“ஸஹர் முடிவு நேரம்” என்ற ஒன்று இஸ்லாத்தில் உள்ளதா?

بسم الله الرحمن الرحيم

கேள்வி: நோன்பு நோற்பவர்கள் பஜ்ரிற்கு சுமார் 15 நிமிடங்கள் இருக்க ஸஹர் உணவைப் பரிமாறுவதை நிறுத்திக் கொள்கின்றார்கள். இப்படி நடந்து கொள்வது சரியானதா?

பதில்: நான் இதற்கு எந்த ஓர் அடிப்படையையும் அறியமாட்டேன். மாறாக, இது விடயத்தில் அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் எமக்குத் தெரிவிக்கும் விடயமாவது, ஸஹர் உணவைப் பரிமாறுவதைத் தவிர்த்தலானது பஜ்ர் உதயமாவதைக் கொண்டு ஆரம்பிக்கின்றது என்பதுவாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்: “இன்னும் பஜ்ரு நேரத்தில் (இரவு என்ற) கறுப்பு நூலிலிருந்து (அதிகாலை என்ற) வெள்ளை நூல் உங்களுக்குத் தெளிவாகும் வரை உண்ணுங்கள்! இன்னும், பருகுங்கள்! பின்னர் இரவு (ஆரம்பமாகும்) வரை (மேலே கூறியவைகளைத் தவிர்த்து) நோன்பை (நோற்றுப்) பூரணமாக்குங்கள்!” (அல்பகரா: 187)

மேலும் நபியவர்கள் கூறினார்கள்: “பஜ்ர் என்பது இரு பஜ்ர்களாகும். அவை உணவு பரிமாறுவது ஹராமாகவும் தொழுவது ஹலாலாகவும் இருக்கும் பஜ்ரும், தொழுவது ஹராமாகவும் உணவு பரிமாறுவது ஹலாலாகவும் இருக்கும் பஜ்ருமாகும்.” (இப்னு ஹுஸைமா, ஹாகிம்)

இன்னும் நபியவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக பிலால் இரவு நேரத்தில் அதான் கூறுவார். எனவே, அப்போது இப்னு உம்மி மக்தூம் அதான் கூறும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்!” இச்செய்தியை அறிவிக்கும் அறிவிப்பாளர் கூறுகின்றார்: “இப்னு உம்மி மக்தூம் கண்பார்வை தெரியாதவராக இருந்தார். நீங்கள் காலைப் பொழுதை அடைந்துவிட்டீர்கள்! நீங்கள் காலைப் பொழுதை அடைந்து விட்டீர்கள்! என்று அவருக்குக் கூறப்படும் வரை அவர் அதான் கூறமாட்டார்.” மஜ்மூஉ பதாவா இப்னி பாஸ் (15/281)

-           வழங்கியவர்: இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ்

-           தமிழில்: அபூ ஹுனைப்