“லாமியா” எனும் நூலுக்கான விளக்கவுரை – 09

بسم الله الرحمن الرحيم

நான்காவது கவிதை அடி

ولكلهم قدر علا وفضائل لكنما الصديق منهم أفضل

அவர்கள் ஒவ்வொருவருக்கும் உயர் அந்தஸ்தும் சிறப்புக்களும் உள்ளன. என்றாலும், அவர்களில் மிகச் சிறந்தவர் ஸித்தீக் ஆவார்.

விளக்கம்

இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இக்கவிதை அடியில் ஸஹாபாக்களுக்கு தனிப்பட்ட விதத்திலும் கூட்டாகவும் அந்தஸ்துக்களும் சிறப்புக்களும் உள்ளதாகத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

ஸஹாபாக்களின் சிறப்புக்கள் இரண்டு வகைப்படும்:

1. தனிப்பட்ட ஒரு ஸஹாபியின் சிறப்பு:

உதாரணம்: அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்பு, உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்பு, உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்பு, அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்பு, இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் சிறப்பு, அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்பு, இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்பு, இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் சிறப்பு.

2. அவர்களில் காணப்பட்ட ஒரு கூட்டத்திற்குரிய சிறப்பு:

உதாரணம்: பத்ர் போரில் கலந்து கொண்டவர்களின் சிறப்பு, உஹத் போரில் கலந்து கொண்டவர்களின் சிறப்பு, பைஅதுர் ரிழ்வானில் கலந்து கொண்டவர்களின் சிறப்பு, இஸ்லாத்திற்கு முந்தியவர்களின் சிறப்பு.

பத்ர் போரில் கலந்து கொண்டவர்களின் சிறப்பு:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ் பத்ர் போரில் கலந்து கொண்டவர்களைப் பார்த்து, நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள்! உங்களை நான் மன்னித்து விட்டேன் என்று கூறினான்." (புஹாரி, முஸ்லிம்)

ஹுதைபியா உடன்படிக்கையில் கலந்து கொண்டவர்களின் சிறப்பு:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ் நாடினால், மரத்தடியில் (ஹுதைபியாவில்) உடன்படிக்கை செய்தவர்களில் எவரும் நரகம் நுழையமாட்டார்." (முஸ்லிம்)

மேற்கூறப்பட்ட கவிதை அடியின் இரண்டாவது பகுதியில் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள்: "என்றாலும், அவர்களில் மிகச் சிறந்தவர் ஸித்தீக் ஆவார்" என்று கூறியுள்ளார்கள்.

இவ்வடியின் மூலம் இமாமவர்கள் ஸஹாபாக்களில் மிகவும் சிறந்தவர் அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆவார்கள் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் கூறுகின்றார்கள்: "ஸஹாபாக்களில் மிகச் சிறந்தவர் அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு, பின்பு உமர் ரழியல்லாஹு அன்ஹு என்பதில் அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தினர் உடன்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பின்பு உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும், அதற்குப் பின்பு அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் சிறப்புக்குரியவர்கள் என்று கூறியுள்ளனர்." (ஷர்ஹு முஸ்லிம்)

கூபாவைச் சேர்ந்த அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தினர் உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை விட அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சிறப்பானவர் என்று கூறியுள்ளனர். ஆனாலும், உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களை விட மிகவும் சிறந்தவர் என்பதே பிரசித்தி பெற்ற கருத்தாகும்.

அபூ மன்ஸூர் அல்பக்தாதி ரஹிமஹுல்லாஹ் கூறுகின்றார்கள்: "எமது தோழர்கள் மேற்கூறப்பட்ட ஒழுங்குமுறைப்படி நான்கு கலீபாக்கள் தாம் ஸஹாபாக்களில் மிகவும் சிறப்புக்குரியவர்கள் என்பதில் உடன்பட்டுள்ளனர். பின்பு சுவனத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட ஏனைய ஸஹாபாக்கள், பின்பு பத்ர் போரில் கலந்து கொண்டவர்கள், பின்பு உஹத் போரில் கலந்து கொண்டவர்கள், பின்பு பைஅதுர் ரிழ்வானில் கலந்து கொண்டவர்கள் ஆவார்கள்." (ஷர்ஹு முஸ்லிம்)

ஸஹாபாக்களில் அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மிகவும் சிறப்புக்குரியவர் என்பதற்கான சில ஆதாரங்கள்

1. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "எனது உம்மத்திலிருந்து நான் உற்ற தோழன் ஒருவரை எடுத்துக்கொள்வதாக இருந்தால் அபூபக்ரை உற்ற தோழனாக எடுத்திருப்பேன்." (புஹாரி, முஸ்லிம்)

2. இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள்: "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் நாம் மனிதர்களுக்கு மத்தியில் சிறந்தவர்களைத் தெரிவு செய்யக்கூடியவர்களாக இருந்தோம். எனவே, நாம் அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை (முதலாவதாகத்) தெரிவு செய்வோம். பின்பு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தெரிவு செய்வோம். பின்பு உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தெரிவு செய்வோம்." (புஹாரி)

3. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு பெண் வந்தாள். அவள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு விடயம் குறித்துப் பேசினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறுபடியும் தம்;மிடம் வருமாறு அவளுக்குக் கட்டளையிட்டார்கள். அவள்: அல்லாஹ்வின் தூதரே! நான் வந்து உங்களைக் காணவில்லையென்றால், (என்ன செய்வது?)" எனக் கேட்டாள். அதற்கவர்கள் :நீங்கள் என்னைக் காணாவிட்டால் அபூபக்ரிடம் செல்லுங்கள் என்று கூறினார்கள்." (புஹாரி, முஸ்லிம்)

4. அம்ர் இப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள்: "நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் மனிதர்களில் உங்களுக்கு மிகவும் விருப்பமானவர் யார்? எனக் கேட்டேன். அதற்கவர்கள் ஆஇஷா என்று கூறினார்கள். பின்பு ஆண்களில் மிகவும் விருப்பமானவர் யார்? எனக் கேட்டேன். அதற்கவர்கள் அவளுடைய தந்தை என பதிலளித்தார்கள். பின்பு யார்? என நான் கேட்டேன். அதற்கவர்கள் சில மனிதர்களைக் கூறிக்கொண்டிருந்தார்கள்." (புஹாரி, முஸ்லிம்)

5. இப்னுல் ஹனபிய்யா என்பவர் கூறுகின்றார்: "நான் எனது தந்தை (அலி இப்னு அபீதாலிப்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதருக்குப் பின்பு மனிதர்களில் மிகவும் சிறந்தவர் யார்? எனக் கேட்டேன். அதற்கவர்கள்: அபூபக்ர் என பதிலளித்தார்கள். பின்பு யார்? எனக் கேட்டேன். அதற்கவர்கள்: உமர் என்று கூறினார்கள். அவர் உஸ்மான் என்று கூறுவாரோ என நான் பயந்தேன். பின்பு (சிறந்தவர்) நீங்களா? என நான் கேட்டேன். அதற்கவர்கள் :நான் முஸ்லிம்களில் ஒருவனாகவே தவிர வேறு இல்லை என்று பதிலளித்தார்கள்." (புஹாரி)

சந்தேகமும் தெளிவும்

ராபிதாக்கள் ஸஹாபாக்களை குறை கூறுவதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நீர் தடாகம் குறித்து வரக்கூடிய ஹதீஸ்களை ஆதாரமாகக் கூறுகின்றனர்.

அந்த ஹதீஸ்களில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது.

சில மனிதர்கள் அந்த நீர் தடாகத்தை விட்டும் அப்புறப்படுத்தப்படுவார்கள். அதைப் பார்த்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் :இவர்கள் என்னுடைய தோழர்கள் எனக்கூறுவார்கள். மற்றொரு அறிவிப்பில் :இவர்கள் என்னுடைய உம்மத்தினர் என்று கூறுவார்கள் என இடம்பெற்றுள்ளது. அப்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இவர்கள் உமக்குப் பின்னால் மார்க்கத்தில் புதிதாக உருவாக்கியவைகள் உமக்குத் தெரியாது என்று கூறப்படும்.

மார்க்க அறிஞர்கள் இந்த சந்தேகத்திற்கு மூன்று வகையான பதில்களைக் கூறியுள்ளனர்.

1. இந்த ஹதீஸில் கூறப்பட்டவர்கள் மதம் மாறிய நயவஞ்சகர்கள்.

2. இந்த ஹதீஸில் கூறப்பட்டவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் வாழ்ந்து பின்பு அவருக்குப் பின்பு மதம் மாறியவர்கள்.

3. இவர்களைப் பொறுத்தவரையில் பெரும்பாவங்களிலும் பித்அத்களிலும் ஈடுபட்டவர்கள். இவர்களது பித்அத்கள் இவர்களை குப்ருக்கு இட்டுச் செல்லவில்லை. அவர்களுக்கு தண்டனையாக அவர்கள் அந்த நீர் தடாகத்தை விட்டும் தூரப்படுத்தப்படுவார்கள். பின்பு அவர்களுக்கு அல்லாஹ் கருணை காட்டுவான்.  அதன் காரணமாக அவர்களை அல்லாஹ் சுவனத்தில் நுழைவிப்பான். (ஷர்ஹு ஸஹீஹ் முஸ்லிம்)

- இன்ஷா அல்லாஹ் தொடரும்.