ஸூரதுன் நூர் விளக்கவுரை – 13

بسم الله الرحمن الرحيم

யாரிடத்தில் அனுமதி பெறவேண்டும்?

இப்னு ஜுரைஜ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: அதாஉ இப்னு அபீ ரபாஹ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களைப் பற்றிப் பின்வருமாறு கூறக் கேட்டுள்ளேன். “மூன்று வசனங்கள் உள்ளன, அவற்றை மனிதர்கள் புறக்கணிப்பவர்களாக நடந்து கொள்கிறார்கள். 'நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிக்க கண்ணியமிக்கவர் உங்களில் மிகவும் பயபக்தியுடையவர் தான்' (அல் ஹுஜுராத்: 13) என்று அல்லாஹ் அல்குர்ஆனில் கூறியிருக்க, உங்களில் பெரிய வீடுவாசல்களுடன் இருப்பவரே கண்ணியமிக்கவர் என்று கூறிக்கொண்டிருக்கிறீர்கள். மேலும், இஸ்லாம் அனுமதி கேட்கச் சொன்ன சந்தர்ப்பங்களை மக்கள் கருத்தில் எடுத்துச் செயற்படாதவர்களாக இருக்கிறார்கள்.” அப்போது,

இப்னு ஜூரைஜ் ரஹிமஹுல்லாஹ் : ஒரே வீட்டில் என் மடியில் வளர்ந்த அநாதைகளான என் சகோதரிகளிடத்திலும் அனுமதி கேட்க வேண்டுமா?

அதாஉ ரஹிமஹுல்லாஹ் : ஆம்!

இது விடயத்தில் தனக்கு அனுமதி இருக்க வேண்டும் எனக் கருதி மீண்டும் மீண்டும் கேட்டார். அப்போதும் அவர் 'ஆம்!' என்றே கூறிக் கொண்டிருந்தார். ஈற்றில்...

அதாஉ ரஹிமஹுல்லாஹ் : நீ அவர்களை நிர்வாணிகளாகக் காண்பதை விரும்புவாயா?

இப்னு ஜூரைஜ் ரஹிமஹுல்லாஹ் : இல்லை!

அதாஉ ரஹிமஹுல்லாஹ் : அப்படியென்றால் அனுமதி கேள்!

மீண்டும் இப்னு ஜூரைஜ் ரஹிமஹுல்லாஹ் அதே கேள்விக் கணைகளைத் தொடுத்துக் கொண்டே இருந்தார். அதற்கு,

அதாஉ ரஹிமஹுல்லாஹ் : நீ அல்லாஹ்வை வழிப்படுவதை விரும்புகிறாயா?

இப்னு ஜூரைஜ்ரஹிமஹுல்லாஹ் : ஆம்!

அதாஉ ரஹிமஹுல்லாஹ் : அப்படியென்றால் அனுமதி கேள்!

மேலும் இப்னு ஜுரைஜ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள், ஸுஹ்ரி ரஹிமஹுல்லாஹ் அவர்களைத் தொட்டும் வரும் ஓர் அறிவிப்பில்....

இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: 'நீங்கள் உங்களுடைய தாய்மார்களிடத்தில் பிரவேசிக்கும் போது அனுமதி கேளுங்கள்!'

அப்போது இப்னு ஜூரைஜ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அதாஉ ரஹிமஹுல்லாஹ் அவர்களிடத்தில் பின்வருமாறு வினவினார்கள்.

இப்னு ஜூரைஜ் ரஹிமஹுல்லாஹ் : ஒருவர் தன் மனைவியிடம் செல்லும் போதும் அனுமதி கேட்க வேண்டுமா?

அதாஉ ரஹிமஹுல்லாஹ் : இல்லை - இவ்வாறு அனுமதி கேட்பது வாஜிபில்லை என்பதைக் குறிக்கின்றது – ஆயினும், அவளிடத்தில் பிரவேசிப்பதைத் தெரியப்படுத்திவிட்டுச் செல்வதே சாலச் சிறந்ததாகும். ஏனெனில், சில வேளைகளில் நீ அவளைப் பார்க்க விரும்பாத தோற்றத்தில் இருக்க வாய்ப்புள்ளது.

ஸைனப் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்: 'இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது காரியங்களை முடித்துவிட்டு வீடு நோக்கி வந்தால், கதவுக்கருகாமையில் நின்றவராக கனைப்பார்கள். எங்களில் இருந்தும் அவர் வெறுக்கக் கூடிய ஒரு விடயத்தைக் கண்ணுறாமல் இருப்பதற்காகவே அவர் அவ்வாறு நடந்து கொள்வார்.' தபரி: 19 ∕ 148

அனுமதி கேட்காததால் உண்டாகும் பிரதிகூலங்கள்

அல்லாஹூத்தஆலா தனது அடியார்களான முஃமீன்களுக்கு சிறந்த வழிகாட்டல்களை வழங்கியுள்ளான். அந்த அடிப்படையில் தங்களது வீடுகளல்லாத மற்ற வீடுகளில் நுழைய முன் அவர்களிடத்தில் அனுமதி கேட்காமல் நுழைவதைத் தடை செய்துள்ளான். ஏனெனில், அவ்வாறு அனுமதியின்றி நுழைவது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். அந்தவகையில்...

'நிச்சயமாக பார்வையைப் பேணிப் பாதுகாப்பதற்காகவே அல்லாஹ் அனுமதி கேட்பதை விதியாக்கியுள்ளான்' (முஸ்லிம்: 3 ∕ 1698) என்ற நபிமொழியின் அடிப்படையில் நாம் செயற்படாதவிடத்து வீட்டினரின் அந்தரங்க விடயங்களை பார்ப்பதற்கு வழி கோலுகின்றது.

இவ்வாறு அனுமதியின்றி நுழைவது நுழைபவர் மீது சந்தேகத்தைத் தோற்றுவிக்கின்றது. இதன் காரணமாக திருடன், மோசமான நடத்தை உள்ளவன் போன்ற பலிச் சொற்களுக்காளாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவான் என்கிறார் அல்குர்ஆன் விரிவுரையாளர் அஷ்ஷேக் அஸ்ஸஃதி ரஹிமஹுல்லாஹ் அவர்கள். (தய்ஸீருல் கரீமிர் ரஹ்மான்: 514)

இச்செயல் முறையே மிக ஆரோக்கியமானது என்பதை அல்லாஹ் இவ்வசனத்தின் ஈற்றில் பறைசாற்றியுள்ளான். இன்னும், இவ்வசனமானது அறியாமைக்கால மக்களின் வழக்கில் இருந்த காலை, மாலை முகமனைக் கொண்டு பேச்சை ஆரம்பித்தல், அனுமதி கேட்காமல் வீடுகளில் பிரவேசித்தல் போன்ற அம்சங்களை மாற்றியமைத்துள்ளது எனவும் கூறலாம். (அத்துர்ருல் மன்ஸூர்: 6 ∕ 176)

மேலும், இவ்வசனத் தொடரின் ஈற்றில் அல்லாஹ் ஒரு சாராருக்கு இச்சட்டத்திலிருந்து விதிவிலக்களித்துள்ளான். அத்தகையவர்கள் குடியிருக்கப்படாத வீடுகளில் தங்களின் பொருட்களை வைத்துவிட்டு வந்தவர்களாவர். அவர்களுக்கு அதனை எடுத்து வரும் பொருட்டு அனுமதி கேட்கத் தேவையில்லை என்ற சலுகையை அளித்துள்ளான். உதாரணமாக பிரயாணிகள் விடுதியில் தங்குவோரைக் குறிப்பிடலாம். இக்கருத்தை இக்ரிமா, ஹஸனுல் பஸரி ரஹிமஹுமல்லாஹ் ஆகியோர் கூறியுள்ளனர். (தபரி: 19 ∕ 153)

ஆயினும் ஸுன்னாவை அடியொற்றி அவைகளில் பிரவேசிக்கும் போது ஸலாம் சொல்வது சிறந்ததாகும்.

முஜாஹித் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: 'நீங்கள் யாருமில்லாத வீட்டினுள் பிரவேசித்தால் அஸ்ஸலாமு அலைக்கும் வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் என்று கூறுங்கள்! நிச்சயமாக அவன் இதனைக் கொண்டே பணிக்கப்பட்டுள்ளான். மேலும், இத்தகைய காணிக்கைக்கு மலக்குகள் பதிலளிப்பார்கள் என எமக்கு ஒரு செய்தியும் கிடைக்கப் பெற்றுள்ளது.' (அப்துர் ரஸ்ஸாக்: 3 ∕ 66, அத்துர்ருல் மன்ஸூர்: 6 ∕ 228)

இவ்வசனம் இறக்கியருளப்பட்டமைக்கான காரணங்கள்

'விசுவாசங் கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத (வேறு) வீடுகளில்...' என்ற வசனம் இறங்கிய வரலாற்றுச் சம்பவம்.

அன்ஸாரிப் பெண்மணி ஒருவர் நபியவர்களிடத்தில் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! நான் என் வீட்டினர் என்னைக் காண்பதை வெறுக்கும் ஓர் அமைப்பில் இருக்கும் போது, எனது குடும்பத்திலிருந்து சிலர் என்னிடம் வருகை தருகிறார்கள், நான் இதற்கு என்ன செய்யது?' எனக் கூறிக் கலவரமடைந்தார். அப்போது அல்லாஹ் இவ்வசனத்தை இறக்கியருளினான். (பிர்யாணி, இப்னு ஜரீர்)

“விசுவாசிகளே! எவராலும்) குடியிருக்கப்படாத வீடுகளில்...” என்ற வசனம் இறங்கிய வரலாற்றுச் சம்பவம்.

வீடுகளில் பிரவேசிக்கும் போது அனுமதி கேட்க வேண்டும் என்ற சட்டம் இறங்கிய போது அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், 'அல்லாஹ்வின் தூதரே! மக்கா, மதீனா, ஷாம் போன்ற நாடுகளுக்கிடையே வணிகத்தில் ஈடுபடக் கூடிய வியாபாரிகளின் நிலை என்ன? அவர்கள் செல்லும் பாதைகளில் அவர்களுக்கு விடுதிகள் உள்ளன. இவ்வாறிருக்க அவர்கள் எப்படி அனுமதி கேட்பது? மற்றும் ஸலாம் சொல்வது? ஏனெனில், அவைகளில் அவர்களைத் தவிர வசிப்பவர்கள் வேறு யாரும் இருக்கமாட்டார்கள்' என வினவினார்கள். அப்போது அல்லாஹ் இவ்வசனத்தை இறக்கியருளினான். (இப்னு அபீ ஹாதிம்)

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-           அபூஹுனைப்