ஸூரதுன் நூர் விளக்கவுரை – 10

بسم الله الرحمن الرحيم

அவதூறு பரப்புவதின் விபரீதம் குறித்து முஃமீன்களை எச்சரித்தல்!

لو لا إذ سمعتموه ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وقالوا هذا إفك مبين لو لا جاءو عليه بأربعة شهداء فإذ لم يأتوا بالشهداء فأولئك عند الله هم الكاذبون

பொருள்: நீங்கள் இதைக் கேள்வியுற்ற சமயத்தில், விசுவாசம் கொண்ட ஆண்களும், விசுவாசம் கொண்ட பெண்களும் தங்கள் கூட்டத்தினர்களைப் பற்றி நன்மையானதையே எண்ணி இது தெளிவான அவதூறு தான் என்றும் கூறியிருக்க வேண்டாமா? இதன் மீது நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமா? இதற்குரிய சாட்சிகளை அவர்கள் கொண்டுவராதபொழுது அத்தகையோர் அல்லாஹ்விடத்தில் அவர்கள் பொய்யர்கள்

-    அந்நூர்: 12, 13

இவ்வசனத்துடன் தொடர்புபடுத்தி பின்வரும் சம்பவத்தை அல்குர்ஆன் விரிவுரையாளர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

உம்மு ஐயூப் ரழியல்லாஹு அன்ஹா: அபூ ஐயூபே! ஆயிஷாவுடைய விடயத்தில் மக்கள் என்னென்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டீர்களா?

அபூ ஐயூப் ரழியல்லாஹு அன்ஹு: ஆம், அது ஒரு பொய்யான தகவல், நீயும் அது விடயத்தில் ஈடுபடக் கூடியவர்களில் ஒருவரா?

உம்மு ஐயூப் ரழியல்லாஹு அன்ஹா: இல்லை, அல்லாஹ் மீது சத்தியமாக! நான் அது விடயத்தில் ஈடுபடக் கூடியவர்களில் உள்ளவரல்ல.

அபூ ஐயூப் ரழியல்லாஹு அன்ஹு: அல்லாஹ் மீது சத்தியமாக! ஆயிஷா உன்னை விடச் சிறந்தவர்.

-           தபரி: 19 ∕ 129

அவதூறு கூறியவர்கள் மீது அல்லாஹ் காட்டிய பரிவு

ولو لا فضل الله عليكم ورحمته في الدنيا والآخرة لمسكم في ما أفضتم فيه عذاب عظيم إذ تلقونه بألسنتكم وتقولون بأفواهكم ماليس لكم به علم وتحسبونه هينا وهو عند الله عظيم

பொருள்: இன்னும் உங்கள் மீது அல்லாஹ்வுடைய பேரருளும் அவனின் பெருங்கிருபையும் இம்மையிலும் மறுமையிலும் இல்லாதிருந்தால், எதில் நீங்கள் ஈடுபட்டிருந்தீர்களோ அதன் காரணமாக அதில் மகத்தான வேதனை நிச்சயமாக உங்களைத் தொட்டிருக்கும். இதனை நீங்கள் - சிலரிடமிருந்து சிலர் - உங்கள் நாவுகளால் எடுத்துக் கொண்டு உங்களுக்கு எது பற்றி அறிவு இல்லையோ அந்த விடயத்தை உங்கள் வாய்களால் கூறிக் கொண்டிருந்த பொழுது, - உங்களுக்கு வேதனை ஏற்பட்டிருக்கும் - இதனை நீங்கள் இலேசாகவும் எண்ணிவிட்டீர்கள். இதுவோ அல்லாஹ்விடத்தில் மிக மகத்தானதாகும்.

-    அந்நூர்: 14, 15

குறிப்பு: இவ்வசனத்தில் அவதூறில் ஈடுபட்ட முஸ்லீம்கள் மாத்திரமே நாடப்பட்டுள்ளார்கள்.

-           அல் மிஸ்பாஹ்: 932

இவ்வசனத்தில் இடம் பெற்றுள்ள தலக்கவ்னஹூ என்ற வாசகமானது, ஒவ்வொருவருக்கும் தகவல் பரிமாறுவதைக் குறிக்கின்றது என்று இமாம்களான முஜாஹித், ஸஈத் இப்னு முஸய்யப் ரஹிமஹுமுல்லாஹ் ஆகியோர் கூறுகின்றனர்.

                                                                        - தபரி: 19 ∕ 132

ஆயினும், ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் தலிகூனஹூ என்று வாசிக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். இது தொடர்பாக அவர் கூறுகையில்: ஒருவர் தனது பொய்யில் நீடித்திருப்பதையே இங்கு குறிக்கின்றது என்கிறார்.

                                                                                      - பத்ஹூல் பாரி: 8 ∕ 340

பெரும்பான்மையான அறிஞர்கள் தலக்கவ்னஹூ என்று வாசிப்பதையே சரி காண்கிறார்கள்.

-           அல் மிஸ்பாஹ்: 932

நபியவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக ஒரு மனிதன் அல்லாஹ்வுக்கு கோபத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு வார்த்தையைப் பேசுகின்றான். அவன் பேசக்கூடிய அவ்வார்த்தையின் பாரதூரத்தை அறியாதவனாக தன் நாவை மனம் போன போக்கில் கட்டவிழ்த்துவிடுகின்றான். அதன் காரணமாக அவன் நரகின் பால் நெருங்கிக் கொண்டிருக்கின்றான்.

                          - பத்ஹூல் பாரி: 11 ∕314, முஸ்லிம்: 4 ∕ 2290

மீண்டும் ஒரு முறை முஃமீன்களை நெறிப்படுத்தல்

ولو لا إذ سعتموه قلتم ما يكون لنا أن نتكلم بهذا سبحانك هذا بهتان عظيم يعظكم الله أن تعودوا لمثله أبدا إن كنتم مؤمنين ويبين الله لكم الآيات والله عليم حكيم

பொருள்: நீங்கள் இதனைக் கேள்விப்பட்ட போது: இதனை நாம் பேசுவது நமக்குத் தகுதியில்லை, அல்லாஹ்வே நீயே மிகப் பரிசுத்தமானவன். இது மகத்தான பெரும் அவதூறு என்று நீங்கள் கூறி இருக்க வேண்டாமா? நீங்கள் விசுவாசிகளாக இருந்தால், இது போன்றதின்பால் ஒரு போதும் நீங்கள் மீளலாகாது என்று அல்லாஹ் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான். இன்னும், அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விளக்கிக் கூறுகிறான். மேலும், அல்லாஹ் யாவையும் நன்கறிந்தவன். தீர்க்கமான அறிவுடையவன்.

-    அந்நூர்: 16 - 18

நபியவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் எனது உம்மத்தினரை அவர்கள் தங்கள் மனங்களில் சிந்திப்பவற்றை தம் வார்த்தைகளால் மொழியும் வரை அல்லது, தம் உறுப்புக்களைக் கொண்டு செயலுருப்படுத்தும் வரை குற்றம் பிடிக்கமாட்டான்.

-           பத்ஹூல் பாரி: 11 ∕ 557, முஸ்லிம்: 1 ∕ 116,117

முஃமீன்களில் இருந்து அவதூறு கூறுவதை ஆதரிப்பவர்களுக்கு அல்லாஹ் வழங்கும் நற்போதனை

إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين أمنوالهم عذاب اليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون 

பொருள்: - இதற்குப் பின்னரும் - விசுவாசங்கொண்டோருக்கிடையில் இவ்வாறான மானக் கேடான விடயம் பரவ வேண்டுமென விரும்புகிறார்களே, நிச்சயமாக அத்தகையோர் அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு. - அதனால் ஏற்படும் தீங்குகளை - அல்லாஹ்வே நன்கறிவான். நீங்களோ அறியமாட்டீர்கள்.

-    அந்நூர்: 19

குறிப்பு: இங்கு இம்மையில் தண்டனை என்பது அவதூறுக்கான தண்டனையைக் குறிக்கின்றது.

நபியவர்கள் கூறினார்கள்: நீங்கள் அல்லாஹ்வின் அடியார்களை நோவினை செய்ய வேண்டாம். அவர்களது அந்தரங்க விடயங்களைப் பற்றி துருவித்துருவி ஆராயவும் வேண்டாம். நிச்சயமாக எவரொருவர் தனது சகோதரனின் அந்தரங்க விடயங்களைப் பற்றி துருவித்துருவி ஆராய்கிறாரோ, அவரின் அந்தரங்க விடயங்களைப் பற்றி அல்லாஹ் மறுமையில் துருவித்துருவி ஆராய்வான். அவை அவன் வீட்டினுள் தனிமையில் ஈடுபட்ட விடயங்களாக இருந்தாலும் சரியே!

-           அஹ்மத்: 5 ∕ 279

அல்லாஹ்வின் சிறப்புக்களைப் பற்றி ஞாபக மூட்டலும் ஷைத்தானுடைய சதிவலைகளை விட்டும் முஃமீன்களை எச்சரித்தலும்

ولو لا فضل الله عليكم ورحمته وأن الله رءوف رحيم يأيها الذين أمنوا لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر ولو لا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء والله سميع عليم 

பொருள்: இன்னும் உங்கள் மீது அல்லாஹ்வுடைய பேரருளும் அவனின் கிருபையும் இல்லாதிருந்தால் - உங்களை வேதனை பீடித்திருக்கும் - நிச்சயமாக அல்லாஹ்வோ மிக்க இரக்கமுடையவன், மிகக் கிருபையுடையவன். விசுவாசங்கொண்டோரே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். எவன் ஷைதானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை மானக்கேடானதைக் கொண்டும் வெறுக்கப்பட்டதைக் கொண்டும் நிச்சயமாக - ஷைத்தானாகிய - அவன் ஏவுவான். இன்னும், உங்கள் மீது அல்லாஹ்வுடைய பேரருளும் அவனின் கிருபையும் இல்லாதிருப்பின் உங்களில் ஒருவருமே ஒருபோதும் பரிசுத்தமாக முடியாது. எனினும், அல்லாஹ் தான் நாடியவர்களை பரிசுத்தமாக்குகிறான். மேலும், அல்லாஹ் செவியேற்கிறவன், நன்கறிகிறவன்.

-    அந்நூர்: 20, 21

இங்கு ஷைத்தானுடைய அடிச்சுவடுகள் என்று கூறுவதின் மூலம் எவ்வியாக்கியானம் நாடப்படுகிறது என்பதில் விரிவுரையாளர்களுக்கு மத்தியில் பலவாறான கருத்துக்கள் நிலவுகின்றன.

●  இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா: ஷைத்தானின் செயல்கள்

●  இக்ரிமா ரழியல்லாஹு அன்ஹு: ஷைத்தானின் தூண்டுதல்கள்

●  கதாதா ரஹிமஹுல்லாஹ்: அனைத்து பாவங்கள்

●  அபுல் முஜ்லிஸ் ரஹிமஹுல்லாஹ்: இஸ்லாம் அங்கீகரிக்காத நேர்ச்சைகள்

-  தபரி: 3 ∕ 301, அத்துர்ருல் மன்சூர்: 1 ∕ 404

நிறைவாக, ஷைத்தான் மனிதனை வழிகெடுப்பதற்காக எவ்வாறான யுக்திகளையெல்லாம் பயன்படுத்துகின்றானோ அவைகள் அனைத்தும் இங்கு உள்ளடங்குகின்றன என்று கூறலாம்.

செல்வந்தர்களை தர்மம் செய்யுமாறு தூண்டுதல்

ولا يأتل اولوا الفضل منكم والسعة أن يؤتوا أولي القربى والمساكين والمهاجرين في سبيل الله وليعفوا وليصفحوا ألا تحبون أن يعفر الله لكم والله غفور رحيم

பொருள்: உங்களிலுள்ள செல்வ வளம் பெற்றோரும், மற்றவருக்கு உதவ வசதியுடையோரும் தங்கள் பந்துக்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வுடைய பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் எப்பொருளையும் அவர்கள் கொடுக்காமலிருக்க சத்தியம் செய்ய வேண்டாம். அவர்களை மன்னித்து விடவும். பழைய வருத்தத்தைப் பொருட்படுத்தாது விட்டுவிடவும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவன் மிக்க கிருபையுடையவன்.

-    அந்நூர்: 22

இவ்வசனம் இறக்கப்பட்ட காரணம் தொடர்பாக பின்வரும் சம்பவம் அல்குர்ஆன் விரிவுரையாளர்களால் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைப் பற்றி அவதூறு பரப்பியவர்களில் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் சிற்றன்னையின் மகனான மிஸ்தஹ் ரழியல்லாஹு அன்ஹு இற்கும் தொடர்பிருப்பதை அறிந்த அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தான் இதற்கு முன் மிஸ்தஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் செய்து வந்த உதவிகளை நிறுத்திவிட எத்தனித்தார்கள். அப்போது அல்லாஹூத்தஆலா இத்தீர்மானத்தை சீர் செய்யும் முகமாக இவ்வசனத்தை இறக்கிவைத்தான். இவ்வசனம் இறக்கியருளப்பட்டதைத் தொடர்ந்து அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தன் நிலைப்பாட்டில் மாற்றம் செய்து மீண்டும் இதற்கு முன் செய்துவந்த உதவிகளைத் தொடர ஆரம்பித்தார்கள்.

-           அல் மிஸ்பாஹ் : 934

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-           அபூஹுனைப் முஹம்மத் ஹிஷாம் இப்னு முஹம்மத் தௌபீக்