ரியாளுஸ்ஸாலிஹீன் விளக்கவுரை – 03

بسم الله الرحمن الرحيم

உளத்தூய்மையின் சிறப்புக்கள்

1.      அல்லாஹ் அல்குர்ஆனில் உளத்தூய்மையுடையவர்களை சிறப்பித்துக் கூறியிருக்கின்றான்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "நிச்சயமாக நல்லோர்கள் குவளையில் (பானத்தை) அருந்துவார்கள். அதன் கலப்பு கற்பூரமாக இருக்கும். அது ஓர் ஊற்றாகும். அதிலிருந்து அல்லாஹ்வின் நல்லடியார்கள் அருந்துவார்கள். அதனை அவர்கள் ஓடையாக ஓடச் செய்வார்கள். இவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள். இன்னும் ஒரு நாளையும் அவர்கள் பயப்படுவார்கள். அதன் தீங்கு எங்கும் பரவியதாக இருக்கும். மேலும், அவன் மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைக்கும் அநாதைக்கும் சிறைப்பட்டவருக்கும் அவர்கள் உணவளிப்பார்கள். ‘உங்களுக்கு நாம் உணவளிப்பதெல்லாம் அல்லாஹ்வின் முகத்தை நாடியேதான். உங்களிடமிருந்து யாதொரு பிரதிபலனையோ அல்லது, நன்றி செலுத்துவதையோ நாங்கள் நாடவில்லை. மிகக் கடுகடுக்கக்கூடிய நெருக்கடியான ஒரு நாளை நிச்சயமாக நாங்கள் எங்கள் இரட்சகனிடமிருந்து பயப்படுகின்றோம்’ (என்றும் கூறுவார்கள்). ஆகவே, அல்லாஹ் அந்நாளின் தீங்கிலிருந்து அவர்களைப் பாதுகாத்து அவர்களுக்கு மலர்ச்சியையும் மகிழ்வையும் கொடுத்தான். அன்றியும் அவர்கள் பொறுமையுடனிருந்ததன் காரணமாக சுவனத்தையும் பட்டாடையையும் அவர்களுக்கு அவன் கூலியாக வழங்குகிறான். அதில் ஆசனங்களின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள். அதில் சூரியனையும் கடுங்குளிரையும் அவர்கள் காணமாட்டார்கள். அதன் நிழல்கள் அவர்கள் மீது நெருங்கியவையாக இருக்கும். அதன் கனிகள் தாழ்வாகத் தாழ்த்தப்பட்டுள்ளன.” (அல்இன்ஸான்: 5-14)

இந்த வசனங்களில் அல்லாஹ் நல்லோர்களின் பண்புகளையும் அவர்களுக்குக் கிடைக்கும் கூலியையும் கூறியுள்ளான். உளத்தூய்மையுடன் எந்தவிதக் கூலியையும் மனிதர்களிடமிருந்து எதிர்பார்க்காதவர்களாக அந்த நல்லோர்கள் பிறருக்கு உணவளிப்பார்கள் என்பதை அல்லாஹ் இவ்வசனத்தில் குறித்துக்காட்டியுள்ளான். இதன் மூலம் உளத்தூய்மையுடன் இருப்பவர்களுக்கான கூலியையும் சிறப்பையும் விளங்கிக்கொள்ளலாம்.

"உங்களுக்கு நாம் உணவளிப்பதெல்லாம் அல்லாஹ்வின் முகத்தை நாடியேதான். உங்களிடமிருந்து யாதொரு பிரதிபலனையோ அல்லது, நன்றி செலுத்துவதையோ நாங்கள் நாடவில்லை” என்ற வசனத்தின் விளக்கம்: 'நாம் அல்லாஹ்வின் கூலியை நாடியே இவ்வாறு செய்கிறோம். அதாவது, உங்களிடமிருந்து நாம் நீங்கள் பிரதியுபகாரமாக வழங்கக்கூடிய கூலியையும் மனிதர்களிடம் நீங்கள் எம்மைப் பாராட்டிப் பேச வேண்டும் என்பதையும் வேண்டவில்லை” என்பதாக இமாம் இப்னு கஸீர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தன்னுடைய தப்ஸீரில் குறிப்பிட்டுள்ளார்கள்.

இமாம் முஜாஹித், ஸஈத் இப்னு ஜுபைர் ரஹிமஹுமல்லாஹ் ஆகியோர்: 'அல்லாஹ்வின் மீது ஆணையாக இவர்கள் இவ்வார்த்தைகளை அவர்களுடைய நாவுகளால் கூறவில்லை. என்றாலும், அதை அல்லாஹ் அவர்களுடைய உள்ளங்களிலிருந்து அறிந்து கொண்டான். எனவே, இது விடயத்தில் ஆசைப்படுபவன் ஆசைகொள்வதற்காக வேண்டி அவர்களைப் புகழ்ந்து கூறினான்” என்று விளக்கமளித்துள்ளார்கள்.

2.      நபிமார்கள் அவர்களுடைய அழைப்புப் பிரச்சாரங்களை உளத்தூய்மையுடைய வார்த்தைகளைப் பயன்படுத்தியே மேற்கொண்டிருக்கின்றார்கள்.

"அதற்காக வேண்டி உங்களிடம் நாம் எக்கூலியையும் கேட்கவில்லை. எனது கூலி அகிலத்தாரின் இரட்சகன் மீதே அன்றில்லை.” இவ்வார்த்தையை நூஹ், ஹுத், ஸாலிஹ், லூத், ஷுஐப் அலைஹிமுஸ்ஸலாம் ஆகிய நபிமார்கள் கூறியிருக்கின்றார்கள். உளத்தூய்மை நபிமார்களிடம் காணப்பட்ட பிரதான பண்பாக இருந்தது என்பதற்கு இது ஒரு சான்றாக அமைந்திருக்கின்றது.

3. உளத்தூய்மை பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கான காரணமாகும்.

நபி ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "ஒரு விபச்சாரப் பெண் கடும் வெப்பம் நிறைந்த ஒரு நாளில் நாயொன்று ஒரு கிணற்றைச் சுற்றி வந்துகொண்டிருப்பதைக் கண்டாள். அது தாகத்தால் தனது நாக்கை வெளியே தொங்கவிட்டுக் கொண்டிருந்தது. உடனே அப்பெண் தனது காலுறையைக் கழற்றி (அதில் தண்ணீரை நிரப்பி வந்து அதற்குப் புகட்டி)னாள். அதன் காரணமாக அவளுக்குப் பாவமன்னிப்பு வழங்கப்பட்டது.” (முஸ்லிம்)

இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் “மதாரிஜுஸ் ஸாலிகீன்” என்ற நூலில் இந்த ஹதீஸுக்குப் பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்கள்: 'அந்த  நிமிடத்தில் அவளுடைய உள்ளத்தில் எழுந்த ஈமான் மற்றும் அடிபணிதல் ஆகியவற்றின் யதார்த்தத்தை நீ சிந்திப்பாயாக! அந்த யதார்த்தங்களில் உள்ளவைகள் (பின்வருமாறு):

1. அப்பெண் இச்செயலை எந்த மனிதரின் கூலியையும் எதிர்பார்த்தவளாகச் செய்யவில்லை. ஏனென்றால், அவள் ஒரு நாய்க்கே (நீர்) வழங்கியுள்ளாள். அதனிடமிருந்து அப்பெண் கூலியையோ வேறு விடயங்களையோ எதிர்பார்க்க முடியாது.

2. அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அவளைக் காணவில்லை. இதனையே ஹதீஸின் வெளிப்படை அறிவிக்கின்றது.

3. அந்தப் பெண் குறித்த நாய்க்கு நீர் புகட்ட அவளையே கடினத்திற்குள்ளாக்கியிருக்கின்றாள். அவள் ஒரு பெண்ணாக இருந்தும் கிணற்றில் இறங்கி அவளுடைய காலுறையை நீரால் நிரப்பி அதை தனது வாயால் சுமந்து வந்து பின்பு அற்பமான அந்நாய்க்கு அவள் நீர் புகட்டினாள்.

4. நற்கருமங்களில் உளத்தூய்மையுடன் செயற்படுவது எமது துஆக்கள் அங்கீகரிக்கப்படுவதற்கான காரணமாக அமைகின்றது.

 ஓர் அடியான் தான் உளத்தூய்மையுடன் செய்த நற்கருமங்களை அல்லாஹ்விடம் முன்வைத்து துஆச் செய்தால் அந்த துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்களில் மூன்று பேர் (ஒன்றாக) நடந்து சென்றனர். இறுதியில் குகை ஒன்றில் இரவைக் கழிப்பதற்காக தஞ்சம் புகுந்தனர். அதில் அவர்கள் நுழைந்தவுடன் மலையிலிருந்து பெரும் பாராங்கல்லொன்று உருண்டு வந்து குகை வாசலை அடைத்துவிட்டது. அப்போது அவர்கள் ‘நாங்கள் செய்த நற்செயலைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால் தவிர எங்களால் தப்ப முடியாது’ என்று தமக்குள் கூறிக்கொண்டனர். அவர்களில் ஒருவர்: ‘இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் அவர்களுக்குப் பால் கறந்து கொடுப்பதற்கு முன் என் குடும்பத்தினருக்கோ குழந்தைகளுக்கோ பால் கொடுப்பதில்லை. ஒரு நாள் எதையோ தேடிச் சென்றதால் தாமதமாக வந்தேன். என்னுடைய தாயும் தந்தையும் (முன்பே) உறங்கியிருக்கக் கண்டேன். அவர்களுக்குப் பால் கொடுப்பதற்கு முன் என் குடும்பத்தினருக்கோ என் அடிமைகளுக்கோ பால் கொடுப்பதை விரும்பாததால் அவர்கள் விழிப்பதை எதிர்பார்த்து என் கைகளில் பாத்திரத்தை வைத்துக்கொண்டு காத்திருந்தேன். அதிகாலை நேரம் வந்ததும் அவ்விருவரும் விழித்து தமக்குரிய பாலைக் குடித்தனர். எனவே, இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக்கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்றுவாயாக!’ எனக் கூறினார். உடனே அவர்கள் வெளியேற முடியாத அளவுக்கு அப்பாறை சற்று விலகியது.

மற்றொருவர்: ‘இறைவா! என் தந்தையின் சகோதரரின் ஒரு மகள் இருந்தாள். அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தாள். நான் அவளை அடைய விரும்பினேன். அவள் என்னிடமிருந்து விலகிச் சென்றாள். அவளுக்குப் பஞ்சம் நிறைந்த ஓர் ஆண்டு வந்தபோது என்னிடம் வந்தாள். நான் அவளை அடைந்திட அவள் எனக்கு வழிவிட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் நூற்று இருபது தங்கக் காசுகளை அவளுக்குக் கொடுத்தேன். அவளை நான் வசப்படுத்தி அவளிடம் நெருங்க முற்பட்டபோது, முத்திரையை அதற்கான (மணப் பந்தத்தின்) உரிமையின்றி உடைப்பதற்கு உனக்கு நான் அனுமதி தரமாட்டேன் என்று அவள் கூறினாள். உடனே, அவளுடன் உறவு கொள்ளும் பாவத்திலிருந்து விலகிக் கொண்டேன். அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தும் அவளைவிட்டுத் திரும்பிக் கொண்டேன். நான் அவளுக்குக் கொடுத்த தங்க நாணயத்தை அவளிடமே விட்டுவிட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக்கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டும் அகற்றுவாயாக!’ எனக்கூறினார். பாறை சற்று விலகியது. ஆயினும், அவர்களால் வெளியேற முடியவில்லை.

மூன்றாமவர்: ‘இறைவா! நான் சில ஆட்களை கூலிக்கு அமர்த்தி அவர்களின் கூலியையும் கொடுத்தேன். ஒரேயொருவர் மட்டும் தன் கூலியைவிட்டுவிட்டுச் சென்றார். அவரின் கூலியை நான் முதலீடு செய்து அதனால் செல்வம் பெருகியிருந்த நிலையில் சிறிது காலத்திற்குப் பின் அவர் என்னிடம் வந்தார். அல்லாஹ்வின் அடியாரே! என்னுடைய கூலியை எனக்குக் கொடுத்துவிடு! எனக் கூறினார். நீர் பார்க்கின்ற இந்த ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், அடிமைகள் எல்லாம் உம்முடைய கூலியிலிருந்து கிடைத்தவையே என்று நான் கூறினேன். அதற்கவர் அல்லாஹ்வின் அடியாரே! என்னைக் கேலி செய்யாதீர்! எனக் கூறினார். நான் உம்மைக் கேலி செய்யவில்லை எனக் கூறினேன். அவர் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஓட்டிச் சென்றார். இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களை விட்டும் அகற்றுவாயாக!’ எனக் கூறினார். பாறை முழுமையாக விலகியது. உடனே, அவர்கள் வெளியேறிச் சென்றுவிட்டனர்.” (புஹாரி, முஸ்லிம்)

இம்மூன்று சகோதரர்களும் தாம் உளத்தூய்மையுடன் செய்த நற்கருமங்களை அல்லாஹ்விடம் முன்வைத்து துஆச் செய்ததால் அவர்களுடைய துஆவை அல்லாஹ் அங்கீகரித்தான். எனவே, உளத்தூய்மையான காரியங்களை நாம் மேற்கொள்ளக்கூடியவர்களாக இருந்தால் அவைகள் எமது துஆ அங்கீகரிக்கப்படுதவற்கான காரணங்களில் ஒன்றாக அமையும் என்பதற்கு இந்த ஹதீஸ் சிறந்த சான்றாக விளங்குகின்றது.

5. உளத்தூய்மை வாழ்க்கையில் வெற்றியையும் உதவியையும் தேடித்தரும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக அல்லாஹ் இந்த உம்மத்திற்கு உதவுவதெல்லாம் அவர்களில் உள்ள பலவீனமானவர்களின் துஆ, தொழுகை, உளத்தூய்மை ஆகியவற்றைக் கொண்டேயாகும்." (நஸாஈ) இந்த ஹதீஸ் ஸஹீஹான ஹதீஸாகும் என்று அஷ்ஷெய்ஹ் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

தொழுகை, துஆ, உளத்தூய்மை ஆகியன இந்த உம்மத்தினர்கள் அவர்களது வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான அடிப்படை அம்சங்களாகும் என்பதை இந்த ஹதீஸ் எமக்குத் தெளிவுபடுத்துகின்றது.- இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-    அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்