‘ஹிஸ்னுல் முஃமின் மின் அத்காரி வஅத்இயதின் நபிய்யி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்’ – 03

بسم الله الرحمن الرحيم

2. சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் மற்றும் லாஇலாஹ இல்லல்லாஹ் (ஆகிய வார்த்தைகளின்) சிறப்பு.

7. அல்லாஹ்வுக்கு மிக விருப்பத்திற்குரிய வார்த்தைகள் நான்காகும். (அவை) சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், லாஇலாஹ இல்லல்லாஹ் மற்றும் அல்லாஹு அக்பர் ஆகியனவாகும். (அவற்றில்) எதனைக் கொண்டு நீர் ஆரம்பித்தாலும் உமக்கு எவ்விதத் தீங்கும் ஏற்படப்போவதில்லை.

குறிப்பு: (இச்செய்தி) முஸ்லிம் (2137) எனும் கிரந்தத்தில் ஸம்ரா இப்னு ஜுன்துப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது.

8. சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், லாஇலாஹ இல்லல்லாஹ் மற்றும் அல்லாஹு அக்பர் என்று நான் கூறுவது, எதன் மீது சூரியன் உதயமாகிறதோ அதனைவிட எனக்கு மிக உவப்பானதாக இருக்கும்.

குறிப்பு: (இச்செய்தி) முஸ்லிம் (2695) எனும் கிரந்தத்தில் அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது.

9. ஆச்சரியப்படுகிறீர்களா?! ஆச்சரியப்படுகிறீர்களா?! ஐந்து விடயங்கள் தராசில் கனமானவையாக இருக்கும். (அவை) லாஇலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், சுப்ஹானல்லாஹ் மற்றும் அல்ஹம்து லில்லாஹ் என்று கூறுவதும் தான் (உலகில்) விட்டுவிட்டுச் சென்ற ஸாலிஹான பிள்ளையுமாகும். (அவ்வாறு மரணித்தவர்) தனது பிள்ளையின் மூலம் நற்கூலியை ஆதரவு வைக்கக் கூடியவராக இருந்திருப்பார்.

குறிப்பு: (இச்செய்தி) அஹ்மத் (15107), இப்னு அபீஆஸிம் என்பவர் அபூஸுல்மா என்பவரைத் தொட்டும் சுன்னாஹ் (எனும் நூலில்) பக்கம்: 263, அஸ்ஸஹீஹ் அல்முஸ்னத் (1229)  ஆகிய கிரந்தங்களில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவாகியுள்ளது. மற்றும், அஸ்ஸஹீஹா (1204) (எனும் நூலிலும் காணலாம்.)

10. சுத்தம் ஈமானின் பாதியாகும். மேலும், அல்ஹம்துலில்லாஹ் தராசை நிரப்பக்கூடியதாக இருக்கும். இன்னும், சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ் ஆகிய இருவார்த்தைகள் அல்லது வார்த்தை வானங்கள் மற்றும் பூமி ஆகியவற்றுக்கு மத்தியிலான இடைவெளியை நிரப்பக்கூடியதாக இருக்கும்.

குறிப்பு: (இச்செய்தி) முஸ்லிம் (223) எனும் கிரந்தத்தில் அபூமாலிக் அல்அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது.

11. ரஹ்மானாகிய (அல்லாஹ்வுக்கு) மிக விருப்பமானதும் நாவிற்கு இலகுவானதும் தராசில் வலுவானதுமான இரு வார்த்தைகள் உள்ளன. அவை سبحان الله وبحمده உம் سبحان الله العظيم உம் ஆகும்.

குறிப்பு: (இச்செய்தி) புகாரி (7563), முஸ்லிம் (2694) ஆகிய கிரந்தங்களில் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது.

3. لا حول ولا قوة إلا بالله (என்ற வார்த்தையின்) சிறப்பு

குறிப்பு: (இத்தலைப்பை) அல்ஜாமிஉஸ் ஸஹீஹ் எனும் கிரந்தத்தில் அத்தஃவாத் வல் அத்கார் எனும் தொகுப்பில் 79ம் இலக்க பாடத்தின் கீழ் காணலாம்.

12. சுவனத்தின் பொக்கிஷங்களில் ஒன்றை நான் உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா? (என நபியவர்கள் வினவியபோது), அதற்கு நான்: ஆம். என்று பதிலளித்தேன். (அப்போது நபியவர்கள்): நீர் لا حول ولا قوة إلا بالله என்று கூறு (எனப் பணித்தார்கள்.)

குறிப்பு: (இச்செய்தி) அபூமூஸா அல்அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் புகாரி (6409), முஸ்லிம் (2704) ஆகிய கிரந்தங்களிலும் அபூதர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் ஸஹீஹ் எனும் தரத்தில் அஹ்மத் (20384), அஸ்ஸஹீஹுல் முஸ்னத் (268) ஆகிய கிரந்தங்களிலும் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அஸ்ஸஹீஹா (2166), அஹ்மத் (10318) ஆகிய கிரந்தங்களிலும் ஹஸன் எனும் தரத்தில் அஸ்ஸஹீஹுல் முஸ்னத் (268), (1351) எனும் கிரந்தத்திலும் மற்றும், அஸ்ஸஹீஹா (1528) எனும் கிரந்தத்திலும் பதிவாகியுள்ளது.

4. இஸ்திக்பார் - பாவமன்னிப்புக் கேட்டல் - இன் சிறப்பு

குறிப்பு: (இத்தலைப்பை) அல்ஜாமிஉஸ் ஸஹீஹ் எனும் நூலில் கிதாபுத் தஃவாத் வல் அத்கார் எனும் தொகுப்பில் பாட இலக்கம்: 82ல் காணலாம்.

நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் (பின்வருமாறு கூறியதாக அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்):

'இன்னும், உங்கள் இரட்சகனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனாக இருக்கிறான் என்று கூறினேன். (அவ்வாறு செய்தால்), அவன் உங்களுக்கு மழையைத் தொடராகப் பொழியச் செய்வான். செல்வங்களாலும், ஆண்மக்களாலும் உங்களுக்கு அவன் உதவி செய்வான். மேலும், உங்களுக்குத் தோட்டங்களை ஏற்படுத்துவான். உங்களுக்கு ஆறுகளையும் ஏற்படுத்துவான்.' (நூஹ்: 10 – 12)

13. தன்னுடைய பட்டோலையில் அதிகமான பாவமன்னிப்புக் கோரலைப் பெற்றுக் கொண்டவருக்கு நற்செய்தி உண்டாவதாக!

குறிப்பு: (இச்செய்தி) இப்னுமாஜா (3818) எனும் கிரந்தத்தில் அப்துல்லாஹ் இப்னு புஷ்ர் ரழியல்லாஹு அன்ஹு எனும் நபித்தோழரைத் தொட்டும் பதிவாகியுள்ளது. (மேலும்,) அஸ்ஸஹீஹுல் முஸ்னத் (எனும் நூலில்) (552) இச்செய்தி ஹஸன் எனும் தரத்தில் பதிவாகியுள்ளது. ஸஹீஹ் இப்னிமாஜா (3078) எனும் நூலிலும் இச்செய்தியைக் காணலாம்.

5. பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்.

குறிப்பு: (இத்தலைப்பை) அல்ஜாமிஉஸ் ஸஹீஹ் (எனும் நூலில்) கிதாபுத் தஃவாத் வல் அத்கார் எனும் தொகுப்பில் 06ஆம் இலக்க பாடத்தில் காணலாம்.

14. பிரார்த்தனை ஒரு வணக்கமாகும். உங்களுடைய இரட்சகன் கூறுகின்றான்: 'என்னை நீங்கள் அழையுங்கள் நான் உங்களுக்கு பதிலளிக்கின்றேன்.'

குறிப்பு: (இச்செய்தி) அபூதாவுத் (1479) எனும் கிரந்தத்தில் நுஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹு அன்ஹுமா எனும் நபித் தோழரைத் தொட்டும் பதிவாகியுள்ளது. (மேலும்,) அஸ்ஸஹீஹுல் முஸ்னத் (1159) எனும் கிரந்தத்தில் ஹஸன் எனும் தரத்தில் பதிவாகியுள்ளது.

6. பிரார்த்தனையானது மூன்றில் ஒரு விடயத்தில் தங்கியுள்ளது.

குறிப்பு: (இத்தலைப்பை) அல்ஜாமிஉஸ் ஸஹீஹ் (எனும் நூலில்) கிதாபுத் தஃவாத் வல் அத்கார் எனும் தொகுப்பில் 14ஆம் இலக்க பாடத்தில் காணலாம்.

15. எந்த ஒரு முஸ்லிம் தனது பிரார்த்தனையின் போது தீமையையும் உறவு முறையைத் துண்டிப்பதையும் நாடவில்லையோ அவன் செய்த துஆவுக்கு அல்லாஹ் மூன்றில் ஒரு பதிலை அளிப்பான். ஒன்றில் அவனது பிரார்த்தனைக்கு (அவசரமாக பதிலளிக்கும் நோக்கில்) அவன் கேட்டவற்றை உடனடியாகக் கொடுப்பான். (அல்லது), அவனது பிரார்த்தனையை மறுமையில் அவனுக்குப் பிரயோசனம் அளிக்கும் நோக்கில் சேகரித்து வைப்பான். (அல்லது), அவனைவிட்டும் (அவன் பாதுகாப்புத் தேடிய தீங்கைப்) போன்ற ஒரு தீங்கைத் திருப்பிவிடுவான். (அதற்குத் தோழர்கள்): 'அப்படியென்றால் நாங்கள் அதிகரிப்போம்' எனக்கூற, நபியவர்கள்: 'அல்லாஹ் அதைவிட அதிகரிப்பவனாக உள்ளான்' என பதிலளித்தார்கள்.

குறிப்பு: (இச்செய்தி) அபூஸஈத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அஹ்மத் (10709) எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது. (மேலும்) அஸ்ஸஹீஹ் அல்முஸ்னத் (412) எனும் கிரந்தத்தில் ஸஹீஹ் எனும் தரத்திலும் இச்செய்தி பதிவாகியுள்ளது. ஸஹீஹுத் தர்கீப் வத்தர்ஹீப் (1633) எனும் நூலிலும் இச்செய்தி இடம்பெற்றுள்ளது.

7. சூரியன் உதயமாகும் வரை பஜ்ர் தொழுகைக்குப் பின் திக்ர் செய்வதின் சிறப்பு

குறிப்பு: (இத்தலைப்பை) அல்ஜாமிஉஸ் ஸஹீஹ் எனும் நூலில் கிதாபுத் தஃவாத் வல்அத்கார் எனும் தொகுப்பில் 68ஆம் இலக்க தலைப்பின் கீழ் காணலாம்.

16. பஜ்ருத் தொழுகைக்குப் பின் இருந்து சூரியன் உதயமாகும் வரை அல்லாஹுத்தஆலாவை ஞாபகிக்கும் ஒரு கூட்டத்துடன் நான் உட்காருவது இஸ்மாஈல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சந்ததியில் இருந்து நான்கு நபர்களை அடிமையில் இருந்து விடுதலை செய்வதைவிட எனக்கு மிக விருப்பமானதாகும். மேலும், அஸர் தொழுகைக்குப் பின் இருந்து சூரியன் மறையும் வரை அல்லாஹ்வை ஞாபகிக்கும் ஒரு கூட்டத்துடன் நான் உட்காருவது நான்கு நபர்களை அடிமையில் இருந்து விடுதலை செய்வதைவிட எனக்கு மிக விருப்பமானதாகும்.

குறிப்பு: (இச்செய்தி) அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அபூதாவுத் (3667) எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது. மேலும், அஸ்ஸஹீஹ் அல்முஸ்னத் (106) எனும் கிரந்தத்தில் ஹஸன் எனும் தரத்தில் பதிவாகியுள்ளது. அஸ்ஸஹீஹா (2916) எனும் நூலிலும் இச்செய்தியைக் காணலாம்.

-              தமிழில்: அபூஹுனைப்