அல்லாஹ்வின் பெயர்களும் பண்புகளும் – 05

بسم الله الرحمن الرحيم

41. அல்லாஹ்வின் உயர்வு எத்தனை வகைப்படும்?

விடை: அது மூன்று வகைப்படும்.

1. தன்னளவில் அவன் உயர்வானவன்.

2. சக்தி மற்றும் பண்புகள் ரீதியாக அவன் உயர்வானவன்.

3. மிகைத்தல் மற்றும் அடக்கியாள்வதில் அவன் உயர்வானவன்.

42. அல்லாஹ்வின் நாட்டம் எத்தனை வகைப்படும்?

விடை: இரண்டு வகைப்படும்.

1.    அமைப்பு ரீதியான நாட்டம்: இது கட்டாயமாக நடைபெறும். மேலும், இந்நாட்டத்தை அல்லாஹ் சிலவேளை விரும்புவான். இன்னும் சிலவேளைகளில் விரும்பமாட்டான்.

2.    மார்க்க ரீதியான நாட்டம்: இது சிலவேளை நடைபெறலாம். இன்னும், சிலவேளை நடைபெறாமலிருக்கலாம். மேலும், இந்நாட்டத்தை அல்லாஹ் விரும்புகிறான்.

அமைப்பு ரீதியான நாட்டத்திற்கு உதாரணம்: அபூஜஹ்ல், அபூதாலிப், அபூலஹப், பிர்அவ்ன், இப்லீஸ் ஆகியோர் காபிர்களாக இருந்தமையாகும். மார்க்க ரீதியான நாட்டத்தில் அல்லாஹ் இவர்களுக்கு குப்ரை நாடவில்லை.

மார்க்க ரீதியான நாட்டத்திற்கு உதாரணம்: அபூபக்ர், உமர், உஸ்மான், அலீ ரழியல்லாஹு அன்ஹும் ஆகியோர் இஸ்லாத்தை ஏற்றமையாகும்.

43. அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளில் அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினரின் நடுநிலைப் போக்கை எவ்வாறு தெளிவுபடுத்தலாம்?

விடை: முஅத்திலாக்கள் அல்லாஹ்வின் பண்புகளை இல்லாமல் செய்தனர். முஷப்பிஹாக்கள் அல்லாஹ்வின் பண்புகளை படைப்பினங்களின் பண்புகளுக்கு ஒப்பாக்கினர். அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினர் அல்லாஹ்வின் பண்புகளை இல்லாமல் செய்யவுமில்லை, ஒப்பாக்கவுமில்லை. அவை அனைத்தையும் ஒப்புவமையின்றி, முறை கற்பித்தலின்றி நம்பினர்.

44. அல்லாஹ் எங்களுடன் இருப்பது எத்தனை வகைப்படும்?

விடை: இரண்டு வகைப்படும்.

1.    பொதுவானது: அதாவது தனது அறிவோடும் அவதானிப்போடும் எல்லாப் படைப்பினங்களுடன் அல்லாஹ் இருப்பதாகும். உதாரணம்: நீங்கள் எங்கிருந்த போதிலும் அவன் உங்களுடன் இருப்பான்.

- அல்ஹதீத்: 4

2. குறிப்பானது: அதாவது தனது உதவியோடும் ஒத்தாசையோடும் தனக்கு விருப்பமுள்ள அடியார்களுடன் இருத்தல்.  இது இரண்டு வகைப்படும்.

முதல்வகை: தனிநபரைக் குறிக்கக்கூடியது. உதாரணம்: அல்லாஹுத்தஆலா மூஸா மற்றும் ஹாரூன் அலைஹிமஸ்ஸலாம் ஆகியவர்களைப் பார்த்து கேட்டவனாகவும் பார்த்தனாகவும் நான் உங்களிருவருடனும் இருக்கின்றேன் எனக் கூறினான்.

இரண்டாம் வகை: ஒரு பண்பைக் குறிக்கக்கூடியது. உதாரணம்: நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.

45. அல்லாஹ் எம்முடன் இருக்கின்றான் என்பதில் மனிதர்களில் எத்தனை கருத்துக்கள் உள்ளன?

விடை: மூன்று கருத்துக்கள் உள்ளன.

முதல் கருத்து: அல்லாஹ் படைப்பினங்களுடன் இருப்பது அறிவு, சூழ்ந்துகொள்ளல் மற்றும் முஃமின்களுக்கு உதவியாக இருத்தல் என்ற அடிப்படையிலாகும். இதுவே சரியான கருத்தாகும்.

இரண்டாம் கருத்து: அல்லாஹ் பூமியிலே இருக்கின்றான். அவன் அர்ஷிலே இருப்பதில்லை. இது ஹுலூலிய்யாக்களின் கருத்தாகும்.

மூன்றாம் கருத்து: அல்லாஹ் பூமியிலும் இருக்கின்றான், இன்னும், அர்ஷிலும் இருக்கின்றான்.

46. அல்லாஹ்வுக்கு ஆத்மா உண்டா?

விடை: ஆம், அல்லாஹ்வுக்கு ஆத்மா உண்டு. என் ஆத்மாவில் உள்ளதை நீ அறிவாய். உன் ஆத்மாவில் உள்ளதை நான் அறியமாட்டேன். - அல்மாஇதா: 116 - என ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மறுமை நாளில் அல்லாஹ்விடம் கூறுவதாக அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான்.

47. அல்லாஹ்வின் இரு கைகளும் வலதும் இடதுமா?

விடை: அல்லாஹ்வின் இரு கைகளும் வலதாகும். அவனின் இரு கைகளும் வலதேயாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

- முஸ்லிம்

48. அல்லாஹ்வுக்கு கெண்டைக்கால் உண்டா?

விடை: அல்லாஹ்வுக்கு கெண்டைக்கால் உள்ளது என்பதை பின்வரும் ஹதீஸிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம். எங்கள் இறைவன் அவனுடைய கெண்டாக்காலைவிட்டும் - திரையை - நீக்குவான்.

49. அல்லாஹ் சிரிக்கின்றானா?

விடை: அல்லாஹ் சிரிப்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். அல்லாஹுத்தஆலா இரு மனிதர்களைப் பார்த்து சிறிக்கிறான். அவர்களில் ஒருவர் மற்றவரை கொலை செய்கிறார்.

- புஹாரீ, முஸ்லிம்

50. அல்லாஹ் ஆச்சரியப்படுகின்றானா?

விடை: அல்லாஹ் ஆச்சரியப்படுகின்றான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிச்சயமாக அல்லாஹ் உங்கள் விருந்தாளியுடன் நேற்றிரவு நீங்கள் இருவரும் நடந்துகொண்ட முறையின் காரணமாக ஆச்சரியப்பட்டான் என ஒரு அன்ஸாரித் தோழருக்குக் கூறினார்கள்.

-     முஸ்லிம்

-     அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்