ஸூரதுன் நூர் விளக்கவுரை – 18

بسم الله الرحمن الرحيم

மேற்கூறப்பட்ட போதனைகளைத் தொடர்ந்து அல்லாஹுத்தஆலா, பெண்கள் தம் அலங்காரங்களை யார் யாருக்குக் காட்டலாம் என்பது பற்றிப் பேசுகின்றான். அதன் தொடரில்...

ஒரு பெண்மணிக்கு மஹ்ரம் - அனுமதிக்கப்பட்ட ஆண்கள் துணை - ஆக இருப்பவர்கள் யார்யார் என்பதைப் பட்டியல் படுத்துகின்றான். அப்பட்டியல் பின்வருமாறு...

1. தந்தையர்

2. கணவர்மாரின் தந்தையர்

3. தம் குமாரர்கள்

4. தம் கணவர்மாரின் குமாரர்கள்

5. தம் சகோதரர்கள்

6. தம் சகோதரர்களின் குமாரர்கள்

7. தம் சகோதரிகளின் குமாரர்கள்

எனவே, இத்தகையவர்கள் முன்னிலையில் ஒரு பெண்மணி தன்னுடைய அலங்காரங்களை வெளிப்படுத்த முடியும். ஆயினும், வேண்டுமென்று அவற்றை வெளிப்படுத்துவதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

இக்ரிமா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் வரும் ஓர் அறிவிப்பில், இப்னுல் முன்திர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறும் போது: “இவ்வசனத்தை முழுமையாகச் செவியேற்றுக் கொண்டிருந்த இக்ரிமா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: ஒரு பெண்மணி தனது அங்கங்களை வெளிக்காட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டோர் பட்டியலில் அவளின் தந்தையின் சகோதரர்களையும், தாயின் சகோதரர்களையும் குறிப்பிடப்படாததிற்குக் காரணம், அவர்கள் முன்னிலையில் ஒரு பெண்மணி தனது அலங்காரங்களை வெளிப்படுத்தினால் அவர்கள் தங்களது புதல்வர்களுக்கு மத்தியில் அப்பெண்மணி குறித்து வர்ணிக்க வாய்ப்புள்ளது. இதனைக் கருத்திற்கொண்டே அல்லாஹுத்தஆலா இத்தகையவர்களைப் பட்டியலில் சேர்க்கவில்லை. எனவே, இவர்களுக்கு முன்னிலையில் ஒரு பெண்மணி தனது ஹிஜாபைக் களைவது அனுமதிக்கப்பட்ட ஒன்றல்ல” என்கிறார்கள். (இப்னு அபீ ஷைபா: 4 ∕ 338)

குறிப்பு: இக்ரிமா என்பவர் அபூ ஜஹ்லின் மகனாவார். மேலும், இவர் மக்கா வெற்றியின் பிறகு இஸ்லாத்தைத் தழுவினார். சரியான தகவல்களின் அடிப்படையில் இவர் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஷாம் தேசத்தில் இடம் பெற்ற யர்மூக் போரில் கொலை செய்யப்பட்டார் என இமாம் தகபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

இதனை அடுத்து அல்லாஹுத்தஆலா, அலங்காரங்களை வெளிக்காட்டப்பட அனுமதிக்கப்பட்டோர் வரிசையில் பெண்களைக் குறிப்பிடுகின்றான். ஆயினும், அப்பெண்களானவர்கள் அஹ்லுத் திம்மத்தைச் சேர்ந்த காபிரான பெண்களாக இருக்கக்கூடாது. காரணம், அவர்கள் ரசித்த அலங்காரங்களை தங்கள் கணவர்மார்களுக்கு வர்ணிப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. இதனால் அவர்களின் கணவர்மார்களின் உள்ளங்களில் அம்முஸ்லிம் பெண்கள் குறித்து தவறான எண்ணங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

பொதுவாக இவ்விடம்பாடு முஸ்லிம் பெண்களில் இருப்பதற்கு வாய்ப்பிருந்தாலும், இவ்வாறு ஒரு பெண்மணி தனது கணவனிடத்தில் பிறிதொரு பெண்மணியைப்பற்றி வர்ணிப்பது ஹராம் என்பதை அவள் நன்கு அறிந்திருப்பதால் இதனைவிட்டும் விலகிக் கொள்ள வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. ஆயினும், காபிரான பெண்களைப் பொறுத்தளவில் அவர்களிடத்தில் இத்தகைய வழிகாட்டல்கள் காணப்படாத காரணத்தினால் இது விடயத்தில் பேணுதலின்றி நடந்து கொள்வார்கள் என்பதனாலேயே இக்கருத்து பெரும்பான்மையான அறிஞர்களினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அல்லாஹுத்தஆலா, வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்கள் தொடர்பாகப் பேசுகின்றான். அத்தகையோர் முன்னிலையில் ஒரு பெண்மணி தனது அலங்காரங்களை வெளிப்படுத்தலாம் என்றும் கூறியுள்ளான். இவர்கள் குறித்து இப்னு ஜரீர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகையில்: “இவர்கள் இணைவைக்கக்கூடிய பெண்களாவர், இத்தகையவர்கள் இணைவைக்கக்கூடியவர்களாக இருந்தும் கூட இப்பட்டியலில் அனுமதிக்கப்படக் காரணம் இவர்கள் அடிமை என்ற இஸ்தானத்தில் இருப்பதேயாகும்” என்கிறார்கள். (தபரி: 19 ∕ 160)

இதே கருத்தினை இமாம் ஸஈத் இப்னு முஸய்யப் ரஹிமஹுல்லாஹ் அவர்களும் ஆதரித்துள்ளார்கள். (அத்துர்ருல் மன்ஸூர்: 6 ∕ 183)

அடுத்து, அல்லாஹுத்தஆலா இப்பட்டியலில் ஆண்களில் பெண்களின் மீது விருப்பமற்ற பணியாளர்களைக் குறிப்பிடுகின்றான். இவர்களை இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள்: “உணர்ச்சியற்ற அறிவீனர்கள்” என இனங்காட்டுகின்றார்கள். (தபரி: 19 ∕ 161) ஆயினும், இக்ரிமா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்: “உணர்ச்சியற்ற அரவாணிகள்” என விவரித்துள்ளார்கள்.

எனவே, இது விடயத்தில் ஒரு நடுநிலையான தீர்வுக்கு வரவேண்டும். அந்த அடிப்படையில், பெண்களின் அலங்காரங்களை ரசித்து வர்ணிக்கக் கூடியவர்களாக அத்தகையவர்கள் இருப்பின் அவர்கள் முன்னிலையில் தம் அலங்காரங்களை வெளிக்காட்டுவதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறமுடியும். இதற்குச் சான்றாகப் பின்வரும் சம்பவத்தைக் குறிப்பிடலாம்.

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்: “ஒரு திருநங்கை நபியவர்களிடத்தில் அடிக்கடி பிரவேசிக்கக் கூடியவராக இருந்தார். நபியவர்களின் மனைவியர்களும் அவரை பெண்கள் மீது விருப்பமற்றோரில் ஒருவராகக் கருதி வந்தனர். ஒரு நாள் தினம் நபியவர்கள் தம் மனைவியர்களுக்கு மத்தியில் பிரவேசிக்கும் போது, அந்நபர் தான் கண்ணுற்ற ஒரு பெண்மணியைப்பற்றி வர்ணித்துக் கொண்டிருந்தார். இதனைச் செவிமடுத்த நபியவர்கள் அன்றிலிருந்து அவர் அங்கு சமூகம் தருவதைத் தடை செய்தார்கள்”. (முஸ்லிம்: 4 ∕ 1715, 1716 அஹ்மத்: 6 ∕ 152, அபூதாவுத்: 5 ∕ 224, நஸாயி பில் குப்றா: 5 ∕ 395)

அதேபோன்று, சிறார்கள் விடயத்தில் அல்லாஹுத்தஆலா இத்திருவசனத்தில் குறிப்பிட்ட அளவீட்டை கருத்தில் கொண்டு அவர்களை வகைப்படுத்தி இனங்கண்டு அனுமதிப்பது அவசியமாகும்.

பெண்கள் பாதையில் நடந்து செல்லும் போது பேணவேண்டிய ஒழுங்குகள்

அல்லாஹுத்தஆலா இவ்வசனத்தின் ஈற்றில் பெண்கள் பாதையில் நடந்து செல்லும் போது பேண வேண்டிய ஒழுங்குகளைச் சுட்டிக்காட்டுகின்றான். அறியாமைக் காலப் பெண்கள் பாதையில் நடந்து செல்லும் போது தங்கள் கால்களில் அணிந்திருந்த கொலிசுகளின் ஓசையை வெளிப்படுத்தும் முகமாக கால்களை நிலத்தில் அடித்து, ஆண்களின் கவனத்தை ஈர்த்து செல்வார்கள். இத்தகைய செயலை விசுவாசம் கொண்ட பெண்கள் செய்யக்கூடாது என்பதை உணர்த்துவதற்காக அல்லாஹ் இவ்வசனத்தை இறக்கியருளினான். இப்படி எந்த அலங்காரங்களையெல்லாம் அவை மறைந்திருக்கும் நிலையில் வெளிப்படுத்துவதின் மூலம் குழப்பம் உண்டாகுமோ அவை அனைத்துக்கும் இச்சட்டம் பொருந்தும் எனக் கூறலாம்.

அதேபோன்று, பெண்கள் நறுமணங்களைப் பூசிக்கொண்டு தங்கள் வீடுகளை விட்டும் வெளிக்கிளம்பிச் செல்வதின் மூலம் ஆண்கள் அவர்கள் பால் கவரப்படுகிறார்கள். இவ்வாறு நடந்து கொள்வதை கண்டிக்கும் விதமாக நபியவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

“எல்லா கண்களும் விபச்சாரம் செய்யக் கூடியனவாக உள்ளன. ஒரு பெண்மணி நறுமணம் பூசிக் கொண்டு ஆண்கள் உட்கார்ந்திருக்கும் ஒரு சபைக்கு மத்தியில் நடந்து செல்லும் போது அவள் இவ்வாறு, இவ்வாறு இருப்பாள். அதாவது, விபச்சாரியாக இருப்பாள்”. (துஹ்பதுல் அஹ்வதி: 8 ∕ 70, அபூதாவுத்: 4 ∕ 400, நஸாயி: 8 ∕ 153)

அவ்வாறே பெண்கள் பாதையின் நடுவே நடந்து செல்வதும் தடுக்கப்பட்ட ஒன்றாகும்.

அபூ உஸைத் அல்அன்ஸாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: “நபியவர்கள் பள்ளிவாசலுக்கு வெளியில் நின்றவராகப் பின்வருமாறு கூறக்கேட்டுள்ளேன். அப்போது பாதையில் பெண்கள் ஆண்களுடன் ஒன்றாகக் கலந்திருந்தனர். இதனைக் கண்ணுற்ற நபியவர்கள், பெண்களை விழித்து அவர்களைப் பாதையில் ஓரப்பகுதியால் செல்லுமாறு பணித்தார்கள். இப்பணிப்புரையின் பிற்பாடு அப்பெண்கள் பாதை ஓரத்தில் இருந்த மதில்களுடன் இணைந்தவர்களாகச் சென்றார்கள். இவ்வாறு அவர்கள் மிகவும் நெருக்கமாக மதில் சுவர்களுடன் இணைந்து சென்றதால் அவர்களின் ஆடைகள் மதில்களில் சிக்கிக் கொண்டன”. (அபூதாவுத்: 5 ∕ 422)

மேலும், இவ்வசனத் தொடரின் ஈற்றில் அல்லாஹுத்தஆலா விசுவாசிகளை நோக்கி பாவமீட்சி செய்யுமாறு பணித்துள்ளான்.

குறிப்பு: பாவமீட்சி தொடர்பாக அல்லாஹ் பிறிதோர் இடத்தில் பிரஸ்தாபிக்கும் போது: “ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து பாவமன்னிப்புப் பெறுங்கள்! உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டும் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான்”. (அத்தஹ்ரீம்: 8)                                                                                                                              மேலும், நபியவர்கள் கூறுகையில்: “நிச்சயமாக அல்லாஹ் பகலில் தவறிழைத்தவர்கள் இரவில் பாவமீட்சி பெறுவதற்காகவும், இரவில் தவறிழைத்தவர்கள் பகலில் பாவமீட்சி பெறுவதற்காகவும் தன் கரத்தை நீட்டுகின்றான். இவ்வாறு மேற்கில் சூரியன் அஸ்தமிக்கும் வரை செய்து கொண்டே இருப்பான்”. (முஸ்லிம்)

பாவமீட்சியின் நிபந்தனைகள்

ஏற்றுக் கொள்ளப்பட்ட பாவமீட்சிக்கு ஐந்து நிபந்தனைகள் உள்ளன. அவையாவன:

  1. தூய எண்ணத்துடன் பாவமீட்சி செய்யப்பட வேண்டும்.

  2. தான் செய்த பாவத்தை எண்ணி வருந்த வேண்டும்.

  3. உடனடியாக இதுவரை செய்த பாவச் செயல்களைக் கலைய வேண்டும். அவ்வாறு செய்த பாவங்கள் அல்லாஹ்வுடைய                                                                          உரிமையுடன் தொடர்புபட்டனவாக இருந்தால் உடனடியாக அவற்றைச் சீர் செய்து பாவமீட்சி பெற வேண்டும். மாற்றமாக, அடியார்களின் உரிமைகளுடன் தொடர்புபட்டனவாக இருந்தால் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களிடத்தில் சென்று மன்னிப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

  4. இனிவரும் காலங்களில் இது போன்ற செயல்களில் ஈடுபடமாட்டேன் என உறுதி கொள்ள வேண்டும்.

  5. பாவமீட்சியை மரணம் சம்பவிப்பதற்கு முன் அல்லது, மேற்கில் சூரியன் உதயமாவதற்கு முன் செய்து கொள்ள வேண்டும். இது தொடர்பாக அல்லாஹ் கூறும் போது: “இன்னும் எவர்கள் தீவினைகளைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய போது: 'நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி) மன்னிப்புத் தேடுகிறேன்' என்று கூறுகின்றார்களே அவர்களுக்கும், எவர் காபிர்களாகவே மரிக்கிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பு இல்லை. இத்தகையோருக்குத் துன்பம் கொடுக்கும் வேதனையை நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்”. (அன்னிஸா: 18) மேலும், நபியவர்கள் கூறினார்கள்: “எவர் மேற்கில் சூரியன் உதயமாவதற்கு முன் பாவமீட்சி பெறுகிறாரோ அல்லாஹ்வும் அவரின் பாவமீட்சியை ஏற்றுக் கொள்கிறான்”. (முஸ்லிம்: 2703)

பெண்களின் ஆடையும் அலங்காரமும்

அன்னிய ஆண்களுக்கு முன்னிலையில் ஒரு முஸ்லிம் பெண்ணின் ஆடை

பொதுவாக ஒரு பெண்மணி ஆடை அணியும் போது பேண வேண்டிய சில நிபந்தனைகளை அறிஞர்கள் வகுத்துத் தந்துள்ளார்கள். அவற்றை கருத்தில் கொள்வது அவசியமாகும்.

1. அலங்காரங்களை வெளிப்படுத்துவதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

ஒரு பெண்மணி தனது அலங்காரங்களையும், கவர்ச்சிகரமான இடங்களையும், கட்டாயம் மறைக்க வேண்டிய இடங்களையும் வெளிப்படுத்துவதையே இங்கு நாடப்படுகிறது. இதனைக் கண்டிக்கும் முகமாக அல்லாஹ் பின்வருமாறு பிரஸ்தாபிக்கின்றான்.

“முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்களும் திரியாதீர்கள்!” (அல் அஹ்ஸாப்: 33)

மேலும், உமைமா என்ற பெண்மணி நபியவர்களிடத்தில் உறுதி மொழி வழங்க வந்த போது, நபியவர்கள் அப்பெண்மணியை நோக்கி இணை வைத்தல், திருடுதல், விபச்சாரம் செய்தல், தம் பிள்ளைகளைக் கொலை செய்தல், அறியாமைக்காலப் பெண்களைப் போன்று அலங்காரங்களை வெளிப்படுத்திக் கொண்டு செல்லல் போன்ற விடயங்களைத் தவிர்ந்து கொள்வதாக வாக்குறுதி அளிக்குமாறு பணித்தார்கள். (அஹ்மத்: 2 ∕ 196)

பிறிதோர் அறிவிப்பில், நபியவர்கள் நரகவாசிகளில் உள்ள ஒரு சாராரைப் பற்றிக் கூறும் போது: “அவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணிகளாகக் காட்சியளிப்பார்கள் எனக் குறிப்பிட்டார்கள். மேலும், அவர்கள் ஆண்களின் பால் சாய்ந்து போகக் கூடியவர்களாகவும், தமது அலங்காரங்களை வெளிப்படுத்தி ஆண்களைத் தம்பால் ஈர்க்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்” எனக் கூறினார்கள். (முஸ்லிம்: 2128)

-     இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-     அபூஹுனைப்