ஸகாதுல் பித்ருடைய சட்டங்கள் – 01

بسم الله الرحمن الرحيم

ரமழான் மாதத்தின் இறுதிப் பகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு கடமையே ஸகாதுல் பித்ர் ஆகும். இதற்கு ஸதகதுல் பித்ர் என்றும் கூறப்படும். இதனுடைய சில சட்டதிட்டங்களை இங்கு குறிப்பிடுகின்றோம்.

ஸகாதுல் பித்ருடைய சட்டம் என்ன?

ஸகாதுல் பித்ர் கடமையான ஓர் இபாதத் ஆகும். இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரீச்சம் பழத்திலிருந்து ஒரு சாஉ அளவாக அல்லது வாற்கோதுமையிலிருந்து ஒரு சாஉ அளவாக ஸகாதுல் பித்ரை முஸ்லிம்களில்  அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், சிறியவர், பெரியவர் அனைவர் மீதும் கடமையாக்கினார்கள். மனிதர்கள் தொழுகைக்கு வெளியேறுவதற்கு முன்பாக அதனை நிறைவேற்றுமாறு ஏவினார்கள். (புஹாரீ, முஸ்லிம்)

ஆகவே, இந்த ஹதீஸ் ஸகாதுல் பித்ர் என்பது கடமையான ஓர் அம்சமாகும் என்பதை அறிவிக்கின்றது. இமாம் இப்னுல் முன்திர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்: 'நாங்கள் அறிஞர்கள் என்று ஞாபகம் வைத்திருந்த அனைவரும் ஸதகதுல் பித்ர் பர்ளானது என்பதில் ஒன்றுபட்டிருந்தார்கள்.” மேலும், இது ஏகோபித்த ஒரு கருத்தாகும் என்பதை இஸ்ஹாக் என்ற அறிஞரும் குறிப்பிட்டிருக்கின்றார்.

பார்க்க: அல்மஜ்மூஉ (6/104, 6/140) , அல்முஹல்லா (704)

ஸகாதுல் பித்ர் யாருக்குக் கடமையாகும்?

இப்னு குதாமா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: 'அனைத்து அறிஞர்களினதும் கருத்தின்படி ஸகாதுல் பித்ர் என்பது சிறுவர்கள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள் உட்பட அனைத்து முஸ்லிம்களின் மீதும் கடமையாகும். அநாதைக்கும் அது கடமையான ஒன்றாகும். அவருக்கு அவருடைய பொறுப்புதாரி அவருடைய பணத்திலிருந்து அக்கடமையை நிறைவேற்ற வேண்டும். இது விடயத்தில் முஹம்மத் இப்னுல் ஹஸன் என்பவரைத்தவிர வேறு யாரும் கருத்து வேறுபாடு கொண்டதாக எமக்குத் தெரியவில்லை.” (அல்முங்னீ: 4/283)

இப்னு குதாமா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இக்கூற்றுக்கு ஆதாரமாக முன்பு குறிப்பிடப்பட்ட இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் ஹதீஸை முன்வைக்கின்றார்கள்.

தாயின் வயிற்றில் இருக்கின்ற சிசுவுக்கு ஸகாதுல் பித்ர் கடமையாகுமா?

இப்னு குதாமா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: 'சிசுவுக்கு ஸகாதுல் பித்ர் கடமையான ஒன்றல்ல என்பதே இது விடயத்தின் நிலைப்பாடாகும். இதுவே அதிகமான அறிஞர்களின் கருத்துமாகும்.” (அல்முங்னீ: 4/316)

இப்னுல் முன்திர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: 'அனைத்துப் பகுதிகளிலும் உள்ள நாம் ஞாபகம் வைத்திருக்கின்ற ஆலிம்களில் யாரும் தாயின் வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு ஸகாதுல் பித்ர் வழங்குவதை மனிதர்களுக்கு கட்டாயமாக்கவில்லை.”

சிசுவுக்கும் ஸகாதுல் பித்ர் வாஜிப் என்ற கருத்து இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்னு ஹஸ்ம் என்ற அறிஞரும் வாஜிப் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார்.

பெரும்பாலான அறிஞர்களின் கருத்தே இது விடயத்தில் சரியான ஒரு முடிவாகும். ஏனென்றால், சிசுவின் பெயரால் ஸகாதுல் பித்ர் வழங்கப்பட்ட பின் அந்த சிசு உயிருடன் தாயின் வயிற்றில் இருந்து வெளியாகுமா? அல்லது மரணிக்குமா என்பது அறியப்படமாட்டாது. அந்த சிசுவுக்கு வேறு எந்த மார்க்கச் சட்டமும் அது தாயின் வயிற்றில் இருக்கும்போது  கடமையாக்கப்படவில்லை. வஸிய்யத், அனந்தரச் சொத்து ஆகிய சட்டங்களுக்கு சிசுக்கள் உரித்தாகும். ஆனால், அவர்கள் உயிருடன் தாயின் வயிற்றிலிருந்து வெளியேற வேண்டும்.

அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சிசுக்கு ஸகாதுல் பித்ர் கடமையான ஒன்றல்ல. மாறாக, அது விரும்பத்தக்கதாகும் என்ற கருத்தை முன்வைத்துள்ளார்கள்.

பார்க்க: அல்முஹல்லா (704), பிக்ஹுல் இபாதாத் (298)

ஸகாதுல் பித்ர் வழங்கப்படுவதற்குத் தகுதியான உணவு வகைகள் எவை?

ஒரு சில அறிஞர்கள் ஹதீஸில் எவ்வகையான உணவு குறிப்பிடப்பட்டுள்ளதோ அவ்வகையான உணவுகளிலிருந்தே ஸகாதுல் பித்ர் வழங்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கின்றார்கள். இன்னும் சில அறிஞர்கள் மிகச்சிறந்தது ஹதீஸில் குறிப்பிடப்பட்ட உணவு வகைகளை வழங்குவதாகும். தாம் வசிக்கும் பிரதேசத்தில் பெரும்பாலாக உட்கொள்ளப்படுகின்ற உணவை வழங்குவதிலும் தவறில்லை என்று கூறியிருக்கின்றார்கள்.

இது விடயத்தில் எந்த உணவு ஒரு பிரதேசத்தில் பெரும்பாலாக உட்கொள்ளப்படுகின்றதோ அவ்வுணவையே வழங்க வேண்டும் என்பதுதான் சரியான கருத்தாகும். இக்கருத்தை இப்னு தைமியா, அஷ்ஷெய்ஹ் பின் பாஸ், அஷ்ஷெய்ஹ் அல்பானீ, அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் ரஹிமஹுமுல்லாஹ் ஆகிய அறிஞர்கள் சரிகண்டுள்ளார்கள்.

இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: 'இது தான் கூறப்பட்ட கருத்துக்களில் சரியான கருத்தாகும். ஏனென்றால், ஸதகாவுடைய விடயத்தில் அடிப்படை அம்சம் அது ஏழைகளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கட்டாயமாக வழங்கப்பட வேண்டிய ஒன்றாகும். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு வழங்கும் உணவில் நடுத்தரமானதை பத்து ஏழைகளுக்கு வழங்குவதாகும்.” (அல்மாஇதா: 89)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸகாதுல் பித்ரை பேரீச்சம் பழத்திலிருந்து ஒரு சாஉ அளவை, அல்லது வாற்கோதுமையிலிருந்து ஒரு சாஉ அளவையே கடமையாக்கினார்கள். ஏனென்றால், இதுதான் மதீனாவாசிகளின் உணவாக இருந்தது. இது அவர்களது உணவாக இருக்காவிட்டால் வேறு வகையான உணவை அவர்கள் உட்கொள்பவர்களாக இருந்திருந்தால் அவர்கள் உட்கொள்ளாத எந்த உணவையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸகாதுல் பித்ராக வெளியேற்றுமாறு மதீனாவாசிகளை பணித்திருக்கமாட்டார்கள்.” (பத்ஹுல் அல்லாம்: 2/497)

அஷ்ஷெய்ஹ் பின் பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: பேரீச்சம்பழமாக அல்லது வாற்கோதுமையாக அல்லது கோதுமையாக அல்லது சோளமாக இருந்தாலும் சரியே! அறிஞர்களின் இரு கருத்துக்களில் சரியான கருத்தின்படி நாட்டு உணவிலிருந்து ஸகாதுல் பித்ரை வெளியேற்றுவது கடமையாகும். ஏனென்றால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்ட ஓர் உணவு வகையை நிபந்தனையிடவில்லை. இன்னும் ஸகாதுல் பித்ர் என்பது (ஏழைகளுக்கான) ஓர் ஆறுதலாகும். ஒரு முஸ்லிமுக்கு அவனது உணவல்லாத வேறோர் உணவைக்கொண்டு அவர்களுக்கு  ஆறுதல் வழங்கப்படுவது கடமையானதல்ல.” (மஜ்மூஉல்பதாவா, பாகம்: 14)

அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: 'ஸகாதுல் பித்ர் கடமையாக்கப்பட்டதன் நோக்கம் அது ஏழைகளுக்குரிய உணவாக அமைய வேண்டும் என்பதேயாகும். ஆகவே, இவ்வுணவு மனிதர்களுக்குரிய பெரும்பாலான உணவாக இருந்தாலே இந்நோக்கம் நிறைவேறும். அப்துல்லலாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் ஹதீஸில் இடம்பெற்றுள்ள பேரீச்சம்பழத்தையும் வாற்கோதுமையையும் குறிப்பாக்குவது அவ்விரண்டிலும் உள்ள ஒரு காரணத்தை அடிப்படையாக வைத்து அல்ல. மாறாக, அக்காலத்தில் அவ்விரண்டும் மனிதர்களின் பெரும்பாலான உணவாக இருந்தது என்ற காரணமேயாகும்.” (மஜ்மூஉல் பதாவா, பாகம்: 18)

-    இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-    தொகுப்பு: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்