ஸூரதுன் நூர் விளக்கவுரை – 12

بسم الله الرحمن الرحيم

வீடுகளில் பிரவேசிக்கும் போது பேண வேண்டிய ஒழுங்குகள்

يأيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خيرلكم لعلكم تذكرون فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم وإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم والله بما تعملون عليم ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم والله يعلم ما تبدون وما تكتمون  29-27

பொருள்: விசுவாசங் கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் - நீங்கள் நுழைய அவசியம் ஏற்பட்டால், அவ்வீடுகளில் உள்ளவர்களிடம் - நீங்கள் - மூன்று முறை - அனுமதி கோரி, அவ்வீடுகளில் உள்ளோருக்கு ஸலாம் கூறாதவரை அவற்றில் நுழையாதீர்கள். இவ்வாறு நடந்து கொள்வதுவே உங்களுக்கு மிகச் சிறந்ததாகும். நீங்கள் நல்லுபதேசம் பெறும் பொருட்டு - இது உங்களுக்குக் கூறப்படுகிறது. - அவற்றில் எவரையுமே நீங்கள் காணவில்லையென்றால், உங்களுக்கு அனுமதியளிக்கப்படும் வரையில் அவற்றில் நுழையாதீர்கள் மேலும், நீங்கள் திரும்பிவிடுங்கள் என்று - அவற்றில் உள்ளோரிடமிருந்து - உங்களுக்குக் கூறப்பட்டால் நீங்கள் திரும்பிவிடுங்கள். அதுவே உங்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும் இன்னும், நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கறிகின்றவன். - விசுவாசிகளே! எவராலும் - குடியிருக்கப்படாத வீடுகளில் - அவற்றில் உங்களுடைய பொருட்கள் இருந்து, அதற்காக நீங்கள் அவற்றில் நுழைவது உங்கள் மீது குற்றமாகாது மேலும், அல்லாஹ், நீங்கள் வெளியாக்குவதையும், மறைத்துக்கொள்வதையும் அறிவான்.

பிறர் வீட்டினுள் பிரவேசிக்க முன்...

நுழைய முன் மூன்று முறை அனுமதி கேட்க வேண்டும். அனுமதி கிடைக்காத போது திரும்பிவிட வேண்டும்.

இதற்குச் சான்றாக, ஒரு முறை அபூ மூஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டை நோக்கி வந்து மூன்று முறை நுழைய அனுமதி கேட்டபோது உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து எந்த பதிலையும் காணாத அபூ மூஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் திரும்பிச் செல்லலானார்கள். அப்போது உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்: அப்துல்லாஹ் இப்னு கைஸ் - அபூ மூஸா - இன் சத்தம் கேட்டதைப் போன்று உணர்கிறேன். போய்ப்பாருங்கள்! எனத் தனது தோழர்களைப் பணித்தார்கள். அவர்கள் வெளியே வந்து பார்த்தபோது, அபூ மூஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டதை உணர்ந்தார்கள். மீண்டும் ஒருமுறை அவர்கள் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைச் சந்திக்க வந்த போது,

உமர் ரழியல்லாஹு அன்ஹு: ஏன் திரும்பிச் சென்றீர்கள்?

அபூ மூஸா ரழியல்லாஹு அன்ஹு: நான் மூன்று முறைகள் உட்பிரவேசிக்க அனுமதி கேட்டேன், எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. அதனால் தான் சென்றேன். நிச்சயமாக நபியவர்கள் பின்வருமாறு கூறக்கேட்டுள்ளேன். உங்களில் ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும் அனுமதி கிடைக்காதவிடத்து அவர் திரும்பிச் செல்லட்டும்.

உமர் ரழியல்லாஹு அன்ஹு: நீர் இக்கூற்றுக்குத் தெளிவான சான்றை எனக்குச் சமர்ப்பிக்க வேண்டும், இல்லாவிடின் உமக்கு அடிப்பேன்.

அப்போது அபூ மூஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அன்ஸாரித் தோழர்களுக்கு மத்தியில் சென்று நடந்த சம்பவத்தைக் கூறினார்கள்.

அன்ஸாரிகள்: உமது கூற்றுக்கு எம்மில் உள்ள சிறார்கள் சான்று பகருவார்கள்.

பிறகு அபூ ஸஈத் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அபூ மூஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் சென்று உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் முன்னிலையில் வழிமொழிந்தார்கள்.

உமர் ரழியல்லாஹு அன்ஹு: வியாபார இஸ்தலங்கள் தொடர்பான விவகாரங்களில் ஈடுபட்டிருந்ததால் உங்கள் அனுமதி கோரல் என் செவிகளை எட்டவில்லை.

எனக் கூறி தாம் விடையளிக்கத் தவறியமைக்கான காரணத்தைத் தெளிவுபடுத்தினார்கள்.

-    பத்ஹுல் பாரி: 13 ∕ 332

மேலும், பின்வரும் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பும் இதற்கு பச்சைக் கொடி காட்டுகின்றது.

ஒரு முறை நபியவர்கள் ஸஃத் இப்னு உபாதா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டிற்கு வருகை தந்தார்கள்.

நபியவர்கள்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்.

ஸஃத் ரழியல்லாஹு அன்ஹு: வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹ்.

ஆயினும், ஸஃத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸலாத்தின் பதிலை சத்தமிட்டுக் கூறாமல் மௌனமாகக் கூறினார்கள். இவ்வாறு நபியவர்கள் மூன்று முறை ஸலாம் கூறியும் ஸஃத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மௌனமாகவே பதிலுரைத்தார்கள். அப்போது, நபியவர்கள் திரும்பிச் செல்ல எத்தனித்தார்கள். இதை உணர்ந்த ஸஃத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபியவர்களைப் பின்தொடர்ந்து சென்று,

ஸஃத் ரழியல்லாஹு அன்ஹு: எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பனமாகட்டும். நீங்கள் ஸலாம் சொன்ன போதெல்லாம் அவைகள் என் செவிகளுக்கு எட்டின. ஆயினும், உங்களுக்கு கேட்காத விதத்தில் மௌனமாக பதிலளித்தேன். நான் இவ்வாறு செய்ததெல்லாம் உங்களுடைய ஸலாத்தின் காரணமாக எனக்கு அபிவிருத்தி - பரகத் - கிடைக்க வேண்டும் என்பதற்காகவேயாகும்.

பிறகு நபியவர்களைத் தனது வீட்டிற்குள் அழைத்துச் சென்று சிறப்பாக உபசரித்தார்கள்.

- அஹ்மத்: 3 ∕ 138

அனுமதி கேட்பதுடன் ஸலாம் சொல்வதும் நபிவழியாகும்.

ஒரு முறை ஸப்வான் இப்னு உமையா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபியவர்களிடத்தில் ஸலாம் கூறி அனுமதியின்றிப் பிரவேசித்தார்கள். அப்போது நபியவர்கள், நீங்கள் திரும்பிச் சென்று அஸ்ஸலாமு அலைக்கும், நான் உள்ளே பிரவேசிக்கட்டுமா? என்று அனுமதி கேட்டுவிட்டு வாருங்கள் எனப் பணித்தார்கள்.

- அஹ்மத்: 3 ∕ 414

அனுமதி பெறப்பட்டவர் கதவுக்கு எதிரில் நிற்காமல் கதவின் வலப்பக்கமாகவோ அல்லது இடப்பக்கமாகவோ நிற்க வேண்டும்.

நபியவர்கள் ஒரு கூட்டத்தாரின் கதவுக்கருகாமையில் வந்தால், அதன் எதிரில் நிற்கமாட்டார்கள். மாற்றமாக, அக்கதவின் வலப்பக்கமாக அல்லது இடப்பக்கமாக நின்று ஸலாம் கூறுவார்கள். ஏனெனில், அக்காலத்தில் எங்களது வீடுகளில் திரைச் சீலைகள் தொங்கவிடப்பட்டிருக்கவில்லை.

-           அபூதாவூத்: 5 ∕ 374

நபியவர்கள் கூறினார்கள்: ஒருவர் உன்னுடைய அனுமதியின்றி உன்னை உற்று நோக்க, நீ ஒரு சிறு கல்லை ஆட்காட்டி விரலுக்கு மத்தியில் வைத்து எறிவதன் மூலம் அவரது கண்ணைக் குருடாக்கிவிட்டால் உன் மீது எக்குற்றமும் இல்லை.

- பத்ஹூல் பாரி: 12∕ 253, முஸ்லிம்: 3 ∕ 1699

அனுமதி கேட்கக் கூடியவர் தான் யார் என்ற விபரத்தைக் கூறுவது விரும்பத்தக்கது.

ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: நான் என் தந்தையின் கடன் விவகாரமாக கதைப்பதற்காக நபியவர்களின் வீட்டை நோக்கி வந்தேன், அப்போது வீட்டின் கதவு மூடியிருந்தது, கதவைத் தட்டினேன்.

நபியவர்கள்: யார் அது?

ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு: நான் தான்!

நபியவர்கள்: நான்... நான்...

அவர் இவ்வாறு கூறுவதை வெறுப்பதைப் போன்று கூறினார்கள்.

-           பத்ஹூல் பாரி: 11 ∕ 37, முஸ்லிம்: 3 ∕ 1697, அபூதாவுத்: 5 ∕ 374, துஹ்பதுல் அஹ்வதி: 7 ∕ 491, நஸாயி பில் குப்ரா: 6 ∕ 90, இப்னு மாஜா: 2 ∕ 1222

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள்: இக்குர்ஆன் வசனத்தில் இடம் பெற்றுள்ள தஸ்தஃனிஸு என்ற வாசகத்தின் விளக்கமானது அனுமதி கேட்பதைக் குறிக்கின்றது.

-           தபரி: 19 ∕ 146

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

- அபூஹுனைப் முஹம்மத் ஹிஷாம் இப்னு முஹம்மத் தௌபீக்