ரமழானில் எஞ்சிய ஈச்சம் பழங்களை என்ன செய்வது?

بسم الله الرحمن الرحيم

கேள்வி: ரமழானில் நோன்பாளிகளுக்கென்று ஈச்சம் பழங்கள் வருகின்றன. ரமழான் மாதம் நிறைவுறுகின்றது ஆனாலும் ஈச்சம் பழங்கள் எஞ்சிக் காணப்படுகின்றன. அத்தகைய ஈச்சம் பழங்கள் வீணாகப் போய்விடும் என்பதை அஞ்சி நோன்பாளிகளல்லாதோருக்கு உண்ணக் கொடுக்க முடியுமா? அல்லது, அவற்றை அறிவைத் தேடும் மாணவர்களுக்குப் பகிர்ந்தளிக்க முடியுமா?

பதில்: நபியவர்கள் கூறினார்கள்: "ஒரு முஸ்லிமின் செல்வம் அவனுடைய உளவிருப்பமின்றி மற்றொருவருக்கு ஹலாலாக மாட்டாது.” (இப்னு ஹிப்பான், அஹ்மத்) சிலவேளை அதனை வழங்கியவர் தன் உளவிருப்பத்தின் அடிப்படையில் வழங்கியிருக்கலாம். அப்படி அவர் தன் உளவிருப்பத்துடன் வழங்கியிருந்தால், அவை நோன்பிருப்போருக்கும் நோன்பிருக்காதோருக்குமாக இருக்கும். மேலும், அவ்வாறு கொடுத்தவர்கள் நோன்புடைய காலங்களில் அவற்றை நோன்பு திறக்க மாத்திரம் பயன்படுத்த வேண்டும், நோன்புடனல்லாதோருக்கு அவற்றை சாப்பிடக் கொடுக்கக்கூடாது என்று நிபந்தனை இட்டிருந்தால் என்ன செய்வது? இப்படியான நிபந்தனையின் பேரில் குறித்த ஈச்சம் பழங்கள் கையளிக்கப்பட்டிருப்பின் அதனை நிறைவேற்றுவது அவசியமாகும். மாற்றமாக, இப்படியான நிபந்தனை ஏதும் விதிக்கப்படதாத போது அவற்றை ரமழானுடைய காலங்களிலும், மீதமானதை ரமழான் அல்லாத காலங்களிலும், அவர்கள் நோன்பாளிகளாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரியே!, அவர்களுக்கு சாப்பிட முடியும். இதனை முன்சென்ற ஹதீஸை அடிப்படையாக வைத்து விளங்கிக் கொள்ளலாம்.

-    வழங்கியவர்: அஷ்ஷெய்க் யஹ்யா அல்ஹஜூரி ஹபிழஹுல்லாஹ் (1422 ஜுமாதால் ஊலா 23 ஞாயிற்றுக் கிழமை)

-    தமிழில்: அபூஹுனைப்