உண்மையான ஆலிம்களின் அடையாளங்கள் – 02

بسم الله الرحمن الرحيم

இரண்டாவது அடையாளம்

ஆலிம்கள் அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னாவின் ஆதாரங்களைவிட தன் சுய புத்தியையும் ஏனைய மனிதர்களின் அபிப்ராயங்களையும் முற்படுத்தமாட்டார்கள்.

ஏனென்றால், அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: விசுவாசம் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மத்தியில் முந்திச் செல்லாதீர்கள்.

-     அல்ஹுஜுராத்: 1

மேலும், அவன் கூறுகின்றான்: அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தில் முடிவுசெய்துவிட்டால் தமது காரியத்தில் சுய அபிப்பிராயம் கொள்வதற்கு எந்த முஃமினான ஆணுக்கும் முஃமினான பெண்ணுக்கும் உரிமையில்லை.

-     அல்அஹ்ஸாப்: 36

ஆகவே, உண்மையான ஆலிம்கள் இந்த இரு வசனங்களுக்கும் இதுபோன்ற ஏனைய வசனங்களுக்கும் கட்டுப்பட்டவர்களாக மார்க்க விடயங்களில் மக்களுக்கு பத்வா வழங்கும்போது அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னா அடிப்படையிலேயே அவர்கள் செயற்படுவார்கள். இவ்விரண்டிற்கும் முரணாக உள்ள எவருடைய தீர்ப்பையும் அவர்கள் சரி காணமாட்டார்கள்.

ஆனால், இன்று ஆலிம்கள் என்ற பெயரில் மக்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்யும் அதிகமானவர்கள் இந்த அடிப்படையை வைத்து அவர்களது அழைப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்ளாததால் மக்களுக்கு மத்தியில் வழிகேட்டையும் அசத்தியத்தையும் பரப்பி வருகின்றனர். மேலும், ஊரின் கண்ணியத்தையும் ஊர் வழமையையும் மூதாதையர்களின் வழிமுறையையும் முற்படுத்தி ஸுன்னாவை மறைக்கின்றவர்களையும் அதிகமாக இந்த சமூகத்தில் நாம் காணலாம். இது உண்மையான ஆலிம்களின் பண்பல்ல என்பதை மேற்குறிப்பிடப்பட்ட இரு வசனங்களும் தெளிவுபடுத்துகின்றன.

மூன்றாவது அடையாளம்

உண்மையான ஆலிம்கள் அவர்கள் மக்களுக்கு அறிவித்துக் கொடுக்கும் நல்ல விடயங்களையெல்லாம் அவர்களும் தங்களது வாழ்வில் நடைமுறைப்படுத்துவார்கள். மக்களுக்கு தடுத்த விடயங்களை அவர்களும் தவிர்ந்து கொள்வார்கள். இது உண்மையான ஆலிம்களின் பண்புகள் மாத்திரமின்றி நபிமார்களின் வழிமுறையுமாகும். நபிமார்கள் ஷிர்க்கை விட்டும் மக்களை எச்சரித்தார்கள். அவர்களும் அந்த ஷிர்க்கைச் செய்யவில்லை.

ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது கூட்டத்தாரிடம் பின்வருமாறு கூறினார்கள்: நான் எதை விட்டும் உங்களைத் தடுத்தேனோ அது விடயத்தில் உங்களுக்கு மாற்றம் செய்தவற்கு நான் விரும்பவில்லை.

-     ஹூத்: 88

மக்களுக்குத் நபிமார்கள் தடுக்கும் விடயங்களை அவர்களும் தவிர்ந்து கொண்டார்கள் என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகின்றது. எனவே, அந்நபிமார்களின் வாரிசுகளாகிய ஆலிம்களும் இப்பண்பை உடையவர்களாக மாற வேண்டும்.

இன்று அதிகமான ஆலிம்கள் குத்பாப் பிரசங்கத்தில் தொழுகைகளைப்பற்றி உரையாற்றுகின்றார்கள். ஆனால், அவர்களை அஸர் தொழுகைக்கு காணமுடியாத ஒரு நிலை ஏற்படுகின்றது. வட்டி, களவு, பொய், ஏமாற்றுதல் போன்ற தீமைகளை மக்களுக்;கு எச்சரிக்கை செய்வார்கள். ஆனால் அவர்களுடைய வாழ்வில் இத்தீமைகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்: விசுவாசம் கொண்டவர்களே! நீங்கள் செய்யாதவற்றை - பிறருக்கு செய்யுமாறு - ஏன் கூறுகின்றீர்கள். நீங்கள் செய்யாதவற்றை பிறருக்கு செய்யுமாறு கூறுவது அல்லாஹ்விடத்தில் வெறுப்பால் பெரிதாகிவிட்டது.

-     அஸ்ஸப்: 1,2

பிறருக்கு நன்மையை ஏவக்கூடியவர்கள் தன் வாழ்வில் அதனை நடைமுறைப்படுத்த முயற்சிக்க வேண்டும். இல்லாவிடின் அல்லாஹ்வால் வெறுக்கப்பட்ட ஒருவராக அவர் கணிக்கப்படுகின்றார் என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகின்றது.

மேலும், அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நீங்கள் உங்களையே மறந்த நிலையில் மனிதர்களுக்கு நீங்கள் நன்மையை ஏவுகின்றீர்களா? நீங்களோ வேதத்தை ஓதிக்கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் சிந்தனை பெறமாட்டீர்களா?

-     அல்பகறா: 44

எனவே, ஆலிம்களே! பிறருக்கு ஏவுகின்றவற்றை நீங்களும் உங்களது வாழ்வில் கடைபிடியுங்கள். பிறருக்கு தடுக்கின்றவற்றை நீங்களும் தவிர்ந்து கொள்ளுங்கள்.

நான்காவது அடையாளம்

உண்மையான ஆலிம்கள் அசத்தியம் மக்களுக்கு மத்தியில் பரப்பப்படும்போது வாய்மூடி இருக்க மாட்டார்கள். மாறாக, அதனை எதிர்ப்பார்கள். அந்த அசத்தியத்தை மக்களுக்கு மத்தியில் பரப்பியவர்களுக்கு மறுப்புத் தெரிவிப்பார்கள்.

நபிமார்கள் தமது சமுதாயத்தில் ஷிர்க்கை கண்டபோது அதனை எதிர்த்தார்கள். அந்த ஷிர்க்கைச் செய்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்கள்.

நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது கூட்டத்தினரிடம் ஓரினச் சேர்க்கை எனும் மோசமான செயலைக் கண்ட போது அதனை எதிர்த்தார்கள். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: லூத்தையும் - நாம் தூதராக அனுப்பினோம் - அவர் தனது சமூகத்தாரிடம் அகிலத்தாரில் உங்களுக்கு முன்னர் எவரும் செய்யாத மானக்கேடானதை நீங்கள் செய்து கொண்டிருக்கின்றீர்களா? என்று கூறியதை - நபியே! நீர் எண்ணிப் பார்ப்பீராக! -

-     அல்அஃராப்: 80,81

அளவு நிறுவையில் மோசடி செய்யக்கூடியவர்களாகத் தனது கூட்டத்தைக் கண்ட ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவர்களை எச்சரித்தார்கள். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: மத்யன் வாசிகளுக்கு அவர்களது சகோதரர் ஷுஐபை - த் தூதராக அனுப்பினோம் - அவர் எனது சமூகத்தினரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். அவனையன்றி  - உண்மையாக - வணங்கப்படத் தகுதியானவன் உங்களுக்கு வேறு யாரும் இல்லை. உங்கள் இரட்சகனிடமிருந்து தெளிவான சான்று நிச்சயமாக உங்களிடம் வந்துவிட்டது. எனவே, அளவையையும் நிறுவையையும் முழுமையாக நிறைவேற்றுங்கள். மனிதர்களுக்கு அவர்களின் பொருட்களை குறைத்து விடாதீர்கள். பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் இதுதான் உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்.

-     அல்அஃராப்: 85

மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அசத்தியமான விடயங்களைக் காணும்போது அது குறித்து மௌனம் சாய்க்கவில்லை. இடது கையால் சாப்பிட்டுக்கொண்டிருந்த மனிதனை கண்டித்தார்கள். உண்ணாமல், தூங்காமல், திருமணம் முடிக்காமல் முழுமையாக வணக்க வழிபாடுகளில் ஈடுபட ஆயத்தமான ஸஹாபாக்களை கண்டித்தார்கள். தனது விருப்பத்திற்குரிய மனைவியாகிய ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைக்கூட பல இடங்களில் கண்டித்திருக்கின்றார்கள்.

யஹூதிகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் வந்து அஸ்ஸாமு அலைக்கும் - உங்கள் மீது நாசம் உண்டாகட்டும் - என்று கூறினார்கள். அப்போது ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் உங்கள் மீதும் நாசம் உண்டாகட்டும், இன்னும் அல்லாஹ் உங்களை சபிப்பானாக, உங்கள் மீது கோபப்படுவானாக என்று கூறினார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷாவே நிதானமாக செயற்படுங்கள். மென்மையைப் பற்றிப்பிடியுங்கள். கலவரத்தையும் மோசமானவற்றையும் நான் உங்களுக்கு எச்சரிக்கின்றேன் என்றார்கள்.

-     புஹாரீ

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் ஒரு முறை ஸபிய்யா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை குட்டையானவள் என்று வர்ணித்தார்கள். அவர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டிக்கும் முகமாக: நீ ஒரு வார்த்தையை மொழிந்தாய் அது கடல் நீருடன் கலக்கப்பட்டால்; கலந்து விடக்கூடியதாக இருக்கும் என்று கூறினார்கள்.

-     ஸஹீஹுத் திர்மிதீ

ஆகவே, நபிமார்கள் அசத்தியத்தைக் காணும் போது அதனை மறுத்துரைத்துள்ளார்கள் என்பதை இவ்வாதாரங்கள் தெளிவுபடுத்துகின்றன. அசத்தியத்தில் ஈடுபடுபவர்கள் தங்களது உறவினர்களாக இருந்தாலும் சரியே! இப்றாஹீம் மற்றும் நூஹ் அலைஹிமஸ்ஸலாம் அவர்களின் வரலாற்றைப் படிக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் இதனைப் புரிந்து கொள்ளலாம்.

அஷ்ஷெய்ஹ் பின் பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்: பெருமையடிப்பவன், பித்அத்வாதி, மடயன் ஆகியவர்கள் குறித்துப் பேசாமல் மௌனம் சாய்ப்பது ஆலிம்களுக்குக் கூடாது. ஏனென்றால் இது ஒரு மகத்தான தவறாகும். மேலும், தீங்குகளும் பித்அத்களும் பரவுவதற்கும் நலவுகள் மறைந்து குறைவதற்கும் ஸுன்னா மறைந்து விடுவதற்கும் உள்ள காரணங்களில் இது ஒன்றாகும். சத்தியத்தைப் பேசி அதன்பால் அழைப்பு விடுத்து அசத்தியத்தை மறுத்து அதனை எச்சரிப்பது ஆலிம்களின் மீது உள்ள கடமையாகும்.

வயோதிபர்களாக இருந்தாலும் அல்லது வாலியர்களாக இருந்தாலும் இதுவே ஆலிம்களின் கடமையாகும். அவர்கள் எங்கிருந்த போதிலும் மார்க்க ரீதியான ஆதாரங்களைக் கொண்டு சத்தியத்தைப் பரப்புவதும் அதிலே மக்களுக்கு ஆர்வமூட்டுவதும் அசத்தியிலிருந்து அவர்களை விரண்டோடச் செய்வதும் அதனை எச்சரிப்பதும் கடமையாகும்.

-     மஜ்மூஉ பதாவா அஷ்ஷெய்ஹ் பின் பாஸ்

நபிமார்களின் வாரிசுகளாகிய ஆலிம்கள் நபிமார்களின் பணியாகிய அசத்தியத்தை மறுத்துரைத்தலை அவர்களது அழைப்புப் பிரச்சாரத்திலும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

இமாம்களான இப்னு தைமியா, இப்னுல் கைய்யிம் ரஹிமஹுமல்லாஹ் நவீன காலத்தில் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய அறிஞர்களான பின் பாஸ், அல்பானீ, இப்னு உஸைமீன், முக்பில் ரஹிமஹுமுல்லாஹ் ஸாலிஹ் அல்பவ்சான், ரபீஃ, அப்துல் முஹ்ஸின் அல்அப்பாத், யஹ்யா இப்னு அலீ அல்ஹஜூரி ஹபிழஹுமுல்லாஹ் போன்ற அறிஞர்களுடைய உரைகளையும் நூட்களையும் நாம் ஆராய்ந்து பார்த்தால் வழிகேடர்களால் பரப்பப்பட்ட அசத்தியத்தை மறுத்துரைக்காத எந்த ஒரு நூலையும் நாம் பார்க்க முடியாது, உரைகளையும் கேட்க முடியாது. முஸ்லிம்களை நச்சுக் கருத்துக்களில் இருந்து பாதுகாத்த பெரும் அறிஞர்களாக இவர்கள் காணப்படுகின்றார்கள்.

அசத்தியத்தை மறுத்துரைப்பவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகுவார்கள். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அசத்தியத்தை மறுத்துரைக்காவிடின் நபிமார்களாகிய இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது சமூகத்தால் தூற்றப்பட்டிருக்க மாட்டார்கள். நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நைல் நதியைக் கடந்திருக்கமாட்டார்கள். ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கொலை செய்யப்படுவதற்காக துரத்தப்பட்டிருக்க மாட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு வெளியேற்றப்பட்டிருக்கவும் மாட்டார்கள்.

இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சிறையிலடைக்கப்பட்டார்கள். அவர்கள் விபச்சாரம் செய்யவுமில்லை, திருடவுமில்லை, கொலை செய்யவுமில்லை, கொள்ளையடிக்கவுமில்லை. மாறாக, அசத்தியத்தை எதிர்த்துப் பேசியதால் அவர்கள் சிறையிலடைக்கப்பட்டார்கள். ஆகவே, அசத்தியத்தை மறுத்துரைப்பவர்கள் இது குறித்து கவலையடைவதற்கு அவசியமில்லை.

ஐந்தாவது அடையாளம்

உண்மையான ஆலிம்கள் அவர்களது அழைப்புப்பணியின் மூலம் அல்லாஹ்வின் கூலியை மாத்திரம் எதிர்பார்ப்பார்கள். ஏனென்றால், அழைப்புப் பிரச்சாரம் என்பது ஒரு வணக்கமாகும். அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்: அவர்கள் மார்க்கத்தை அவனுக்கே தூய்மையாக்கியவர்களாகவே தவிர அல்லாஹ்வை வணங்குவதற்கு ஏவப்படவில்லை.

-     அல்பய்யினா: 5

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே அமையும்.

             -     புஹாரீ, முஸ்லிம்

அழைப்புப் பணியை அல்லாஹ்வுக்காக மாத்திரம் மேற்கொள்வது நபிமார்களின் வழிமுறை என்பதை அல்குர்ஆன் சித்தரிக்கின்றது. நபிமார்களான ஹூத், ஷுஐப், ஸாலிஹ், லூத் அலைஹிமுஸ்ஸலாம் ஆகியவர்கள் தம் சமூகத்திடம் கூறிய வார்த்தையை அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான்: அதற்காக வேண்டி நாம் உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. என்னுடைய கூலி அகிலத்தாரின் இரட்சகன் மீதே இருக்கின்றது.

-     அஷ்ஷுஅரா: 145

அழைப்புப் பணியை பணம் சம்பாதிக்கவும், மக்களை தன்பக்கம் ஈர்த்தெடுக்கவும், அல்லது பெருமைக்காகவும் மேற்கொள்வது அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்பட்ட அழைப்புப் பணியல்ல.

ஆறாவது அடையாளம்

உண்மையான ஆலிம்கள் மக்களை அல்லாஹ்வின்பால் அழைக்கின்ற விடயத்தில் மக்களின் பொருத்தத்தை கவனிக்க மாட்டார்கள். எது சத்தியமோ அதனை உரக்கக் கூறுவார்கள். எது அசத்தியமோ அதனை எதிர்த்துப் பேசுவார்கள். இதனால் மக்கள் வெறுப்படைகின்றார்களா? இல்லையா? மக்கள் தன்னைப் பொருந்திக் கொள்கிறார்களா? இல்லையா? என்பதைப் பார்க்கமாட்டார்கள்.

ஏனென்றால், மக்களின் பொருத்தம் பார்த்து பிரச்சாரம் செய்வது நபிமார்களின் அழைப்புப் பணியில் காணப்படவில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழைப்புப் பணியை மேற்கொண்டபோது அவரது சமூகத்தில் இருந்த குறைஷிக் காபிர்கள் அவரைக் கடுமையாக எதிர்த்தனர். அவருடைய சிறிய தந்தையாகிய அபூதாலிபிடம் பலர் முறைப்பட்டனர். அவ்வாறிருந்தும் கூட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களுடைய பொருத்தத்தை நாடி அழைப்புப் பணியிலிருந்து விலகிக்கொள்ளவில்லை.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நபியே! நீங்கள் ஏவப்படுவதை பகிரங்கமாகச் சொல்லுங்கள்.

-     அல்ஹிஜ்ர்: 94

எனவே, அல்லாஹ்வின் கட்டளையின் பிரகாரம் அவர்கள் அவர்களுக்கு ஏவப்பட்டதையெல்லாம் பகிரங்கமாக எத்திவைத்தார்கள். சமூகத்தில் பிரிவினை உண்டாகும், என்னை அவர்கள் வெறுப்பார்கள் என்ற சிந்தனைப்போக்கு அவர்களிடத்தில் காணப்படவில்லை.

உண்மையிலேயே மனிதர்களின் விருப்பு வெறுப்பைக் கவனித்தே அழைப்புப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவிலிருந்து விரட்டப்பட்டிருக்க மாட்டார்கள். உண்மையான மார்க்கத்தை எவ்வித தயக்கமும் இன்றி அவர்கள் எத்திவைத்ததினாலே அவர்களுக்கு மக்காவை விட்டும் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது பிரச்சாரத்தை தன் சமூகத்திற்கு மத்தியில் எத்திவைத்தபோது அச்சமூகம் அவரைப் பார்த்து பின்வருமாறு கூறியது: ஸாலிஹே! இதற்கு முன்னர் நீர் எங்களிடத்தில் நம்பிக்கைக்குரியவராக இருந்தீர். எமது மூதாதையர்கள் வணங்கியதை நாம் வணங்குவதை விட்டும் எம்மை தடுக்கின்றீரா?

-     ஹூத்: 62

தனக்கிருந்த மதிப்பைக்கூட கவனிக்காமல் நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை எத்திவைத்தார்கள்.

எனவே, நபிமார்களின் வாரிசுகளாகிய ஆலிம்களும் இவ்வாறான ஒரு முறையிலேயே அவர்களுடைய அழைப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும். ஓர் உண்மையான ஆலிம் எவ்வாறு இருப்பார் என்பதைப் பல அல்குர்ஆன் ஆதாரங்களும் நபிமொழிகளும் தெளிவுபடுத்துகின்றன. அவைகளையும் கண்டறிந்து இங்கு குறிப்பிட்ட அடையாளங்களை முன்வைத்தும் நாம் ஆலிம்களை இனம்கண்டு அவர்களிடம் அறிவைக் கற்றுக்கொள்வது எமது கடமையாகும்.

-     அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்