நோன்பின் ஒழுக்கங்கள் எவை?

بسم الله الرحمن الرحيم

நோன்பின் ஒழுக்கங்களில் நின்றும் உள்ளது அல்லாஹ்வுடைய கட்டளைகளைச் செய்வதைக் கொண்டும் அவன் தடுத்தவைகளை தவர்ந்துகொள்வதைக் கொண்டும் இறையச்சத்தைப் பற்றிப்பிடிப்பதாகும். ஏனென்றால், அல்லாஹ் கூறுகின்றான்: 'விசுவாசம் கொண்டவர்களே! நீங்கள் பயபக்தியுடையவர்களாக ஆகும் பொருட்டு உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.” (அல்பகறா:183)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'யார் பொய்யான வார்த்தையையும் அதை நடைமுறைப்படுத்துவதையும் முட்டாள்தனமான செயல்களையும் விடவில்லையோ அவர் அவருடைய உணவையும் குடிபானத்தையும் விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை.” (புஹாரீ)

இன்னும், நோன்பின் ஒழுக்கங்களில் உள்ள ஒன்றுதான் அதிகமாக தர்மம் செய்தல், நன்மை செய்தல், மனிதர்களுக்கு நல்லுபகாரம் புரிதல் ஆகியனவைகளாகும். குறிப்பாக ரமழான் மாதத்தில் இதைச் செய்ய வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதர்களிலே மிகவும் வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவரை ரமழான் மாதத்தில் சந்திக்கின்ற வேளையில் அதிகதிகமான வாரிவழங்குவார்கள். ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவருக்கு குர்ஆனை மீட்டிக் கொடுப்பார்கள். (புஹாரீ, முஸ்லிம்)

இன்னும், நோன்பின் ஒழுக்கங்களில் உள்ள ஒன்றுதான் பொய், ஏசுதல், ஏமாற்றுதல், மோசடி, ஹராமான பார்வை, ஹராமனவற்றைச் செவிமடுத்தல் இன்னும் நோன்பாளி மற்றும் நோன்பாளியல்லாதவர் தவிர்ந்துகொள்வது கடமையாக இருக்கக்கூடிய ஹராமாக்கப்பட்ட விடயங்கள் போன்றவற்றைத் தவிர்ந்து கொள்வதாகும். என்றாலும் இவைகள் நோன்பாளிக்கு உறுதியாகவே தடுக்கப்பட்டவையாகும்.

இன்னும், நோன்பின் ஒழுக்கங்களில் உள்ள ஒன்றுதான் ஸஹர் செய்வதும் ஸஹர் செய்வதை பிற்படுத்துவதுமாகும். ஏனென்றால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'நீங்கள் ஸஹர் செய்யுங்கள்! ஏனென்றால் ஸஹர் உணவில் பரகத் இருக்கின்றது.” (புஹாரீ, முஸ்லிம்)

இன்னும், நோன்பின் ஒழுக்கங்களில் உள்ள ஒன்றுதான் ருதப் என்ற வகையைச் சேர்ந்த பேரீச்சம் பழத்தைக்கொண்டு நோன்பு திறப்பதாகும். அது கிடைக்கப்பெறாவிட்டால் சாதாரண பேரீச்சம் பழத்தைக்கொண்டு நோன்பு திறக்க வேண்டும். அதுவும் கிடைக்காவிட்டால் நீரைக்கொண்டு நோன்பு திறக்க வேண்டும். சூரியன் மறைந்துவிட்டது உறுதியானதுடன் அல்லது பெரும்பாலாக அது மறைந்திருக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டவுடன் நோன்பு திறக்க முற்பட வேண்டும். ஏனென்றால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'நோன்பு திறப்பதை அவசரப்படுத்தும் காலமெல்லாம் மனிதர்கள் நலவிலேயே இருப்பார்கள்.” (புஹாரீ, முஸ்லிம்)

-    நூல்: பிக்ஹுல் இபாதாத், அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ்

-    தமிழில்: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்