ரியாளுஸ்ஸாலிஹீன் விளக்கவுரை – 02

بسم الله الرحمن الرحيم

முதலாவது பாடம்

உளத்தூய்மை மற்றும் வெளிப்படையான, மறைமுகமான அனைத்து செயல்களிலும் வார்த்தைகளிலும் நிய்யத்தைக் கொண்டுவருதல்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக, கலப்பற்றவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும், மேலும் தொழுகையை நிலைநாட்ட வேண்டும், ஸகாத்தைக் கொடுக்க வேண்டும் என்பதைத் தவிர அவர்களுக்கு கட்டளையிடப்படவில்லை.” (அல்பய்யினா: 5)

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'அல்லாஹ்வை அவைகளின் இறைச்சிகளோ, இரத்தங்களோ சென்றடையாது. மாறாக, உங்களிலிருந்து இறையச்சமே அவனிடம் சென்றடையும்.” (அல்ஹஜ்: 37)

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை நீங்கள் மறைத்தாலும் அல்லது வெளிப்படுத்தினாலும் அவற்றை அல்லாஹ் அறிவான் என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள்.” (ஆலுஇம்ரான்: 29)

முதலாவது ஹதீஸ்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே உள்ளன. ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் நாடியதுதான் கிடைக்கும். எவருடைய ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் இருக்கின்றதோ அவருடைய ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவுமே இருக்கும். எவருடைய ஹிஜ்ரத் உலகிலுள்ளதை அடைந்து கொள்வதற்காக அல்லது திருமணம் செய்து கொள்ளும் ஒரு பெண்ணுக்காக இருக்கின்றதோ அவருடைய ஹிஜ்ரத் அவரால் எதற்காக  மேற்கொள்ளப்பட்டதோ அதற்காகவே இருக்கும்.” (புஹாரீ:1, முஸ்லிம்: 1907)

விளக்கம்:

இமாம் நவவீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் முதலாவது பாடமாக 'உளத்தூய்மை மற்றும் வெளிப்படையான, மறைமுகமான அனைத்து செயல்களிலும் வார்த்தைகளிலும் நிய்யத்தைக் கொண்டுவருதல்” என்று தலைப்பிட்டிருக்கின்றார்கள்.

உளத்தூய்மை மற்றும் நிய்யத் பற்றிய சில தகவல்களை இங்கு குறிப்பிடுகின்றோம்.

உளத்தூய்மை

உளத்தூய்மை என்பதன் விளக்கம்

உளத்தூய்மை என்ற சொல்லுக்கு அரபியில் இஹ்லாஸ் (الإخلاص) என்று கூறப்படும். இஹ்லாஸ் என்றால் அரபு மொழி அடிப்படையில் அதற்கு 'ஒரு விடயத்தை தூய்மைப்படுத்தல்” என்று பொருள் வழங்கலாம்.

ஓரிறைக் கொள்கையுடையவர்களுக்கு உளத்தூய்மையுடையவர்கள் என்று நாம் கூறலாம். இதன் காரணமாகவே 'குல்ஹுவல்லாஹு அஹத்” என்ற சூராவுக்கு அல்இஹ்லாஸ் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், அந்த சூராவில் உள்ள அத்தனை வசனங்களும் ஓரிறைக் கொள்கையைக் கற்றுத் தருகின்றது.

அல்முஹ்லிஸூன் (المخلصون) என்றால் உளத்தூய்மையுடையவர்கள் என்று பொருளாகும். ஆனாலும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்ற கருத்திலும் இச்சொல் பாவனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'உனது கண்ணியத்தின் மீது சத்தியமாக அவர்கள் அனைவரையும் நான் வழிகெடுப்பேன், அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைத் தவிர என்று ஷைத்தான் கூறினான்.” (ஸாத்: 82, 83)

இவ்வசனத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்தபற்கு அல்லாஹ் அல்முஹ்லிஸூன் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளான்.

இஹ்லாஸுடைய வார்த்தை லாஇலாஹ இல்லல்லாஹ் என்பதாகும். வணக்க வழிபாடுகளில் உளத்தூய்மையுடன் செயற்படுவதென்றால் அதன் விளக்கம் முகஸ்துதியை விடுவதாகும்.

மார்க்க அடிப்படையில் உளத்தூய்மை என்றால் 'ஓர் அமலின் மூலம் அல்லாஹ்வை மாத்திரம் நாடுவதும் அவன் அல்லாதவர் நாடப்படாமல் இருப்பதுமாகும்” என்று வரைவிலக்கணம் கூறலாம்.

இவ்வரைவிலக்கணத்தை நவீன காலத்து அறிஞர்களில் ஒருவரான ஸலீம் இப்னு ஈத் அல்ஹிலாலி ஹபிழஹுல்லாஹ் என்பவர் 'பஹ்ஜதுன்னாளிரீன்” என்ற அவருடைய நூலில் கூறியுள்ளார்.

உளத்தூய்மையின் முக்கியத்துவம்

உளத்தூய்மையின் முக்கியத்துவத்தைப் பிரதானமாக இரு விடயங்களைக் கொண்டு நாம் புரிந்து கொள்ளலாம்.

முதல் விடயம்:

அல்லாஹ் அல்குர்ஆனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உளத்தூய்மையுடன் அவனை வணங்குமாறு பல இடங்களில் கட்டளையிட்டிருக்கின்றான்.

'அல்லாஹ்வுக்கே கட்டுப்பட்டு, கலப்பற்றவனாக அவனையே வணங்குமாறு நிச்சயமாக நான் ஏவப்பட்டுள்ளேன் என (நபியே) நீர் கூறுவீராக!” (அஸ்ஸுமர்:11)

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: 'எனவே, அல்லாஹ்வுக்கே கட்டுப்பட்டு, கலப்பற்ற நிலையில் அவனையே வணங்குவீராக!” (அஸ்ஸுமர்:2)

இவ்வசனங்களில் அல்லாஹ் தனது நபிக்கு வணக்க வழிபாடுகளில் உளத்தூய்மையுடன் செயற்படுமாறு ஏவியிருக்கின்றான். எனவே, அல்லாஹ்வுடைய கட்டளை என்ற அடிப்படையில் அதுவும் தனது நபிக்கு கட்டளையிட்டான் என்ற அடிப்படையில் உளத்தூய்மையின் முக்கியத்துவத்தை நாம் இங்கு புரிந்து கொள்ளலாம்.

இரண்டாவது விடயம்:

உளத்தூய்மையின் முக்கியத்துவத்தைத் தெளிவுபடுத்தும் மிகப் பிரதான அம்சம் என்னவென்றால், நிச்சயமாக அல்லாஹ் எந்தவொரு வணக்க வழிபாட்டையும் உளத்தூய்மையின்றி ஏற்றுக்கொள்ளமாட்டான் என்பதுவாகும். எந்த வணக்க வழிபாடுகள் அல்லாஹ் அல்லாத ஒருவருக்கு நிறைவேற்றப்படுகின்றதோ மற்றும் பிறமனிதர்கள் பார்த்துப் புகழ வேண்டும் என்பதற்கு நிறைவேற்றப்படுகின்றதோ அவ்வணக்க வழிபாடுகள் அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது, கூலியையும் பெற்றுத்தரமாட்டாது. மாறாக, அல்லாஹ்வுக்காக வேண்டி மாத்திரம் செய்யப்படும் வணக்கத்திற்கே கூலி வழங்கப்படும். எனவே, இதன் மூலம் உளத்தூய்மையின் அவசியத்தை விளங்கிக்கொள்ளலாம்.

பொதுவாக, அல்லாஹ்விடம் ஓர் இபாதத் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமாயின் அதற்கு இரண்டு நிபந்தனைகள் அவசியமாகின்றன.

முதலாவது நிபந்தனை:

உளத்தூய்மையுடன் நிறைவேற்றப்பட்ட இபாதத்தாக அது இருக்க வேண்டும்.

அதற்கான ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'நேரிய வழி நின்று, கலப்பற்றவர்களாக அவனுக்கே கட்டுப்பட்டு, அல்லாஹ்வை வணங்குமாறும், தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தையும் கொடுத்துவருமாறும் தவிர, அவர்கள் ஏவப்படவில்லை.” (அல்பய்யினா: 5)

இவ்வசனத்தில் அல்லாஹ் வணக்க வழிபாட்டை உளத்தூய்மையுடன் நிறைவேற்ற வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கின்றான்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே உள்ளதாகும்.” (புஹாரீ:1, முஸ்லிம்: 1907)

அதாவது, வணக்க வழிபாடுகளை யார் அல்லாஹ்வுக்காக மாத்திரம் செய்கின்றார்களோ அவர்களுக்கு அதனுடைய கூலி வழங்கப்படும். யார் வேறு நோக்கங்களுக்காக அவைகளைச் செய்கின்றார்களோ அந்நோக்கங்கள் அவர்களுக்குக் கிடைத்துவிடும். ஆனால், அல்லாஹ்விடம் அவ்வணக்கங்கள் அங்கீகரிக்கப்படமாட்டாது என்பதே இந்த ஹதீஸின் விளக்கமாகும்.

இவ்வாதாரங்கள் உளத்தூய்மையின்றி வணக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதை எமக்கு உணர்த்துகின்றன.

இரண்டாவது நிபந்தனை:

நாம் செய்யும் வணக்க வழிபாடுகளுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னாவில் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். யார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தராத அமைப்பில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுகின்றார்களோ அவ்வணக்கங்கள் அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'யார் எமது மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலைச் செய்கின்றாரோ அது நிராகரிக்கப்படும்.” (முஸ்லிம்)

நபிவழிக்குப் புறம்பான வணக்கம் எனக் கருதிச் செய்யப்படும் செயல்கள் அல்லாஹ்விடம் மறுக்கப்படும் என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

இந்த இரண்டு நிபந்தனைகளையும் அடிப்படையாக வைத்து மனிதர்களை நாம் நான்கு வகையினராகப் பிரிக்கலாம்:

முதல் வகையினர்:

வணக்க வழிபாடுகளைச் செய்யும்போது உளத்தூய்மையுடன் நிறைவேற்றமாட்டார்கள். இன்னும், அவர்களுடைய வணக்க வழிபாடுகள் நபிவழிக்கு நேர்பட்டதாகவும் அமைந்திருக்காது. இவர்களுக்கு உதாரணமாக முகஸ்துதியுடைய பித்அத்வாதியை நாம் கூறலாம். இவர்கள் அவர்களுடைய செயல்களை மனிதர்களுக்கு அலங்கரித்துக் காட்டுவார்கள். இவர்கள் அல்லாஹ்விடம் மிகக் கெட்டவர்களாகவும் மிக வெறுப்புக்குரியவர்களாகவும் கருதப்படுவார்கள்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'தாம் செய்தவற்றிற்காக மகிழ்வடைபவர்களையும் செய்யாதவற்றுக்காகப் புகழப்படுவதை விரும்புபவர்களையும் அல்லாஹ்வின் வேதனையில் இருந்து வெற்றி பெற்றவர்கள் என்று நீர் ஒருபோதும் நினைக்க வேண்டாம். அவர்களுக்கு நோவினை தரும் வேதனை உண்டு.” (ஆலுஇம்ரான்: 188)

யார் தான் செய்கின்ற பித்அத், வழிகேடு, ஷிர்க் ஆகியவைகளைக் கொண்டு சந்தோஷப்படுகின்றார்களோ இன்னும், 'நாம் சுன்னாவைச் செய்கின்றோம், அல்லாஹ்வுக்காகவே செய்கின்றோம்” என்று புகழப்படுவதை விரும்பக்கூடியவர்களாக இருக்கின்றார்களோ அவர்களையே இவ்வசனம் எச்சரிக்கின்றது.

உண்மையிலேயே இவ்வாறான ஒரு சாராரைப் பல இடங்களில் நாம் பார்க்கலாம். அவர்கள் பித்அத்களையும் ஷிர்க்கான அம்சங்களையும் செய்கின்றார்கள். ஆனால், மக்களுக்கு மத்தியில் அவர்கள் தாம் அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தினர் என்பது போல் காட்டிக் கொள்வார்கள். இவர்களுக்கான எச்சரிக்கையை நாம் மேற்குறிப்பிடப்பட்ட வசனத்திலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

இரண்டாவது வகையினர்:

வணக்க வழிபாடுகளை அல்லாஹ்வுக்காக நிறைவேற்றுவார்கள். ஆனால், அவர்களுடைய வணக்க வழிபாடுகள் நபிவழிக்கு முரணானதாக அமைந்திருக்கும். இவர்களைப் பொறுத்தவரையில் இவர்களுடைய நிய்யத் சீராக இருப்பதற்கு முயற்சி செய்வார்கள். ஆனால், இவர்களுடைய வணக்கங்கள் நபிவழிக்கு உட்பட்டதா? என்பதை ஆராயமாட்டார்கள்.

நபித்தோழர்களில் சிலர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவிமார்களிடம்: 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைவாக இருக்கும்போது அவருடைய அமல்கள் எவ்வாறு இருக்கும்?” என்று கேட்டார்கள். அவர்கள் அதனை அத்தோழர்களுக்குக் கூறியபோது அவர்களில் ஒருவர்: 'நான் பெண்களைத் திருமணம் செய்யமாட்டேன்” எனக் கூறினார். மற்றொருவர்: 'நான் இறைச்சியை சாப்பிடவேமாட்டேன்” எனக் கூறினார். மற்றொருவர்: 'நான் விரிப்பில் தூங்கவே மாட்டேன்' எனக் கூறினார். இதனைக் கேள்விப்பட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: 'இவ்வாறு கூறியவர்களுக்கு என்ன நேர்ந்தது? ஆனால், நான் தொழுகின்றேன் தூங்குகின்றேன், நோன்பு நோற்கின்றேன் நோன்பை விடுகின்றேன், பெண்களைத் திருமணம் செய்கின்றேன். யார் என்னுடைய வழிமுறையைப் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல.” (முஸ்லிம்)

உண்மையிலேயே, இத்தோழர்களுடைய நிய்யத் சிறந்ததாக இருந்தது. அதாவது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைவாக எவ்வாறு வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள் என்பதைக் கேட்டறிந்ததும் அவர்களும் அதேபோன்று செய்ய வேண்டும் என ஆசைப்பட்டார்கள். ஆனால், சாப்பிடாமல் இருந்து காலம் முழுவதும் நோன்பு நோற்பது, தூங்காமல் முழு இரவும் நின்று வணங்குவது, பெண்களைத் திருமணம் செய்யாமல் காலம் முழுவதும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது போன்ற அவர்கள் தீர்மானித்த செயல்கள் நபிவழிக்கு முரணாக அமைந்திருந்தன. இதன் காரணமாகவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அத்தோழர்களைக் கண்டித்தார்கள். அவர்களுடைய நிய்யத் நல்லது தானே என்பதற்காக அவர்கள் மௌனமாக இருக்கவில்லை.

மூன்றாவது வகையினர்:

அவர்களுடைய வணக்க வழிபாடுகள் நபிவழிக்கு நேர்பட்டதாக அமைந்திருக்கும். ஆனால், அவர்கள் அவ்வணக்க வழிபாடுகளைச் செய்வதன் நோக்கம் அல்லாஹ்வையன்றி வேறு ஒன்றுக்காக அமைந்திருக்கும். இவர்களைத்தான் முகஸ்துதியுடையவர்கள் என்று கூறப்படும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'நிச்சயமாக மறுமை நாளில் மனிதர்களிலே முதலாவதாக தீர்ப்புச் செய்யப்படும் மனிதன் போர் செய்து ஷஹீதாகியவன் ஆவான். அவனைக் கொண்டு வரப்படும். அவனுக்கு வழங்கப்பட்ட அருட்கொடையை அல்லாஹ் அறிவிப்பான். அவனும் அதனை அறிந்துகொள்வான். பின்பு அல்லாஹ்: 'நீ அந்த அருட்கொடையைக் கொண்டு என்ன அமல் செய்தாய்?” என்று கேட்பான். அதற்கு அந்த மனிதன் 'நான் ஷஹீதாக்கப்படும் வரை உனக்காகப் போர் செய்தேன்” என்று கூறுவான். அப்போது அல்லாஹ்: 'நீ பொய் கூறிவிட்டாய். மாறாக, நீ ஒரு வீரன் என்று கூறப்படுவதற்காகவே போர் செய்தாய்” என்று கூறுவான். பின்பு அவனை முகம் குப்புறமாக இழுத்து நரகத்தில் போடுமாறு ஏவப்படும். பின்பு ஒரு மனிதருக்குத் தீர்ப்பு வழங்கப்படும். அவன் அறிவைக் கற்று அதனை பிறருக்கும் கற்றுக் கொடுத்து குர்ஆனை ஓதியவனாவான். அவனைக் கொண்டு வரப்படும். அல்லாஹ் அவனுடைய அருட்கொடையை அவனுக்கு அறிவிப்பான். அவனும் அதனை அறிந்து கொள்வான். அப்போது அல்லாஹ்: 'அந்த அருட்கொடையைக் கொண்டு நீ என்ன அமல் செய்தாய்?” என்று கேட்பான். அதற்கு அவன்: 'நான் அறிவைக் கற்று அதனைப் பிறருக்கும் கற்றுக் கொடுத்தேன். இன்னும், உனக்காகவே குர்ஆனையும் ஓதினேன்” என்று கூறுவான். பின்பு அல்லாஹ்: 'நீ பொய் கூறிவிட்டாய். மாறாக, நீ அறிவைக் கற்றது நீ ஓர் ஆலிம் என்று கூறப்படுவதற்கேயாகும். நீ குர்ஆனை ஓதியது காரிஃ என்று கூறப்படுவதற்கேயாகும்” என்று கூறுவான். பின்பு அவனை முகம் குப்புறமாக இழுத்து நரகத்தில் போடுமாறு ஏவப்படும். பின்பு ஒரு மனிதருக்குத் தீர்ப்பு வழங்கப்படும். அவனுக்கு அல்லாஹ் வசதியேற்படுத்திக் கொடுத்தான். செல்வத்தின் வகைகளிலிருந்து அல்லாஹ் அவனுக்குக் கொடுத்தான். அவனைக் கொண்டு வரப்படும். அவனுக்கு அல்லாஹ் அவனுடைய அருட்கொடையை அறிவிப்பான். அவனும் அதை அறிந்து கொள்வான். அப்போது அல்லாஹ்: 'நீ அந்த அருட்கொடையைக் கொண்டு என்ன அமல் செய்தாய்?” என்று கேட்பான். அதற்கு அவன்: 'உனக்காக எந்த வழிகளில் செலவளிக்கப்பட வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ அந்த வழிகள் அனைத்திலும் நான் செலவு செய்யாமல் விட்டுவிடவில்லை” என்று அவன் கூறுவான். பின்பு அல்லாஹ்: 'நீ பொய் கூறிவிட்டாய். மாறாக, நீ ஒரு கொடையாளி என்று கூறப்படுவதற்காகவே இவ்வாறு செய்தாய், என்று கூறுவான். பின்பு அவனை முகம் குப்புறமாக இழுத்து நரகத்தில் போடுமாறு ஏவப்படும். (முஸ்லிம்)

இந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்ட மூவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அங்கீகாரத்தைப் பெற்ற செயல்களைத்தான் செய்தார்கள். என்றாலும், அவர்களுடைய எண்ணங்கள் புகழை எதிர்பார்ப்பதாக இருந்தன. எனவே, அவர்கள் புரிந்த அமல்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளவில்லை.

நான்காவது வகையினர்:

இவர்கள் தான் வணக்க வழிபாடுகளை உளத்தூய்மையுடனும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டல் அடிப்படையிலும் நிறைவேற்றியவர்கள். ஏனென்றால், அல்லாஹ் இபாதத்களை உளத்தூய்மை, நபிவழியின் அங்கீகாரம் இன்றி ஏற்றுக் கொள்ள மாட்டான் என்பதை இவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள்.

இவர்கள் தான் 'வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார்” என்ற ஷஹாதாக் கலிமாவை தங்களது வாழ்க்கையில் அமுல்படுத்தியவர்கள். ஏனென்றால், ஷஹாதா கலிமாவிற்கும் இபாதத் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற இரண்டு நிபந்தனைகளுக்கும் தொடர்பு இருக்கின்றது.

-    இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-    அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்