வுழூ, குளிப்பு, தொழுகை ஆகியவற்றின் சட்டதிட்டங்களைத் தெளிவுபடுத்தும் சிறு கைநூலுக்கான மொழிபெயர்ப்பு – 01

நூலாசிரியர்: முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் ரஹிமஹுல்லாஹ்.

بسم الله الرحمن الرحيم

மொழிபெயர்த்தோன் உரை

எல்லாப் புகழும் புகழ்ச்சியும் வல்ல நாயன் அல்லாஹ்வுக்கே உரியதாகும்! கருணையும் சாந்தியும் சத்தியத்தூதர் சன்மார்க்கப் போதகர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர், தோழர்கள் மற்றும், மறுமை வரை அவர்களைப் பின்பற்றி வாழும் அனைவர் மீதும் உண்டாவதாக!

அன்பின் இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! இப்பெறுமதி மிக்க சிறிய கைநூல் மகத்தான ஓர் அறிஞரின் படைப்பாகும். இந்நூல் அல்குர்ஆன் அஸ்ஸுன்னா அடிப்படையில் வுழூ, குளிப்பு, தொழுகை ஆகிய மூன்று அம்சங்களினதும் சட்டதிட்டங்கள் தொடர்பான சுருக்க விளக்கத்தை தன்னகத்தே கொண்டுள்ளது.

மேலும், இந்நூல் எந்தவொரு தனிமனித மத்ஹபையும் சார்ந்திருக்கத் தூண்டாது காணப்படுகின்றது. அத்துடன் அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவுக்கு உடன்பட வைக்கக் கூடியதாகவும் நாம் இதனைக் காணுகின்றோம். இன்னும், இது விடயத்தில் இவ்விரு மூலாதரங்களுக்கும் எமது சமூகம் முரண்பட்டதாகக் காணப்படுகின்றது. இப்படியான பல அம்சங்களை நாம் அவதானித்ததன் பேறாகவே இந்நூலின் தமிழாக்கம் பிரசவமானது.

எனவே, சிறந்த முறையில் இதனை மொழிபெயர்த்து முடித்திட அருள் புரிந்த அல்லாஹ்வுக்கு முதற்கண் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இப்பணியை அல்லாஹ் ஒருவனின் முகத்திற்காக மாத்திரமே நான் மேற்கொண்டேன். இந்நோக்கத்தை எல்லாம் வல்ல நாயன் அல்லாஹ் எப்பொழுதும் என் பணிகளின் போது முதன்மை வகிக்கச் செய்யப் பிரார்த்திக்கின்றேன்.

நிறைவாக, இந்நூலை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை வாசித்து, நாமும் பயன்பெற்று பிறரையும் பயன்பெறச் செய்வோமாக!

الحمد لله رب العالمين

-    அப்துர் ரஸ்ஸாக் இப்னு நஸார் (அல்கமா அறபுக் கல்லூரி விடுகை வருட மாணவன்)