ரியாளுஸ்ஸாலிஹீன் விளக்கவுரை – 08

بسم الله الرحمن الرحيم

உமர் இப்னுல் ஹத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றிய குறிப்புக்கள்

இந்நூலில் இடம்பெறும் அனைத்து ஹதீஸ்களையும் தெளிவுபடுத்த முன்னர் ஒவ்வொரு ஹதீஸையும் அறிவிக்கும் ஸஹாபியைப் பற்றி சில தகவல்களை நாம் இங்கு குறிப்பிடுவோம்.

ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்ட முதல் ஹதீஸை உமர் இப்னுல் ஹத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். உமர் இப்னுல் ஹத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றிய சில குறிப்புக்களைப் பார்ப்போம்.

முழுப்பெயர்: உமர் இப்னுல் ஹத்தாப் இப்னி நுபைல் இப்னி அப்தில் உஸ்ஸா இப்னி ரியாஹ் இப்னி குர்த் இப்னி ரஸாஹ் இப்னி அதீ இப்னி கஃப் இப்னி லுஅய்.

இடுகுறிப்பெயர்: அபூஹப்ஸ்

சிறப்புப் பெயர்: அமீருல் முஃமினீன்

பரம்பரை / கோத்திரம்: அல்குரஷீ, அல்அதவீ

பிறப்பு: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்து பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பின்பு பிறந்தார்கள். (தாரீஹுல் ஹுலபா)

தாயார்: இவரது தாயின் பெயர் ஹன்தமா பின்த் ஹிஷாம்

இஸ்லாத்தை ஏற்றல்: நபித்துவம் கழிந்து 6 ஆண்டுகளுக்குப் பின்பு இவர்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள். இஸ்லாத்தை ஏற்கும்போது இவரது வயது 27 ஆகும். இவர் இஸ்லாத்தை ஏற்க மூன்று நாட்களுக்கு முன்பு ஹம்ஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாத்தைத் தழுவினார்கள். (ஸியரு அஃலாமின் நுபலா)

உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: “உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து நாம் கண்ணியமானவர்களாகவே இருந்தோம்”. (புஹாரி)

சிறப்புக்கள்:

1.   உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் கூறப்பட்ட பத்து ஸஹாபாக்களில் ஒருவராகக் காணப்படுகிறார்கள். அவர்களின் பட்டியல் பின்வருமாறு:

அபூபக்ர் இப்னு அபீகுஹாபா, உமர் இப்னுல் ஹத்தாப், உஸ்மான் இப்னு அப்பான், அலீ இப்னு அபீதாலிப், அஸ்ஸுபைர் இப்னுல் அவ்வாம், ஸஃத் இப்னு அபீவக்காஸ், அபூஉபைதா ஆமிர் இப்னுல் ஜர்ராஹ், தல்ஹா இப்னு உபைதில்லாஹ், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப், ஸஈத் இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹும்.

2. அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “நான் உறங்கிக்கொண்டிருந்த போது (கனவில்) என்னை சுவர்க்கத்தில் கண்டேன். அப்போது (அங்கிருந்த) அரண்மனை ஒன்றின் பக்கத்தில் ஒரு பெண் வுழூச் செய்து கொண்டிருந்தாள். அப்போது நான்: ‘இந்த அரண்மனை யாருடையது?’ என்று கேட்டேன். அதற்கு (வானவர்கள்): ‘அது உமருடையது’ என்று பதிலளித்தார்கள். அப்போது எனக்கு உமரின் ரோஷம் நினைவுக்கு வந்தது. உடனே, அங்கிருந்து திரும்பிச் சென்று விட்டேன்'. இதைக்கேட்ட உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அழுதார்கள். பிறகு, ‘அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்?' எனக் கூறினார்கள்”. (புஹாரி, முஸ்லிம்)

3. ஸஃத் இப்னு அபீவக்காஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “ஹத்தாபின் புதல்வரே! என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! ஒரு பாதையில் நீங்கள் நடந்து செல்வதை ஷைத்தான் கண்டால், அவன் உங்கள் பாதையைவிட்டு வேறொரு பாதையில் தான் செல்வான்”.

4. அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “உங்களுக்கு முன்பிருந்த சமுதாயங்களில் (பல்வேறு) பிரச்சினைகளின் போது சரியான தீர்ப்பு எது என்பது குறித்து இறையருளால் முற்கூட்டியே அறிவிக்கப்பட்டவர்கள் இருந்தார்கள். என் சமுதாயத்தில் அப்படிப்பட்டவர் எவரேனும் இருந்தால் அவர் உமராகத்தான் இருப்பார்”. (புஹாரி)

ஆட்சிப் பொறுப்பு

உமர் இப்னுல் ஹத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் கட்டளையின் பிரகாரம் ஜுமாதா அல்ஊலா மாதம் ஹிஜ்ரி 13ம் ஆண்டு கலீபாவாக நியமிக்கப்பட்டார்கள். (தாரீஹுல் குலபா)

இவரது ஆட்சிக்காலத்தில் அதிகமான பிரதேசங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், இறை நிராகரிப்பாளர்களுக்கெதிராக யுத்தங்களும் நடைபெற்றன. மேலும், உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சில சிறப்புப் பணிகளை அவர்களது ஆட்சிக்காலத்தில் மேற்கொண்டார்கள்.

ஹிஜ்ரி 14ம் ஆண்டில் திமிஷ்க், ஹிம்ஸ், பஃலபக், பஸரா ஆகிய நகரங்கள் இவரால் கைப்பற்றப்பட்டது. இவ்வாண்டில் தான் அவர்கள் மனிதர்கள் அனைவரையும் ஒரே இமாமின் கீழ் தராவீஹ் தொழுகைக்கு ஒன்று கூட்டினார்கள்.

ஹிஜ்ரி 15ம் ஆண்டில் உர்துன் பிரதேசம் கைப்பற்றப்பட்டது. இவ்வாண்டில் யர்மூக் மற்றும் காதிஸிய்யா யுத்தங்களும் இடம்பெற்றன.

ஹிஜ்ரி 16ம் ஆண்டில் பைதுல் மக்திஸ், அன்தாகியா ஆகிய பிரதேசங்கள் வெற்றி கொள்ளப்பட்டன. இவ்வாண்டில் ஹிஜ்ரத் நிகழ்வை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டியை அவர்கள் உருவாக்கினார்கள்.

ஹிஜ்ரி 17ம் ஆண்டு அல்மஸ்ஜிதுந் நபவியை விரிவுபடுத்தினார்கள்.

ஹிஜ்ரி 20ம் ஆண்டு எகிப்து, மொரோக்கோ ஆகிய பிரதேசங்கள் கைப்பற்றப்பட்டன. இவ்வாண்டில் ரோமர்களின் ஆட்சியாளரான கைஸர் மரணித்தார்.

ஹிஜ்ரி 21ம் ஆண்டு இஸ்கன்தரிய்யா வெற்றி கொள்ளப்பட்டது. (பார்க்க: தாரீஹுல் குலபா)

மரணம்:

உமர் இப்னுல் ஹத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அதிகமான பிரதேங்களை வெற்றிகொண்டதால் அவர் மீது காபிர்களுக்கு பகைமை காணப்பட்டு வந்தது. அதன் காரணமாக அபூலுஃலுஆ அல்மஜூஸீ என்பவன் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைக் கொல்வதற்கு திட்டமிட்டான்.

உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சுபஹ் தொழுகை நடாத்த மனிதர்களுக்கு முன்னிலையில் வந்து தொழுகையை ஆரம்பித்தார். பள்ளிவாசலுக்குள் ஒழிந்திருந்த அபூலுஃலுஆ மனிதர்களின் தொழுகை வரிசைகளைப் பிளந்தவனாக உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அருகில் வந்து அவரை கூரிய ஆயுதத்தால் தாக்கினான். உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கீழே விழுந்ததும் அவர்களை சில மனிதர்கள் அவரது வீட்டிற்குச் சுமந்து சென்றனர். அவர் அப்போது மயக்கமுற்றிருந்தார். மனிதர்களுக்கு அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் முன்வந்து தொழுகை நடாத்தினார்கள். பின்பு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சில நாட்கள் கழிந்து மரணத்தை எய்தினார்கள். அவர்கள் ஹிஜ்ரி 23ம் ஆண்டு மதீனாவில் துல்ஹஜ் மாதம் 26ம் நாள் மரணித்தார்கள்.

-    இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-    தொகுப்பு: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்