகைகளாகவோ மொழிபெயர்ப்புக்களாகவோ இருக்கலாம். இத்தகைய முயற்சிகள் அற்றுப்போகும் பட்சத்தில் எம் சமூகத்தினர் துடுப்பற்ற ஓடம்போலாகிவிடுவர்.

இம்முயற்சியின் ஓரங்கமாக எனது இந்த விளக்கவுரை இருக்கும் என நினைக்கின்றேன். எம் முன்னோர்களில் பலர் உருக்குலைந்த இந்த அகீதாவை தர்க்கவாதிகள் மற்றும் வழிகேடர்கள் கரங்களில் இருந்து மீட்டி எமக்கு தெளிவுபடுத்தித்தந்துள்ளார்கள். புத்திக்கு முதலிடம் கொடுத்து இஸ்லாத்தை அரட்டை அரங்கமாக மாற்றியவர்களின் நாவை அடக்கிய அவர்களின் பணிகள் போற்றத்தக்கவை அல்லாஹ் அவர்களுக்கு அருள்புரியட்டும்.

இத்தகைய செயல் வீரர்கள் பட்டியலில் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் பிரதானமானவராவார். இஸ்லாத்தைத் தூய்மைப்படுத்தும் பணியில் இவர் ஆற்றிய சேவைகள் எண்ணிடங்காது. அவற்றின் அடையாளச் சின்னங்களே எம்மத்தியில் தவலக்கூடிய அவரின் நூட்களாகும். இத்தகைய நூட்கள் அவர் வாழ்ந்த காலத்தில் காணப்பட்ட வழிகேடர்களுக்கு மாத்திரமல்லாது அவை என்றென்றும் வரலாற்றில் தோன்றக்கூடிய பகுத்தறிவுவாதிகளுக்கு சாவுமணியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இதனைக் கருத்தில் கொண்டே அன்னாரின் நூட்களில் ஒன்றான இந்நூலை விளக்கவுரைக்காக எடுத்துக்கொண்டுள்ளேன். இந்நூல் தம்மை அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினரைச் சார்ந்தவர்கள் என்று பறைசாட்டிக்கொண்டு அவர்களின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக நடக்கின்றவர்களுக்கு சிறந்த தெளிவாக இருக்கும். அதிலும் குறிப்பாக அல்லாஹ்வின் திருநாமங்கள் பண்புகள் விடயத்தில் தெளிவற்றுக்கிடப்பவர்களுக்கும் சிறந்த முன்மாதிரி நூலாக இருக்கும் எனக் கருதுகின்றேன்.

எனது இவ்விளக்கவுரையை அறிஞர்களின் கருத்துக்களுக்கு முதலிடமளித்து அமைத்துள்ளேன். இந்த நூலை வியாக்கியானம் செய்த அறிஞர்களின் விளக்கவுரைகளை மயிற்கட்களாகக்கொண்டே என்பிரயானத்தை ஆரம்பித்துள்ளேன். இப்பணியைப் பூரணமாக நிறைவேற்றி முடித்திட எல்லாம் வள்ள நாயன் அல்லாஹ் துனை புரிவானாக.

அல் அகீததுல் வாஸிதிய்யா நூலின் ஆசிரியர்ஷைஹுல் இஸ்லாம் இப்னு தைமியா’ (ரஹ்) அவர்கள் பற்றிய குறிப்பு:

இவரின் பெயர் ‘அஹ்மத்’ ஆகும். இவரின் தந்தையின் பெயர் ‘அப்துல் ஹலீம்’ ஆகும். இவரின் பாட்டனார் ‘அப்துஸ்ஸலாம்’ ஆவார். இவரின் பூட்டனார் ‘தைமியா’ ஆவார். மேலும், இவர் ஹிஜ்ரி 661ம் ஆண்டு ரபீஉல் அவ்வல் மாதம் 10ந் நாள் ‘ஹர்ரான்’ என்ற இடத்தில் பிறந்தார். பின்பு தனது குடும்பம் சகிதம் ‘திமஸ்ஸுக்’ நகரை நோக்கிப் புறப்பட்டு அங்கேயே வாழ்ந்து வந்தார்.

இமாமவர்கள் மிகப்பெரிய அறிஞராகவும் பிரசித்திபெற்ற போராளியாகவும் இருந்தார்கள். இவர் உயிர்வாழும் காலத்தில் தனது சிந்தனை, அறிவு, தேகம் ஆகியவற்றைக் கொண்டு அல்லாஹ்வின் மார்க்கத்திற்காகப் போராடக்கூடியவராக இருந்தார். மேலும், இமாமவர்கள் அறிவின் உச்சநிலையை அடைந்திருந்தார்கள். தனக்கு மார்க்கத்திலிருந்து தெளிவான விடயங்களை செயலுருப்படுத்துவதில் மிகவும் துணிச்சல் மிக்கவராகக் காணப்பட்டார்;. இதனால் இவருக்கு அதிகமான விரோதிகள் காணப்பட்டனர்.

இவரின் பிற்பட்ட கால வரலாற்றில் இவருக்கு ஆட்சியாளர்களால் பல இடைஞ்சல்கள் நிகழ்ந்தன. பலமுறைகள் சிறையில் அடைக்கப்பட்டார். ஈற்றில் ஹிஜ்ரி 728ம் ஆண்டு ஸவ்வால் மாதம் 20ந் நாள் ‘திமஸ்க்’ கோட்டையில் சிறைவாழ்க்கை அனுபவித்துக் கொண்டிருக்கையில் மரணத்தைத் தழுவினார். அல்லாஹ் அன்னாரது பாவங்களை மன்னித்து சுவனபதியில் நுழையச் செய்வானாக.

இது இமாமவர்களின் அகீதா தொடர்பான பிரதான நூலாகும். அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள், பண்புகள், மற்றும் அல்லாஹ்வையும் மறுமைநாளையும் ஈமான் கொள்வது தொடர்பான விடயங்களில் ‘அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்’தினரின் நிலைப்பாடு, அவர்களின் செயல்சார்ந்த அம்சங்களுடன் தொடர்புபட்ட விடயங்கள் போன்றவற்றைத் தெளிவுபடுத்தக்கூடியதாக இந்நூல் அமைந்துள்ளது.

‘வாஸித்’ என்ற பிரதேசத்தைச் சேர்ந்த சில நீதிபதிகள் இமாமவர்களிடத்தில் வந்து, மக்கள் மன்றத்தில் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் நூதன அனுஸ்டானங்கள், மற்றும் மார்க்கத்திற்குப் புறம்பான அம்சங்கள் பற்றிக்கூறி அங்கலாய்த்தார்கள். அவர்களின் அங்கலாய்ப்பின் முடிவுரையில் அல்லாஹ்வின் திருநாமங்கள், பண்புகள், மற்றும் இந்நூலில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் தொடர்பாக ‘அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்’தினரின் கொள்கை கோட்பாடுகளைப்பற்றி எழுதித்தருமாறு விண்ணப்பித்தார்கள். இதன் பேறாகவே இந்நூல் பிரசவித்தது. இக்குழந்தைக்கு ‘அல் அகீததுல் வாஸிதிய்யா’ என்றும் நாமம் சூட்டப்பட்டது.

قال المصنف رحمه الله

بسم الله الرحمن الرحيم

الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وأشهد أن لا إله الا الله وحده لا شريك له إقرارا به وتوحيدا وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم تسليما مزيدا

நூலாசிரியர் கூறுகின்றார்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தைக் கொண்டு ஆரம்பம் செய்கின்றேன்.

அல்குர்ஆனில் ஸூரதுல் பராஆ தவிர்ந்த ஏனைய அத்தியாயங்களின் ஆரம்பத்தில் பிஸ்மில் வந்திருப்பதையும் நபியவர்கள் பிஸ்மிலை முற்படுத்தி தனது மடல்களை எழுதுவதையும் கருத்தில் கொண்டும் இந்நூலாசிரியர் தனது நூலையும் இவ்வாசகத்தைக் கொண்டே ஆரம்பித்துள்ளார் எனக் கருதமுடியும்.

இவ்வார்த்தையில் இடம்பெற்றிருக்கக்கூடிய ‘ب’ வானது ‘உதவிதேடல்’ என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இவ்வாசகத்தின் பொருளானது ‘ அல்லாஹ்வின் துணையுடன் எனது இந்தக் காரியத்தைத் துவங்குகின்றேன்’ என்று அமையும்.

மேலும், பிஸ்மிலில் இடம்பெற்றிருக்கும் ‘الله’ என்ற வார்த்தையானது பரிசுத்தமான, ஒருவனான எமது இறைவனைக் குறிக்கின்றது. இவ்வார்த்தை ‘أله’ என்ற வார்த்தையில் இருந்து பிறந்ததாகும். இவ்வார்த்தைக்கு ‘வணங்கப்பட்டான்’ என்று பொருள் கொள்ளப்படும். இதனடிப்படையில் ‘اله’ என்ற சொல்லின் பொருள் ‘வணங்கப்படுபவன்’ என்றாகும். எனவே, அல்லாஹ் வணங்கப்படுபவனாக உள்ளான்.

‘الرحيم’ இ ‘الرحمن’ என்பன அல்லாஹ்வின் திருநாமங்களில் உள்ளனவாகும். இவ்விருசொற்களும், ‘அவனது அந்தஸ்துக்குத்தக்கவிதத்தில் அவன் விசாலமான கிருபையுள்ளவனாக இருக்கின்றான்,’ என்ற கருத்தை உணர்த்துகின்றது. ஆயினும், இவ்விருவார்த்தைகளும் ஒரே கருத்தைக் கொண்டது போன்று விளங்கினாலும் இரண்டுக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. ‘الرحمن’ என்பது, ‘அனைத்துப்படைப்பினங்கள் மீதும் கிருபையுள்ளவன்’ என்றும் ‘الرحيم’ என்பது, ‘முஃமீன்களுடன் மாத்திரம் கிருபையுள்ளவன்’ என்றும் வேறுபட்ட இரு விளக்கங்களைக் கொடுக்கின்றன. அதிலும் ‘الرحيم’ என்ற வார்த்தை முஃமின்களுடனான தனியான அன்பைப் பிரதிபளிக்கின்றது. இது குறித்து அல்லாஹூத்தஆலா கூறுகையில்:

‘மேலும், அல்லாஹ் விசுவாசி(களாகிய உங்)கள் மீது மிக்க கிருபையுடையோனாக இருக்கின்றான்.’ (அஹ்ஜாப்: 43)

இமாமவர்கள் தனது நூலின் துவக்கத்தை அல்லாஹ்வைத் துதி செய்து, இரு சாட்சிகளையும் கூறி, நபியவர்கள் மீது ஸலாத்தையும் ஸலாமையும் காணிக்கையாக்கி அமைத்துள்ளார்கள். அதன் தமிழ் வடிவம் பின்வருமாறு:

எல்லாப் புகழும் அல்லாஹூத்தஆலாவுக்கே! அவன் எத்தகையவனென்றால் தன்னுடைய தூதரை நேர்வழியைக்கொண்டும், சத்திய மார்க்கத்தைக்கொண்டும் அனுப்பி வைத்தான், சகல மார்க்கங்களையும் விட அதை மேலோங்கச் செய்வதற்காக (தன் தூதரை அனுப்பி வைத்தான்); இன்னும், (இதற்கு) சாட்சியாக இருக்க அல்லாஹ்; போதுமானவன். –அல்பத்ஹ்:28 – நிச்சயமாக அல்லாஹ்வைத்தவிர வேறு கடவுள் இல்லை என்றும், அவன் தனித்தவன், அவனுக்கு எவ்வித இணையுமில்லை என்பதை உறுதிப்படுத்தியவனாகவும் ஒருமைப்படுத்தியவனாகவும் நான் சாட்சி கூறுகின்றேன். மேலும், நிச்சயமாக முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அவனுடைய அடியானும் திருத்தூதருமாவார் என்றும் சாட்சி சொல்கின்றேன். அல்லாஹ் அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் மென்மேலும் ஸலாத்தையும் ஸலாமையும் சொல்வானாக.

أما بعد : فهذا اعتقاد الفرقة الناجية المنصورة إلى قيام الساعة

இன்ஷா அல்லாஹ் தொடரும்

by: ABU HUNAIF MUHAMMAD HISHAM