ரியாளுஸ்ஸாலிஹீன் விளக்கவுரை – 10

بسم الله الرحمن الرحيم

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹதீஸின் தொடர்ச்சியில் கூறுகின்றார்கள்: "எவருடைய ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் இருக்கின்றதோ அவருடைய ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்குமாகவே இருக்கும். எவருடைய ஹிஜ்ரத் அவர் அடைந்து கொள்ள நாடும் உலகத்திற்காக வேண்டி அல்லது திருமணம் செய்து கொள்ள நாடும் பெண்ணுக்காக வேண்டி அமைகின்றதோ அவருடைய ஹிஜ்ரத்  அவரால் எதற்காக மேற்கொள்ளப்பட்டதோ அதற்காகவே இருக்கும்."

நிய்யத்திற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜ்ரத்தை உதாரணமாகக் கூறியுள்ளார்கள். ஹிஜ்ரத் பற்றிய சில விளக்கங்களைப் பார்ப்போம்.

ஹிஜ்ரத் என்றால் என்ன?

அரபு மொழியில் "ஹிஜ்ரத்" என்ற வார்த்தைக்கு "விட்டுவிடுதல்" என்ற கருத்தைக் குறிக்கும். மார்க்க அடிப்படையில் "ஹிஜ்ரத்" என்றால் ஒரு மனிதன் குப்ருடைய நாட்டிலிருந்து இஸ்லாமிய நாட்டுக்குப் புறப்படுவதாகும் என்று இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.

உதாரணமாக, ஒரு மனிதர் அமெரிக்காவில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்கிறார். அவருடைய மார்க்கத்தை அந்நாட்டில் அவரால் வெளிப்படுத்த முடியாத போது அவர் அந்நாட்டிலிருந்து இஸ்லாமிய நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்று அங்கு வசிக்கிறார் என்றால் அதனையே ஹிஜ்ரத் என்கிறோம்.

ஹிஜ்ரத்தின் வகைகள்

ஹிஜ்ரத் என்பதற்கு அரபு மொழியில் "விட்டுவிடுதல்" என்ற கருத்து கூறப்படுவதாக நாம் குறிப்பிட்டோம். இக்கருத்தை அடிப்படையாக வைத்து ஹிஜ்ரத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1. ஓர் இடத்தை விட்டுவிடுதல்: உதாரணமாக, பாவமான காரியங்கள் நடைபெறக்கூடிய இடங்களிலிருந்து விலகியிருத்தல்.

2. ஒரு செயலை விட்டுவிடுதல்: உதாரணமாக, அல்லாஹ் தடுத்த பாவமான, மோசமான காரியங்களை விட்டும் விலகியிருத்தல். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "எவருடைய கரத்திலிருந்து ஏனைய முஸ்லிம்கள் ஈடேற்றம் பெற்றிருப்பார்களோ அவரே (உண்மையான) முஸ்லிம் ஆவார். அல்லாஹ் தடுத்தவற்றிலிருந்து விலகியிருப்பவரே (உண்மையான) ஹிஜ்ரத் செய்தவராவார்." (புஹாரி)

3. ஒரு செயலைச் செய்பவரை விட்டுவிடுதல்: உதாரணமாக, பாவங்களைப் பொருட்படுத்தாமல் அவற்றைப் பகிரங்கமாகச் செய்பவரை வெறுத்து, அவரை விட்டும் விலகியிருப்பது. இக்காரியம் மார்க்கத்தில் உள்ள ஓர் அம்சம் என அறிஞர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு அவர்களை வெறுப்பதால் நல்ல பிரதிபலன் கிடைக்குமென்றால் அவர்களை வெறுத்து, அவர்களை விட்டும் விலகியிருக்கலாம்.

இவ்வாறு பாவங்களில் ஈடுபடுவோரை விட்டும் விலகியிருப்பதால் எவ்விதப் பயனும் இருக்காவிடின் அவர்களை வெறுத்திருப்பது ஆகுமாகாது. ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "ஒருவர் தம் சகோதரருடன் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் வெறுத்திருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு மற்றொருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வார். (இவ்வாறு செய்யலாகாது.) ஸலாமை முதலில் ஆரம்பிப்பவர்தாம் இவர்கள் இருவரில் சிறந்தவராவார்." (புஹாரி, முஸ்லிம்)

ஒரு மனிதர் குப்ரில் ஈடுபட்டால் அவரை வெறுத்து, அவரை விட்டும் விலகியிருப்பது அவசியமாகும். அவ்வாறு வெறுத்திருப்பது பயனளித்தாலும், பயனளிக்காவிட்டாலும் சரியே!

ஏதாவது நலவுகள் காணப்படுகின்றபோது பாவங்களில் ஈடுபடுவோரை வெறுத்திருக்கலாம் என்பதற்கான ஆதாரம் தபூக் போரில் கலந்துகொள்ளாமல் பின்வாங்கிய மூன்று நபித்தோழர்களின் சம்பவமாகும். அவர்கள் கஃப் இப்னு மாலிக், ஹிலால் இப்னு உமைய்யா, முராரா இப்னு ரபீஃ ரழியல்லாஹு அன்ஹும் ஆவார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இம்மூவரையும் வெறுத்து, சில காலம் இவர்களை விட்டும் விலகியிருந்தார்கள். ஏனைய முஸ்லிம்களுக்கும் இவ்வாறு இருக்குமாறு கட்டளையிட்டார்கள். இதன் காரணமாக இம்மூவரும் மகத்தான பயனை அடைந்து கொண்டார்கள். அவர்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி, அல்லாஹ்விடம் தவ்பாச் செய்தார்கள். அல்லாஹ்வும் அவர்களுக்கு தவ்பா அளித்தான்.

ஹிஜ்ரத்தின் சிறப்பு

ஹிஜ்ரத் செய்வதனால் அதற்கு முன் நிகழ்ந்த பாவங்கள் மன்னிக்கப்படும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "இஸ்லாம் அதற்கு முன் நிகழ்ந்த பாவங்களை போக்கிவிடும் என்பதை நீ அறியவில்லையா? ஹிஜ்ரத் அதற்கு முன் நிகழ்ந்த பாவங்களை போக்கிவிடும் என்பதை நீ அறியவில்லையா? ஹஜ் அதற்கு முன் நிகழ்ந்த பாவங்களை போக்கிவிடும் என்பதை நீ அறியவில்லையா?" (முஸ்லிம்)

ஹிஜ்ரத்தின் சட்டம்

குப்ருடைய நாட்டில் வசிக்கும் முஸ்லிம்கள் அவர்களது மார்க்கத்தை அந்நாட்டில் வெளிப்படுத்த முடியாத பட்சத்தில் அந்நாட்டிலிருந்து இஸ்லாமிய நாட்டுக்கு ஹிஜ்ரத் செய்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும் என்று இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் கூறுகின்றார்கள். (ஷர்ஹு ஸலாஸதில் உஸூல்)

குப்ருடைய நாட்டுக்குப் பிரயாணம் செய்வதின் சட்டம்

இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் கூறுகின்றார்கள்:

"மூன்று நிபந்தனைகளைக் கொண்டே அன்றி காபிரான நாட்டுக்குப் பிரயாணம் மேற்கொள்ள முடியாது.

1. பிரயாணம் செய்பவரிடத்தில் காபிர்கள் முன்வைக்கும் சந்தேகங்களை முறியடிக்கக்கூடிய அறிவு காணப்பட வேண்டும். ஏனெனில் காபிர்கள், முஸ்லிம்கள் தடுமாற்றமடைய வேண்டும் என்பதற்காக அவர்கள் மீது அவர்களது மார்க்கம், அவர்களது தூதர், அவர்களது வேதம், அவர்களது பண்பாடுகள் பற்றிய சந்தேகங்களை எழுப்புகின்றனர்.

2. பிரயாணம் செய்பவரிடத்தில் மனஇச்சைகளை விட்டும் தன்னைக் காப்பற்றக்கூடிய அளவுக்கு மார்க்கம் இருக்க வேண்டும். எவரிடத்தில் குப்ரிலிருந்தும் மனஇச்சைகளிலிருந்தும் தன்னைக் காப்பற்றக்கூடிய அளவிற்கு மார்க்கம் இல்லையோ அவர் பாவங்களில் மூழ்கியவராக மாறிவிடுவார்.

3. இப்பிரயாணம் மிகவும் அத்தியவசியமான பிரயாணமாக அமைந்திருக்க வேண்டும்." (ஷர்ஹு ரியாளிஸ் ஸாலிஹீன்)

- இன்ஷா அல்லாஹ் தொடரும்.