“லாமியா” எனும் நூலுக்கான விளக்கவுரை – 07

بسم الله الرحمن الرحيم

2. அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினர் ஸஹாபாக்களை விரும்புவார்கள்.

அதற்கான ஆதாரங்களாவன:

1. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “அன்ஸாரித் தோழர்களை விசுவாசியைத் தவிர வேறு எவரும் விரும்பமாட்டார். நயவஞ்சகனைத் தவிர வேறு எவரும் வெறுக்கமாட்டார். எவர் அவர்களை விரும்புகின்றாரோ அவரை அல்லாஹ்வும் விரும்புவான். எவர் அவர்களை வெறுக்கின்றாரோ அவரை அல்லாஹ்வும் வெறுக்கின்றான்”. (புஹாரி, முஸ்லிம்)

2. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “நயவஞ்சகனுடைய அடையாளம் அன்ஸாரித் தோழர்களை வெறுப்பதாகும். விசுவாசியுடைய அடையாளம் அன்ஸாரித் தோழர்களை நேசிப்பதாகும்”. (புஹாரி)

3. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்ட மனிதன் அன்ஸாரித் தோழர்களை வெறுக்கமாட்டான்”. (முஸ்லிம்)

3. அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினர் அவர்களுக்காக துஆச் செய்வார்கள் இன்னும் பாவமன்னிப்பும் தேடுவார்கள்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “(நபித்தோழர்களாகிய) அவர்களுக்குப் பின் வந்தவர்கள், 'எங்கள் இறைவனே! எங்களுக்கும் ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக! அன்றியும், ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன், கிருபை உள்ளவன்' என்று பிரார்த்திப்பார்கள்”. (அல்ஹஷ்ர்: 10)

4. அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினர் அவர்களைத் திட்டமாட்டார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “எனது தோழர்களை ஏச வேண்டாம்!” (புஹாரி, முஸ்லிம்)

ஸஹாபாக்களை ஏசுவதின் சட்டம்

இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “ஸஹாபாக்களை ஏசுவதுடன் எவர் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கடவுள் என்று வாதிடுகின்றாரோ அல்லது, அவர்தான் நபியாக வரவேண்டியவர், ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் தூதுத்துவத்தை வழங்குகின்ற விடயத்தில் தவறிழைத்துவிட்டார் என்று கூறிகின்றாரோ அவர் காபிர் என்பதில் சந்தேகமில்லை. மேலும், அவரைக் காபிராகக் கருதாமல் மௌனம் சாய்ப்பவர்களும் காபிர்கள் என்பதில் சந்தேகமில்லை”.

எவர் ஸஹாபாக்களின் நேர்மையையோ, மார்க்கத்தையோ பாதிக்காத விதத்தில் ஏசுகின்றாரோ, உதாரணமாக: அவர்களில் சிலரை கஞ்சத்தனம், கோழைத்தனம், குறைவான அறிவு, பற்றற்ற வாழ்க்கையற்றவர்கள் போன்றவற்றைக் கூறி ஏசினால், அவர் ஒழுக்கமூட்டப்படுவதற்கும், திருத்தப்படுவதற்கும் தகுதியுடையவர் ஆவார். அவர் கூறிய அவ்விடயத்தை வைத்து அவர் காபிர் என்று நாம் தீர்ப்புச் செல்லமாட்டோம்.

பொதுவாகவே, எவர் அவர்களை சபித்து, அவர்களை அசிங்கப்படுத்துகின்றார்களோ, இது அவர்கள் விடயத்தில் ஏற்படக்கூடிய கருத்து வேறுபாட்டிற்குரிய ஓர் இடமாகும். ஏனெனில், இவ்வாறு ஏசுபவர் கோபத்தின் காரணமாக ஏசுகிறாரா? அல்லது, அதனை மனதில் ஏற்று நம்பிக்கை கொண்டவராக ஏசுகிறாரா? என்பதில் தடுமாற்றம் கொள்ளப்படுகின்றது.

எவர் அதனையும் கடந்து, ஸஹாபாக்களில் பத்துக்கும் இருபதுக்கும் இடைப்பட்டவர்களைத் தவிர மற்ற அனைவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்பு மதம் மாறிவிட்டனர் என்று கருதுகின்றாரோ அல்லது, பெரும்பாலான ஸஹாபாக்களை மோசமானவர்கள் என்று வர்ணிக்கிறாரோ, அவர் காபிர் என்பதிலும் சந்தேகம் இல்லை. ஏனெனில், ஸஹாபாக்கள் குறித்து அல்குர்ஆனில் பாராட்டிப் பேசப்படக்கூடிய பல ஆதாரங்களை இவர் பொய்ப்பித்தவராவார்.

5. அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினர் குர்ஆனுக்கும் சுன்னாவுக்கும் முரண்படாதவிதத்தில் அவர்களைப் பின்பற்றுவார்கள்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “முஹாஜிரீன்களிலும் அன்ஸாரிகளிலும் முதலாவதாக முந்திக் கொண்டவர்கள் இன்னும், அவர்களை நல்ல முறையில் பின்பற்றியவர்கள் ஆகியோரை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வை பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு அல்லாஹ் சுவனங்களை தயார்படுத்தி வைத்துள்ளான். அவற்றுக்கீழால் ஆறுகள் ஒடிக்கொண்டிருக்கும். அதில் அவர்கள் நிரந்தரமாகத் தங்கியிருப்பர். அதுவே மகத்தான வெற்றியாகும்”. (அத்தவ்பா: 100)

ஸஹாபாக்கள் குறித்து மார்க்க அறிஞர்களின் கருத்துக்கள்

1.       இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: “அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினரின் அடிப்படை அம்சங்களில் ஒன்று, நபித்தோழர்கள் விடயத்தில் அவர்களது உள்ளங்களும் நாவுகளும் ஈடேற்றம் பெற்றிருப்பதாகும்”. (அல்அகீததுல் வாஸிதிய்யா)

2. அபூஜஃபர் அத்தஹாவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: “நாம் நபித்தோழர்களை விரும்புகிறோம். அவர்களில் எவரையும் விரும்புவதில் குறை ஏற்படுத்தமாட்டோம். அவர்களில் எவரை விட்டும் நாம் விலகிச் செல்லவும் மாட்டோம். எவர்கள் அவர்களை வெறுக்கின்றார்களோ மேலும், அவர்களைப் பற்றி மோசமானவற்றைக் கூறுகின்றார்களோ அவர்களை நாமும் வெறுக்கிறோம். நல்ல வார்த்தையைக் கொண்டே அன்றி அவர்களைப் பற்றி நாம் பேசமாட்டோம். அவர்களை விரும்புவது மார்க்கமும் ஈமானும் நல்லுபகாரமுமாகும். அவர்களை வெறுப்பது குப்ரும் நயவஞ்சகமும் வரம்புமீறுதலுமாகும்”. (அல்அகீததுத் தஹாவிய்யா)

3. இப்னு குதாமா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: “நபித்தோழர்களை நேசிப்பதும் அவர்களை விரும்புவதும் அவர்களது நல்ல விடயங்கள் பற்றிப் பேசுவதும் அவர்கள் மீது இரக்கம் கொள்வதும் அவர்களுக்கு பாவமன்னிப்புத் தேடுவதும் அவர்களது சின்னஞ்சிறு தவறுகளையும், அவர்களுக்கு மத்தியில் இடம்பெற்ற சச்சரவுகளையும்  பேசமால் தடுத்துக்கொள்வதும் அவர்களுக்கு உள்ள சிறப்புக்களை நம்பிக்கை கொள்வதும் அவர்களில் முந்தியவர்களை அறிந்து கொள்வதுமாகிய அனைத்தும் சுன்னாவில் காணப்படும் அம்சங்களாகும்”. (லும்அதுல் இஃதிகாத்)

4. அஸ்ஸாபூனி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: “எவர் அவர்களை விரும்புகின்றாரோ மேலும், அவர்களை நேசிக்கின்றாரோ இன்னும், அவர்களுக்காகப் பிரார்த்திக்கின்றாரோ மற்றும், அவர்களது உரிமைகளில் கவனம் செலுத்துகின்றாரோ அத்தோடு, அவர்களது சிறப்புக்களை அறிந்து வைக்கின்றாரோ அவர் வெற்றிபெறக்கூடியவர்களுடன் வெற்றி பெறுவார். எவர் அவர்களை வெறுக்கின்றாரோ மேலும், அவர்களை ஏசுகின்றாரோ இன்னும், ராபிழாக்கள் மற்றும் ஹவாரிஜ்கள் - அல்லாஹ் அவர்களை சபிப்பானாக - அவர்களைக் குற்றம் சுமத்துகின்ற விடயங்களைக் கொண்டு குற்றம் சுமத்துகின்றாரோ அவர் அழிந்துவிடுவோருடன் அழிந்துவிடுவார்”. (அகீததுஸ் ஸலப்)

- இன்ஷா அல்லாஹ் தொடரும்.

- அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்

[audio:http:http://www.salafvoice.org/audio_db/37347451.mp3]

Click Here to Download