“லாமியா” எனும் நூலுக்கான விளக்கவுரை – 06

بسم الله الرحمن الرحيم

மூன்றாவது கவிதை அடி

حب الصحابة كلهم لي مذهب ومودة القربى بها أتوسل

“ஸஹாபாக்கள் அனைவரையும் விரும்புவது எனது போக்காகும். நபியுடைய உறவினர்களை நேசிப்பதைக் கொண்டு நான் வஸீலாத் தேடுகின்றேன்”.

விளக்கம்:

ஸஹாபாக்கள் அனைவரையும் விரும்புவது அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தினரின் வழிமுறை என்பதை இந்தக் கவிதை அடியில் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

அஷ்ஷெய்ஹ் அப்துல்ஹமீத் அல்ஹஜூரி ஹபிழஹுல்லாஹ் அவர்கள் இக்கவிதை வரிக்கு விளக்கமளிக்கும் போது பின்வருமாறு கூறுகின்றார்கள்: “எனது போக்கு ஸஹாபாக்களை விரும்புவதாகும். அவர்களை விரும்புவது என்ற விடயம், வாஜிபையும் அவர்களது சிறப்புக்களை அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தினரின் வழியில் நம்பிக்கை கொள்வதையும் வேண்டி நிற்கிறது. விசுவாசியைத் தவிர வேறு யாரும் அவர்களை விரும்பமாட்டார்கள். நயவஞ்சகனைத் தவிர வேறு யாரும் அவர்களை வெறுக்கமாட்டார்கள்”.

அஷ்ஷெய்ஹ் அபூமுஆத் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: “ஸஹாபாக்களை விரும்புவது ஈமான் மற்றும் மார்க்கத்தின் அம்சங்களில் ஒன்றாகும். மார்க்க அறிஞர்கள் அதிகூடிய கவனம் செலுத்திய விடயங்களில் ஸஹாபாக்களின் விடயமும் ஒன்றாகும். ஸஹாபாக்களுக்கு காணப்படும் அதிகமான, கண்ணியத்திற்குரிய சிறப்புக்களையும் அவர்களது மகத்தான பண்புகளையும் வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அந்த அறிஞர்கள் ஸஹாபாக்கள் குறித்துப் பல பகுதிகளை அகீதா நூற்களில் தொகுத்துள்ளனர். ராபிழாக்கள், ஹவாரிஜ்கள் போன்ற அற்பமானவர்களைத் தவிர ஏனைய உம்மத்தினர் யாவரும் இவ்வழியிலேயே சென்றுள்ளனர்”.

அஷ்ஷெய்ஹ் இப்னு ஹிஸாம் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்: “ராபிழாக்களுக்கும் நவாஸிப்களுக்கும் ஒரு மறுப்பை இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இக்கவிதை அடியில் சுட்டிக்காட்டியுள்ளார்கள். ஏனெனில், இவ்விரு பிரிவையும் சார்ந்தவர்கள் ஸஹாபாக்களை குறைத்து மதிப்பிடுகின்றனர், அவர்களுக்கு ஏசுகின்றனர். ராபிழாக்கள் அதிகமான ஸஹாபாக்களை வெறுக்கின்றனர். அவர்களில் அபூபக்கர், உமர், உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹும் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர். மேலும், அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது உறவினர்களை நேசிப்பதாகவும் கருதுகின்றனர். நவாஸிப்களைப் பொறுத்தவரையில் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது உறவினர்களை வெறுக்கின்றனர். அவர்களுடன் விரோதத்தை நிலைநாட்டுகின்றனர்.

ஸஹாபாக்கள் விடயத்தில் மனிதர்கள் நான்கு வகையான கொள்கையைக் கொண்டிருக்கின்றனர்.

1. ஒரு கூட்டம் ஸஹாபாக்களை காபிர்கள் என்று கூறி வருகின்றது. மேலும் அவர்களுக்கு ஏசி அவர்களைக் குறைத்து மதிப்பிடுகின்றது. இவர்கள் ராபிழாக்களும் ஹவாரிஜ்களுமாவர்.

2. ஒரு கூட்டம் “ஸஹாபாக்களும் மனிதர்கள் நாமும் மனிதர்கள்” என்று கூறி வருகின்றது. ஸஹாபாக்களுக்கும் எமக்கும் மத்தியில் எவ்வித வேறுபாடும் இல்லை என்பதையே இவர்கள் இதன் மூலம் நாடுகின்றனர். இக்கருத்தை நவீன முஃதஸிலாக்களாகிய இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த தவ்ஹீத் ஜமாஅத்தினரும் கூறி வருகின்றனர். நவீன முஃதஸிலாக்கள் என்பதே இவர்களுக்குத் தகுதியான பெயராகும்.

குர்ஆனை விளங்குவதற்கு ஸஹாபாக்களின் விளக்கம் அவசியமற்றது என்று இவர்கள் கூறுகின்றனர். ஸஹாபாக்கள் எந்த அரபைக் கொண்டு அல்குர்ஆனை விளங்கினார்களோ அந்த அரபையே நாமும் அறிந்திருக்கின்றோம். எனவே, அவர்களது விளக்கம் அவசியமற்றது என்ற நிலைப்பாட்டில் இவர்கள் காணப்படுகின்றனர்.

3. ஒரு கூட்டம் ஸஹாபாக்களுக்கு மார்க்கம் வழங்கிய அந்தஸ்த்து விடயத்தில் எல்லைமீறிச் சென்றுள்ளது. அவர்களுக்காக அறுத்துப் பலியிடக்கூடியவர்களாகவும் அவர்களிடம் துஆச் செய்பவர்களாகவும் காணப்படுகின்றனர். இவர்களே ஸூபியாக்களைச் சேர்ந்த கப்ரு வணங்கிகளாவர்.

4. நான்காவது கூட்டம் அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தினராவர். ஸஹாபாக்களின் அந்தஸ்த்துக்களையும் சிறப்புக்களையும் அறிந்த இவர்கள், அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவார்கள். அவர்களுக்கு மத்தியில் நடைபெற்ற சண்டை சச்சரவுகளைப்பற்றிப் பேசி அது விடயத்தில் தலையிடாமல் தங்களைத் தடுத்துக் கொள்கின்றனர். இவர்கள் கொண்டிருக்கும் கொள்கையே உண்மையானது.

அதேபோன்று, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது குடும்பத்தார் விடயத்தில் மனிதர்களிடம் மூன்று வகையான கொள்கைகள் காணப்படுகின்றன.

1. ஒரு கூட்டம் அவர்கள் விடயத்தில் எல்லைமீறிச் சென்றுள்ளனது. அவர்கள் ராபிழாக்களும் பாதினிய்யாக்களுமாவர்.

2. ஒரு கூட்டம் அவர்களை குறைத்து மதிப்பிடுகின்றது. அவர்கள் நவாஸிப்களாவர்.

3. ஒரு கூட்டம் மார்க்க அடிப்படையில் அவர்களை நேசிக்கின்றது. அவர்களே அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தினராவர்.

ஸஹாபாக்கள் விடயத்தில் அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினரின் நிலைப்பாடு

1. ஸஹாபாக்களுக்குரிய சிறப்புக்களை அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தினர் நம்பிக்கை கொண்டுள்ளனர். அச்சிறப்புக்களுக்கு அவர்கள் தகுதியானவர்கள் என்றும் கருதுகின்றனர். அவர்களுக்குரிய எச்சிறப்பையும் அவர்கள் மறுக்கமாட்டார்கள்.

குர்ஆன், சுன்னாவிலிருந்து ஸஹாபாக்களின் சிறப்புக்களை தெளிவுபடுத்தும் சில ஆதாரங்கள்

1. அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார்.  அவரோடு இருப்பவர்கள் காபிர்களுடன் கடுமையாகவும் தங்களுக்கு மத்தியில் இரக்கமுடையவர்களாகவும் இருப்பார்கள். அவர்களை நீங்கள் ருகூஉ செய்தவர்களாகவும் சுஜூது செய்தவர்களாகவும் காண்பீர்கள். அல்லாஹ்விடம் சிறப்பையும் திருப்பொருத்தையும் அவர்கள் தேடுகின்றனர். அவர்களது அடையாளம் அவர்களது முகங்களில் காணப்படும் சுஜூதின் அடையாளமாகும். அது தவ்றாத்தில் அவர்களுக்குரிய உதாரணமாகும். மேலும், இன்ஜீலிலும் அவர்களுக்குரிய உதாரணமாகும்”. (அல்பத்ஹ்: 29)

2. அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “(மக்கா) வெற்றிக்கு முன்னர் செலவு செய்து, போரிட்டவர்களுக்கு உங்களில் நின்றும் (எவரும்) சமமாக மாட்டார். (மக்கா) வெற்றிக்குப் பின்பு செலவு செய்து போரிட்டவர்களைவிட அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள். எனினும் அல்லாஹ் எல்லோருக்கும் அழகானதையே வாக்களித்துள்ளான். அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன்”. (அல்ஹதீத்: 10)

3. அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “முஹாஜிரீன்களிலும் அன்ஸாரிகளிலும் முதலாவதாக முந்திக் கொண்டவர்கள் இன்னும் அவர்களை நல்ல முறையில் பின்பற்றியவர்கள் ஆகியோரை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வை பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு அல்லாஹ் சுவனங்களை தயார்படுத்தி வைத்துள்ளான். அவற்றுக்கீழால் ஆறுகள் ஒடிக்கொண்டிருக்கும். அதில் அவர்கள் நிரந்தரமாகத் தங்கியிருப்பர். அதுவே மகத்தான வெற்றியாகும்”. (அத்தவ்பா: 100)

4. அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “விசுவாசிகள் அந்த மரத்தடியில் உம்மிடம் வாக்குறுதி செய்தபோது உண்மையாகவே அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொண்டான்”. (அல்பத்ஹ்: 18)

5. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “மனிதர்களில் மிகச்சிறந்தவர்கள் எனது நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள். பின்பு அவர்களை அடுத்து வருபவர்கள், பின்பு அவர்களை அடுத்து வருபவர்கள்”. (புஹாரி, முஸ்லிம்)

6. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “எனது ஆத்மா எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் ஒருவர் உஹத் மலையளவு தங்கத்தால் செலவு செய்த போதிலும் அது எனது தோழர்களில் ஒருவர் செலவு செய்த இரு கையளவுக்கோ, அதன் அரைவாசிக்கோ ஈடாகாது”. (புஹாரி, முஸ்லிம்)

- இன்ஷா அல்லாஹ் தொடரும்.

- தொகுப்பு: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்

[audio:http://www.salafvoice.org/audio_db/42994038.mp3]

Click Here to Download