அகீதாவுக்கு ஏன் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்? பகுதி – 01

சீர்திருத்தப் பணி என்பது மனித இனம் படைக்கப்பட்ட காலம் தொட்டு மறுமை நாள் நிகழும் வரை தொடர்கின்ற ஓர் மகத்தான பணியாகும். இப்பணியை மேற்கொள்கின்றவர்கள் அதனை தமது விருப்பு வெறுப்புகளுக்கும் கால சூழல்களுக்கும் ஏற்றாற்போல் வலைத்து நெலித்துக் கொள்ளக்கூடாது என்பதற்காகவே அவற்றை எவ்வாறு மேற்கொண்டால் அல்லாஹுத்தஆலா எதிர்பார்க்கின்ற சீர்திருத்தம் நடைபெறும் என்பதை அல்லாஹுத்தஆலாவும் அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் எமக்கு அழகாக அறிவூட்டியிருக்கிறார்கள். இவ்வாறு சமுகத்திலே சீர்திருத்தப்பணியை மேற்கொள்ள களமிறங்குகின்றவர்களுக்கு இஸ்லாம் போதிக்கும் அதிமுக்கியமான ஒரு போதனைதான் அப்பணி கொள்கை (அகீதா) ச் சீர்திருத்தத்தின் ஊடாகவே ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதாகும். அக்கொள்கை சீர்திருத்தத்தின் போது விட்டுக் கொடுப்புகளோ நெகிழ்வுத்தன்மைகளோ சமரசப் போக்குகளோ இடம்பெறக்கூடாது என்பது இஸ்லாத்தின் ஆணித்தரமான கோட்பாடாகும்.

ஆனாலும் துர்ப்பாக்கியம் யாதென்றால் 'தடி எடுத்தவர்களெல்லாம் வேட்டைக்காரர்கள்'; என்பது போல நாமும் சீர்திருத்தப்பணி செய்யப்போகிறோம் என்று கச்சை கட்டிக்கொண்ட பல அழைப்பாளர்களையும் இயக்கங்களையும் நிறுவனங்களையும் இன்றைய தஃவா களத்திலே அவதானிக்கலாம்.

எனவே ஒரு சாரார் இஸ்லாமிய ஆட்சியை மீண்டும் நிலை நிறுத்துவதின் ஊடாவே இஸ்லாத்தை உலகின் ஆசானாக மாற்றியமைக்கலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டு எல்லாக் குப்பை கூலங்களையும் அனைத்துக் கொள்ளும் குப்பைத் தொட்டி போன்று சமுகத்தில் காணப்படுகின்ற அழுக்கான கொள்கைக் கோட்பாடுகளை தமது மார்க்க அடிப்படையாக வகுத்துக் கொண்ட பிரிவினர்களோடு கைகோர்த்து அரவணைத்துக் கொண்டு செல்லும் அப்பாவித்தனமான போக்கை ஒரு புறம் காணுகின்றோம். இவர்கள் நாம் பறிகொடுத்த இஸ்லாமிய ஆட்சியை மீட்டியெடுப்பது ஒரு புறமிருக்க நபிகளாரின் ஒரு ஸுன்னாவைக்கூட நடைமுறைப்படுத்த துணிச்சல் அற்றவர்களாக காணப்படுகின்றனர்.

மற்றொரு புறம் பார்த்தால் மார்க்க அறிவில் வறுமைப்பட்டிருந்த தமது இயக்கங்களின் இஸ்தாபகர்கள் எவற்றை இஸ்லாத்தின் அடிப்படைகள் என்று மந்திரம் கற்றுக் கொடுத்து மார்க்கத்தை வரையறுத்து வட்டம் கீறினார்களோ அவ்வட்டத்தை விட்டு எட்டியும் பார்க்காது அம்மந்திரங்களையே தமது தீன் பணியின் உயிர் நாடியாகக் கருதி அவற்றின் பால் அழைப்பு விடுத்து தஃவாக்கலத்தில் உலாவந்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு சாரார் கொள்கைச் சீர்திருத்தம் தான் தஃவாப்பணியின் முதல் எட்டு என்பதை ஏற்றுக் கொண்டாலும் சமுகப்பணி செய்து மக்களின் மனங்களில் இடம்பிடித்து அதனூடாக எமது கொள்கையை இலகுவாகப் பதித்துவிடலாம் என்ற நப்பாசையோடு காரியமாற்றுகிறார்கள்.

இவ்வாறு அல்லாஹுத்தஆலா வகுத்துத் தந்த வழிகாட்டல்களைப் புறம் தள்ளிவிட்டு தத்தமது இயக்கங்களுக்கும் தனிப்பட்ட சிந்தனைப்போக்குகளுக்கும் சுவையாகப்பட்ட வழிமுறைகளை இஸ்லாமிய அழைப்பாளர்கள் கட்டிக்காத்துக் கொண்டதின் விலைவாக இன்று தஃவாக்களம் இறைவழிகாட்டல்களை விட்டு அந்நியப்பட்டு எடுப்பார் கைப்பிள்ளையாக மாறியிருப்பதைப் பார்க்கலாம். ஆகவே தான் அகீதாவை முதன்மைப்படுத்தியே தஃவாப்பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அல்லாஹுத்தஆலா வகுத்துத் தந்த இந்த வழிகாட்டலுக்கு நியாயமான காரணங்களைச் சொல்லி வலுச்சேர்க்கும் ஒரு சிறு முயற்சியே 'ஏன் அகீதாவுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்?' என்ற இத்தொகுப்பின் குறிக்கோளாகும். இச்சிறு முயற்சியைக் கொண்டு எமது சமுகத்திற்கும் குறிப்பாக தஃவாப்பணி செய்ய களமிறங்கியுள்ள தாயிகளுக்கும் பயன் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்ற அதேவேளை இதன் மூலம் அல்லாஹ்வின் திருப்தியை மாத்திரமே எதிர்பார்க்கின்ற பக்குவத்தையும் எமக்கு நல்க வேண்டும் என அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றோம்.

இத்தலைப்பிலான எமது தொகுப்புக்கள் யாவும் பகுதி பகுதியாக இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படும்.

by: SILMY IBNU SAMSIL ABDEEN