ரியாளுஸ்ஸாலிஹீன் விளக்கவுரை – 01

بسم الله الرحمن الرحيم

குறிப்பு: பலகத்துறை அத்தார் அஸ்ஸலபிய்யா பள்ளிவாசலில் வாரத்தில் இரு நாட்கள் நடைபெற்று வரும் ரியாளுஸ்ஸாலிஹீன் என்ற நூலுக்கான விளக்கவுரை வகுப்பின் தமிழ் வடிவமே இதுவாகும்.

ரியாளுஸ்ஸாலிஹீன் நூல் பற்றிய குறிப்பு

நூலுடைய பெயர்: ரியாளுஸ்ஸாலிஹீன் மின் கலாமி ஸய்யிதில் முர்ஸலீன்

நூலாசிரியர்: அபூ ஸகரிய்யா யஹ்யா இப்னு ஷரப் அந்நவவீ அத்திமிஷ்கீ

மொத்த ஹதீஸ்கள்: 1896

மொத்த பிரதான தலைப்புக்கள்: 19

மொத்த உபதலைப்புக்கள்: 372

விரிவுரை நூட்கள்:

1. தலீலுல் பாலிஹீன்: இப்னு அல்லான் அஷ்ஷாபிஈ என்பவருக்குரியது. இவர் ஒரு அஷ்அரீ கொள்கையுடையவராக இருந்தார்.

2. ரவ்ளதுல் முத்தகீன்: அப்துல்காதிர் அத்திமிஷ்கீ என்பவருக்குரியது.

3. அல்பத்ஹுல் முபீன்: தாஹா அப்துர்ரஊப் ஸஃத் என்பவருக்குரியது.

4. ஷர்ஹு ரியாளிஸ்ஸாலிஹீன்: முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் என்பவருக்குரியது. நவீன காலத்தில் பிரசித்தி பெற்ற நூலாகாவும் இது காணப்படுகின்றது.

5. நுஸ்ஹதுல் முத்தகீன் ஷர்ஹு ரியாளிஸ்ஸாலிஹீன்: முஹம்மத் அமீன் லுத்பீ என்பவருக்குரியது.

6. பஹ்ஜதுந் நாளிரீன் ஷர்ஹு ரியாளிஸ்ஸாலிஹீன்: ஸலீம் இப்னு ஈத் அல்ஹிலாலீ என்பவருக்குரியது.

7. தத்ரீஸு ரியாளுஸ்ஸாலிஹீன்: பைஸல் இப்னு அப்தில்அஸீஸ் ஆலுமுபாரக்

இமாம் நவவீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பற்றிய குறிப்பு

இவருடைய பெயர் யஹ்யா இப்னு ஷரப் என்பதாகும். இவருடைய இடுகுறிப்பெயர் அபூஸகரிய்யாவாகும். இவர் முஹ்யித்தீன் (மார்க்கத்தை உயிர்ப்பிப்பவர்) என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்டார். ஆனால் இப்புனைப் பெயரை இவர் வெறுப்பவராக இருந்தார்.

இவர் ஹிஜ்ரி 631 முஹர்ரம் மாதம் நவா என்ற இடத்தில் பிறந்தார். நவா என்ற பிரதேசம் டமஸ்கஸ் நகரத்தின் தெற்கில் அமைந்துள்ளது.

இவர் தனது ஊரிலேயே குர்;ஆனைத் திறம்பட ஓதினார். தனது தந்தையுடன் ஹிஜ்ரி 649 இல் டமஸ்கஸ் நகரத்துக்கு வருகை தந்தார். அங்கே அல்மத்ரஸா அர்ரவாஹிய்யாவிலே தங்கி 'அத்தன்பீஹ்' என்ற நூலை நான்கரை மாதத்தில் மனனமிட்டார். 'அல்முஹத்தப்' என்ற நூலின் நான்கில் ஒரு பகுதியை ஏனைய ஏழரை மாதங்களிலும் மனனம் செய்தார். பின்பு ஹிஜ்ரி 651ம் ஆண்டு தனது தந்தையுடன் ஹஜ் செய்தார். மதீனாவில் ஒன்றரை மாதம் தங்கினார்.

அவருடைய தந்தை கூறுகிறார்: 'ஹஜ்ஜுடைய கிரியைகளை முடித்துவிட்டு நவா என்ற பிரதேசத்துக்குச் சென்றதன் பின்பு நாம் டமஸ்கஸ் பிரதேசத்துக்குச் சென்ற போது அல்லாஹ் இவருக்கு - இமாம் நவவீ - அதிகமான அறிவை வழங்கினான்.”

இவர் ஒவ்வொரு நாளும் பன்னிரெண்டு பாடங்களை அவருடைய ஆசிரியர்களிடம் வாசிப்பார். அல்இக்பாலிய்யா, அல்பலகிய்யா, அர்ருக்னிய்யா ஆகிய மத்ரஸாக்களில் இவர் கற்பித்தார்.

இவருடைய ஆசிரியர்கள்: அர்ரளீ இப்னு அல்புர்ஹானீ, அப்துல்அஸீஸ் இப்னு முஹம்மத் அல்அன்ஸாரீ, ஸைனுத்தீன் அப்துத் தாஇம், இமாதுத்தீன் அப்துல்கரீம் இப்னுல் அன்ஸாரீ, கமாலுத்தீன் இஸ்ஹாக் அல்மக்ரிபீ, ஷம்சுத்தீன் அப்துர்ரஹ்மான், அஷ்ஷைஹ் அஹ்மத் அல்மிஸ்ரி, இப்னு மாலிக் ஆகியோர்.

இவருடைய மாணவர்கள்: இப்னுல் அத்தார், அஹ்மத் இப்னு பர்ஹ் அல்இஷ்பீலீ, அபுல்ஹஜ்ஜாஜ் அல்மிஸ்ஸீ ஆகியோர்.

இவர் இவருடைய மரணம் வரைக்கும் அறிவுத்துறைகளிலும் நூட்கள் தொகுக்கின்ற விடயத்திலும் ஈடுபட்டார். மேலும் அதிகமாக நோன்பு, திகர் போன்ற வணக்க வழிபாடுகளிலும் ஈடுபடுவார். நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பவராகவும் இருந்துள்ளார். இவருடைய மரணம் நெருங்குகின்ற வேளையில் இவர் இரவல் வாங்கிய நூட்களை உரியவர்களிடம் திருப்பிக்கொடுத்தார்.

சில நாட்கள் நோய்வாய்யப்பட்டு பின்பு ஹிஜ்ரி 676ம் ஆண்டு ரஜப் மாதத்தில் மரணித்தார். இவர் மரணிக்கும்போது இவருக்கு 45 வயதாக இருந்தது.

இவருடைய நூற்கள்:

1. ஷர்ஹுல் முஹத்தப்

2. மின்ஹாஜுத்தாலிபீன்

3. அல்அத்கார்

4. அல்அர்பஊன் அந்நவவிய்யா

5. ரியாளுஸ்ஸாலிஹீன்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

- அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்