“லாமியா” எனும் நூலுக்கான விளக்கவுரை – 05

بسم الله الرحمن الرحيم

இரண்டாவது கவிதை அடி

'اسمع كلام محقق في قوله لا ينثني عنه ولا يتبدل'

“தனது பேச்சை உறுதிப்படுத்தியவாறு பேசக்கூடியவரின் பேச்சை செவிமடுங்கள்! அவர் தனது கருத்திலிருந்து திரும்பவோ அதை மாற்றிக்கொள்ளவோமாட்டார்.”

விளக்கம்:

இக்கவிதை அடியில் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தான் ஏற்றிருக்கக்கூடிய கொள்கை விடயத்தில் அவர் உறுதியாக இருப்பதாகவும் சரியான அகீதாவை விட்டும் அவர் ஒரு சாண் அளவு கூட தூரமாகிவிடமாட்டார் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

அவர்களுக்கு பித்அத்வாதிகளினால் ஏற்படுத்தப்பட்ட சோதனைகள் நேர்த்தியான இக்கொள்கையில் மென்மேலும் உறுதித் தன்மையுடன் இருக்கத் துணை நின்றன.

தான் ஏற்றிருக்கக்கூடிய கொள்கையில் உறுதித்தன்மையை அல்லாஹ்விடம் கேட்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அவசியமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு துஆச் செய்தார்கள்: “உள்ளங்களைப் பிரட்டக்கூடியவனே! எனது உள்ளத்தை உனது மார்க்கத்தின் மீது பிரட்டுவாயாக”. (இப்னுமாஜா)

மேலும், “உள்ளங்களைத் திருப்புபவனே! எனது உள்ளத்தை உனக்கு வழிபடுவதின் பால் திருப்புவாயாக” என்றும் கூறினார்கள். (முஸ்லிம்)

இந்தக் கவிதை அடியில் இமாமவர்கள் தான் பின்னால் கூறக்கூடிய அகீதா சார்ந்த விடயங்களைப் புகழ்ந்து கூறியிருக்கின்றார்கள். மேலும், தான் உறுதிப்படுத்திப் பேசக்கூடியவர் என்றும் சத்திய வார்த்தையிலிருந்து திரும்பவோ, தன்னை மாற்றிக்கொள்ளவோமாட்டார் என்றும் தன்னைப் புகழ்ந்து கூறியிருக்கின்றார்கள்.

இதுவே அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தினரின் கொள்கையாகும். அவர்கள்  தமது கொள்கைகளையும் வழிமுறைகளையும் குர்ஆன், சுன்னாவுடைய ஆதாரங்களிலிருந்து பெற்றுக்கொள்வார்கள்.

மாறாக, பித்அத்வாதிகளைப் பொறுத்தவரையில் அவர்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குத் தங்களை மாற்றிக் கொள்பவர்களாக இருக்கின்றார்கள். ஒரு கருத்தில் அவர்கள் நிலைத்திருக்கமாட்டார்கள். ஏனெனில், அவர்கள் தங்களது கொள்கைகளை அவர்களது மனோ இச்சையின்படியே அமைத்துக் கொள்கின்றார்கள்.

அஹ்லுஸ்ஸுன்னாக்கள் தாம் ஏற்றிருக்கக்கூடிய கொள்கையில் உறுதியாக இருப்பார்கள் என்பதற்குச் சான்றாக இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் ஒரு சம்பவம் அமைந்திருக்கின்றது. பித்அத்வாதிகளில் ஒருவன் இமாமவர்களிடம் வந்து: “என்னுடன் தர்க்கம் புரியுங்கள்” என்று கூறினான். அதற்கு இமாமவர்கள்: “நீ என்னை மிகைத்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?” என வினவினார்கள். அதற்கு அவன்: “நீங்கள் என்னைப் பின்பற்ற வேண்டும்” என்று பதிலளித்தான். “நான் உன்னை மிகைத்துவிட்டால் நீ என்ன செய்வாய்?” என்று இமாமவர்கள் வினவியபோது: “நான் உங்களைப் பின்பற்றுவேன்” என்று பதிலளித்தான். அதற்கு இமாமவர்கள்: “உன்னைப் போன்ற ஒரு சந்தேகக்காரனிடம் சென்று நீ தர்க்கம் புரிந்து கொள்! நான் எனது கொள்கையில் உறுதியாக இருக்கிறேன்” என்று கூறினார்கள்.

இக்கவிதை அடியில் இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தன்னைப் புகழ்ந்து சில வரிகளைக் கூறியுள்ளார்கள். தன்னையே ஒருவர் புகழ்ந்து கொள்வதை மார்க்கம் தடை செய்திருக்கின்றது. அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “நீங்கள் உங்களையே பரிசுத்தப்படுத்திக்கொள்ள வேண்டாம், இறையச்சமுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான்”. (அந்நஜ்ம்: 32)

இவ்வசனம் தன்னை ஒருவர் புகழக்கூடாது என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. என்றாலும் பிறருடைய நலனுக்காகவோ அல்லது, தம்மை வந்தடையும் தீங்கைத் தடுத்துக்கொள்வதற்காகவோ தன்னைத்தானே ஒருவர் புகழ்ந்து பேசுவதில் குற்றம் இல்லை. இமாமவர்கள் தன்னைப் புகழ்ந்தது இந்த நோக்கத்தையே சாரும்.

பிறருடைய நலனுக்காகவும் தமக்கு ஏற்படக்கூடிய தீங்கைத் தவிர்ப்பதற்காகவும் ஒருவர் தன்னைப் புகழ்ந்து கூறலாம் என்பதற்கு நபிமார்கள், ஸஹாபாக்களின் வரலாறுகளிலிருந்து பல சான்றுகள் உள்ளன.

யூஸுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்: “இந்த பூமியின் களஞ்சியங்களுக்கு என்னை நிர்வாகியாக நியமியுங்கள். நான் பாதுகாப்பவனாகவும் அறிந்தவனாகவும் இருக்கின்றேன்” என்றார்கள். (யூஸுப்: 55)

யூஸுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன்னைப் புகழ்ந்து கூறியிருப்பதை இந்த வசனம் சுட்டிக்காட்டியுள்ளது. பூமியின் களஞ்சியங்களைத் தான் பாதுகாப்பேன் என்றும் அதுபற்றித் தனக்கு அறிவு இருப்பதாகவும் அவர் கூறியிருப்பதை நாம் அவதானிக்கலாம்.

உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது வீட்டில் முற்றுகையிடப்பட்ட போது பின்வருமாறு கூறினார்கள்: “அல்லாஹ்வின் பெயரால் உங்களைக் கேட்கிறேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களைத் தவிர வேறு எவரையும் நான் அல்லாஹ்வின் பெயரால் கேட்கவில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: யார் ரூமா என்ற கிணற்றைத் தோண்டுகிறாரோ அவருக்கு சுவர்க்கம் உண்டு என்று கூறியதை நீங்கள் அறியவில்லையா? நானே அதனைத் தோண்டினேன். மேலும், அவர்கள்: எவர் தபூக் போருக்கான படையைத் தயார்படுத்துகின்றாரோ அவருக்கு சுவர்க்கம் உண்டு என்று கூறியதை நீங்கள் அறியவில்லையா? நானே அதனைத் தயார்படுத்தினேன்”.

இமாம் புஹாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அறிவிப்பாளர் வரிசையின்றி இச்செய்தியை ஸஹீஹுல் புஹாரியில் 2778வது செய்தியாகப் பதிவு செய்துள்ளார்கள்.

பிறருடைய நலனுக்காகத் தன்னைச் சிறப்பித்துக் கூறிய யூஸுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் போன்று தனக்கு ஏற்பட இருக்கின்ற தீங்கைத் தடுப்பதற்காகத் தன்னைச் சிறப்பித்து உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: “ஒரு மனிதன் தீமையைத் தடுத்துக்கொள்ளல் அல்லது, பயனை ஏற்படுத்தல் போன்ற தேவைகளுக்காகத் தன்னைச் சிறப்பித்துப் பேசலாம் என்பதனை மேற்குறித்த செய்தியிலிருந்து புரிந்து கொள்ளலாம். பெருமைக்காகவும் அதிகமதிகமாகவும் புகழ்ந்து கூறுவதே வெறுக்கத்தக்கதாகும்”.

இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: “எவனைத் தவிர வணக்கத்துக்குத் தகுதியானவன் வேறு யாரும் இல்லையோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் வேதத்தில் உள்ள எந்த சூராவாக இருந்தாலும் அது எங்கே இறங்கியது என்பதை நான் அறிவேன். எந்தவொரு வசனமாக இருந்தாலும் அது எது விடயமாக இறக்கப்பட்டது என்பதையும் நான் அறிவேன். அல்லாஹ்வின் வேதத்தைப்பற்றி என்னைவிட அறிந்தவர் வேறு எவரும் இருப்பதாக நான் அறிந்தால் நான் ஒட்டகத்தில் ஏறிச் சென்று அவரை அடைந்து கொள்வேன்”. (புஹாரி, முஸ்லிம்)

இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: “ஒரு மனிதன் தேவையின் போது தனது சிறப்பைக் குறித்தும் தனது அறிவு பற்றியும் பேசலாம் என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாக உள்ளது. எவர் தேவையின்றி, குறிப்பாக தற்பெருமைக்காகத் தன்னைப் புகழ்ந்து பேசுகின்றாரோ அதுவே தடை செய்யப்பட்டதாகும்”.

-        இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-        அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்

Lesson_04

[audio:http://www.salafvoice.org/audio_db/78799014.mp3]

Click Here to Download