ஸூரதுன் நூர் விளக்கவுரை – 8

بسم الله الرحمن الرحيم

ளிஆன் பற்றிய விரிவான தகவல்கள்

ளிஆன் என்றால் என்ன?

ளிஆன் என்ற அறபு வாசகத்திற்கு சாபமிடுதல் என்று பொருள் கொள்ளப்படும். மார்க்க அடிப்படையில் இப்பதத்தை நோக்கினால் அதன் வரைவிலக்கணமானது: அல்லாஹ்வைக் கொண்டு உறுதியாக சாட்சி கூறும் செயற்பாடு என்று அமையும். இச்சாட்சியங்களின் போது கணவனின் தரப்பில் அல்லாஹ்வின் சாபத்தைக் கொண்டும் மனைவியின் தரப்பில் அல்லாஹ்வின் கோபத்தைக் கொண்டும் ஒருவருக்கொருவர் சாபமிட்டுக்கொள்வார்கள்.  இவ்வாறு சாபமிட்டுக் கொள்வது கணவனுக்கு அவதூறுக்குரிய தண்டனையாகவும் மனைவிக்கு விபச்சாரத்துக்குரிய தண்டனையாகவும் அமையும். இச்செயன்முறையின் ஈற்றில் கணவன் தான் பொய் கூறுபவராக இருந்தால் அல்லாஹ்வின் சாபம் தன் மீது உண்டாகட்டும் என்று கூறுவதால் இதற்கு ளிஆன் - சாபமிடுதல் - என்று கூறப்படும்.

ளிஆன் செல்லுபடியாவதற்கான நிபந்தனைகள்

1. ளிஆன் செய்யும் கணவன், மனைவி ஆகிய இருவரும் பருவ வயதை அடைந்தவர்களாகவும் புத்தி சுயாதீனமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.

2. கணவன் விபச்சாரத்தைக் கொண்டு தெளிவாகத் தன் மனைவியைக் குற்றம் சாட்ட வேண்டும்.

3. ளிஆனுடைய சட்டதிட்டங்கள் பூரணமாக நிறைவுறும் வரை மனைவி தன் கணவனின் கூற்றைப் பொய்ப்பிப்பதில்        உறுதியாக இருக்க வேண்டும்.

4. ளிஆனானது நீதிபதியுடைய இறுதித் தீர்ப்புடன் நிறைவுற வேண்டும்.

ளிஆன் செய்வது எப்படி?

இச்சட்டத்தை செயலுருப்படுத்துவதற்குப் பின்வரக்கூடியவர்கள் குறித்த அச்சபையில் அங்கம் வகித்திருப்பது அவசியமாகும்.

1. கணவன்     2. மனைவி     3. நீதிபதி     4. பார்வையாளர்கள்

ளிஆன் சட்டமானது பின்வரக்கூடியவிதத்தில் நீதிபதிக்கு முன்னிலையில் இடம்பெறும்.

கணவன்: எனது இந்த மனைவி விபச்சாரம் செய்ததாக நான் கூறும் கூற்று உண்மையானது என்று அல்லாஹ்வை சாட்சியாக வைத்துக் கூறுகின்றேன். - என்று நான்கு முறைகள் கூறவேண்டும். மனைவி     அச்சபைக்கு சமுகமளித்திருந்தால் அவரைச் சுட்டிக்காட்டியும் சமுகமளிக்காதிருந்தால் அவரின் பெயரைக் குறிப்பிட்டும் ளிஆனை முன்வைக்க வேண்டும் -

நீதிபதி: - கணவனை நோக்கி - அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். அவதூறுக்குரிய தண்டனை மறுமையின் தண்டனையைவிட மிக இலகுவானது. மேலும், பொய் கூறுவதை விட்டும் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள் - என்று கூறுவார் -

கணவன்: - ஐந்தாவது முறையாக - நான் பொய் கூறுபவர்களில் ஒருவனாக இருந்தால் அல்லாஹ்வின் சாபம் என் மீது உண்டாகட்டும். - என்று கூறுவார் -

பின்பு நீதிபதி மனைவியிடத்தில் தன் கணவனின் அவதூறை மறுத்து சத்தியம் செய்யுமாறு வேண்டிக்கொள்வார்.

மனைவி: அல்லாஹ் மீது சத்தியமாக என் விடயத்தில் விபச்சாரத்தைக் கொண்டு எனது கணவன் கூறியது முற்றிலும் பொய்யானது. - என்று நான்கு முறைகள் கூற வேண்டும் -

நீதிபதி: - மனைவியை நோக்கி - அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். உலகில் விபச்சாரத்திற்குரிய தண்டனை மிகவும் இலகுவானது. மறுமையின் வேதனையைப் பயந்து உண்மை கூறுங்கள். - என்று வேண்டிக்கொள்வார் -

மனைவி: - ஐந்தாவது முறையாக - எனது கணவன் உண்மையாளர்களில் ஒருவராக இருந்தால் அல்லாஹ்வின்      கோபம் என் மீது உண்டாகட்டும். - என்று கூறுவார் -

ளிஆனுக்குப் பிறகு... ?

மேற்கூறப்பட்டவிதத்தில் ளிஆன் இடம்பெறுமிடத்து பின்வரும் சட்டதிட்டங்கள் கருத்தில் கொள்ளப்படவேண்டும்.

1. கணவனுக்கு அவதூறுக்குரிய தண்டனை வழங்கப்படமாட்டாது.

2. கணவன், மனைவி ஆகிய இருவரையும் நிரந்தரமாகப் பிரித்துவிட வேண்டும்.

ளிஆன் செய்து கொண்ட கணவன், மனைவி இருவரையும் பிரித்துவிட வேண்டுமா? என இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களிடத்தில் வினவப்பட்ட போது, ஸுப்ஹானல்லாஹ்! ஆம். என்று கூறிவிட்டு ளிஆனுடைய வசனம் இறக்கியருளப்பட்டமைக்கான காரணத்தை தெளிவுபடுத்தினார்கள்.

                                     - புகாரி: 5311, 5312 முஸ்லிம்: 1493

3. குழந்தை பிறந்ததும் அக்குழந்தை கணவனின் பரம்பரையுடன் சேர்க்கப்படமாட்டாது. மனைவி மாத்திரமே அதற்குப் பொறுப்பாளராக இருப்பார். இவ்விடயத்தைத் தெளிவாகவே கணவன் ளிஆனின் போது குறிப்பிட வேண்டும்.

- புகாரி: 5315, முஸ்லிம்: 1494

4. மனைவி ளிஆன் செய்ய மறுத்தால் அவளுக்கு விபச்சாரத்திற்குரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.

- ஸாதுல் மஆத்: 4 ∕ 95, அல்இஹ்தியாராத் அல்பிக்ஹிய்யா: 345

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-    அபூஹுனைப் முஹம்மத் ஹிஷாம் இப்னு முஹம்மத் தௌபீக்