நபி வழியில் வுழூச் செய்வோம் – 01

بسم الله الرحمن الرحيم

முன்னுரை

அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என்றும் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் தூதர் என்றும் நான் சான்று பகருகின்றேன்.

அல்லாஹ் எங்களை அவனை வணங்குவதற்காகவே படைத்திருக்கின்றான். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நான் ஜின்களையும் மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவே அன்றி படைக்கவில்லை.

-     அத்தாரியாத்: 56

அல்லாஹ்வும் அவனது தூதரும் அதிகமான கூலிகளை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக எங்களுக்கு அதிகமான வணக்க வழிபாடுகளை கற்றுத்தந்துள்ளார்கள். வணக்க வழிபாடுகளைக் கற்றுதந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவைகளை நாம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதையும் கற்றுத்தந்திருக்கின்றார்கள்.

இவ்வாறான வணக்கங்களில் மிகவும் சிறப்பான ஒன்று வுழூவாகும். அல்லாஹ் அல்குர்ஆனில் வுழூவைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அதுபற்றி தெரிவித்திருக்கின்றார்கள். எவ்வாறு வுழூச் செய்ய வேண்டும் என்பதையும் அவர்கள் கற்றுத்தந்திருக்கின்றார்கள். இன்னும், வுழூச் செய்கின்றவர்களுக்கு அதிகமான சிறப்புக்கள் உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

எனவே, சரியான முறையில் எவ்வாறு வுழூச் செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வது எம்மனைவரின் மீதும் கடமையாகும். ஏனென்றால் தொழுகை அனைவரின் மீதும் கடமையாகும். அல்லாஹுத்தஆலா வுழூவின்றி எத்தொழுகையையும் ஏற்றுக்கொள்ளமாட்டான். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: ஈமான் கொண்டவர்களே! நீங்கள் தொழுகைக்காக எழுந்தால் உங்களது முகங்களையும் முழங்கை வரைக்கும் கைகளையும் கழுவிக்கொள்ளுங்கள். இன்னும், உங்கள் தலையை தடவிக்கொள்ளுங்கள். கரண்டை வரைக்கும் உங்கள் கால்களையும் கழுவிக்கொள்ளுங்கள்.

-     அல்மாஇதா: 6

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: வுழூ முறிந்து வுழூச் செய்யும் வரை உங்களில் ஒருவருடைய தொழுகையையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான்.

-     புஹாரீ, முஸ்லிம்

ஆகவே, தொழமுன் வுழூச் செய்வது அவசியமாகும். எங்கள் அனைவர் மீதும் வுழூவைக் கற்றுக்கொள்வது கடமையாகும். எமது முன்னோர்களாகிய ஸலபுகள் வுழூவைப்பற்றிக் கற்றுக்கொள்வதிலும் அதனைப் பிறருக்கு கற்றுக் கொடுப்பதிலும் ஆசையுள்ளவர்களாகக் காணப்பட்டார்கள்.

அலீ இப்னு அபீதாலிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வுழூ செய்துவிட்டு தன்னைச் சூழ இருந்தவர்களைப் பார்த்து: அல்லாஹ்வின் தூதருடைய வுழூவை அறிந்துகொள்வது யாரை சந்தோஷப்படுத்துமோ அதுவே இந்த வுழூவாகும் என்றார்கள்.

- அபூதாவூத்

உஸ்மான் இப்னு அப்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒவ்வோர் உறுப்பையும் மூன்று முறை கழுவிவிட்டு பின்பு தன்னைச் சூழ இருந்தவர்களைப் பார்த்து அல்லாஹ்வின் தூதரவர்கள் என்னுடைய இந்த வுழூவைப் போன்று வுழூச் செய்வதை நான் கண்டேன் என்றார்கள்.

- புஹாரீ, முஸ்லிம்

மேலும், எங்களுடைய ஸலபுகள் வுழூவை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைப்பற்றி அதுபற்றி அறிந்தவர்களிடம் அதிகமதிகம் கேட்கக்கூடியவர்களாக இருந்திருக்கின்றார்கள். பிறருக்கு அதனைக் கற்றுக்கொடுப்பதிலும் அவர்கள் ஆர்வமாக இருந்திருக்கின்றார்கள்.

சில தாபிஈன்கள் அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வுழூவைப்பற்றி கேட்டார்கள். அவர் அதனை அவர்களுக்கு கற்றுக்கொடுத்தார்கள்.

- புஹாரீ, முஸ்லிம்

இதன் மூலம் ஸலபுகள் வுழூவைப்பற்றிக் கற்பதில் எந்தளவு ஆர்வமாக இருந்திருக்கின்றார்கள் என்பதை நாம் விளங்கிக்கொள்ளலாம்.

எனவே, இச்சிறு தொகுப்பினூடாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வுழூ எவ்வாறு இருந்தது என்பதை தெளிவுபடுத்தியிருக்கின்றேன். அல்லாஹ் இதனைக்கொண்டு அனைத்து முஸ்லிம்களுக்கும் பிரயோசனமடையச் செய்வானாக. இதனை அறிந்து கொள்பவர்கள் மீது பிறருக்கு இதனை எத்திவைப்பது கடமையான ஒன்றாகும். அல்லாஹ் எங்களுக்கு அருள்புரிவானாக. அவனுக்கே எல்லாப் புகழும்.

வுழூ என்ற வார்த்தையின் கருத்து

அரபு மொழியில் வுழூ என்றால் சுத்தம், அழகு என்று பொருள்படுகின்றது. மார்க்க அடிப்படையில் வுழூ என்றால் சுத்தமான நீரைக்கொண்டு உடம்பில் உள்ள குறிப்பிடப்பட்ட சில உறுப்பக்களை குறிப்பிடப்பட்ட ஒரு முறையைக்கொண்டு கழுவுவதாகும்.

வுழூவின் சிறப்புக்கள்

வுழூச் செய்கின்ற விடயத்தில் அதிகமான சிறப்புக்கள் ஆதாரபூர்வமான செய்திகளில் வந்திருக்கின்றன. அவைகளில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகின்றோம்.

1. சுத்தமானவர்களை அல்லாஹ் விரும்புகின்றான்.

வுழூ என்பது ஒரு சுத்தமான காரியமாகும். எனவே, வுழூச் செய்பவர்களை அல்லாஹ் விரும்புகின்றான் என்பதை பின்வரும் வசனம் எங்களுக்கு தெளிவுபடுத்துகின்றது.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: தவ்பாச் செய்கின்றவர்களையும் சுத்தமானவர்களையும் அல்லாஹ் விரும்புகின்றான்.

- அல்பகறா: 222

2. வுழூச் செய்வது பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு காரணமாக அமைகின்றது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: என்னுடைய இந்த வுழூவைப்போன்று யார் வுழூச் செய்து பின்பு இரண்டு ரக்அத்களைத் தொழுதால் மேலும், அவர் தொழும் போது உள்ளத்தில் எழுகின்ற ஊசலாட்டங்களோடு பேசாவிட்டால்  அவருடைய முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.

- புஹாரீ, முஸ்லிம்

3. வுழூ மறுமை நாளில் முஸ்லிம்களை அடையாளப்படுத்தக்கூடிய ஒரு செயலாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: வுழூவுடைய அடையாளங்களின் காரணமாக ஒளிமயமானவர்களாக உள்ள நிலையில் மறுமை நாளில் என்னுடைய உம்மத்தினர்கள் அழைக்கப்படுவார்கள்.

- புஹாரீ, முஸ்லிம்

4. வுழூச் செய்வது சுவர்க்கத்தைப் பெற்றுத்தரும் ஒரு செயலாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் அழகான முறையில் வுழூச் செய்தால் பின்பு தனது உள்ளத்தாலும் முகத்தாலும் முன்னோக்கியவராக எழுந்து இரண்டு ரக்அத்கள் தொழுதால் அவருக்கு சுவர்க்கம் கட்டாயமாகிவிடும்.

- முஸ்லிம்

5. வுழூவுடைய நீர் வெளியேறுவதுடன் பாவங்களும் வெளியேறிவிடுகின்றன.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிமான அடியான் வுழூச் செய்யும்போது தனது முகத்தைக் கழுவினால் அவர் தனது கண்ணால் பார்த்த அனைத்துப் பாவங்களும் அந்த நீரின் கடைசி சொட்டுடன் வெளியாகிவிடும். அவர் தனது இரு கைகளையும் கழுவினால் அக்கைகள் தொட்ட அனைத்துப் பாவங்களும் அந்த நீரின் கடைசிச் சொட்டுடன் அனைத்துப் பாவங்களும் வெளியாகிவிடும். அவர் தனது இரு கால்களையும் கழுவினால் அக்கால்கள் எதற்காக நடந்து சென்றனவோ அப்பாவங்கள் அனைத்தும் அந்த நீரின் கடைசிச் சொட்டுடன் வெளியாகிவிடும். இறுதியில் அவர் பாவங்களிலிருந்து சுத்தமாக்கப்பட்டவராக வெளியாகுவார்.

- முஸ்லிம்

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

- அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்